[ சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011, 01:55.24 AM GMT ]
தமிழீழத் தேசியத் தலைவரின் விருப்பை அடைவதற்காக மாவீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்ட போதும் அது தேசியம் சார்ந்தோர் என தம்மை தாமே அடையாளப்படுத்தப்பட்ட நபர்களினால் அடைந்த துன்பம் அளப்பரியது.
நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அதன் செயற்பாட்டை முடக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்ட சிங்கள அரசின் திட்டமிட்ட சதிக்கு துணை போன குழுவினர் நாடு கடந்த அரசின் இரண்டாம் அமர்வின் போது மக்களால் இனங்காணப்பட்டனர். நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களையும், அதன் சபாநாயகர் பொன். பாலராஜன் அவர்களையும் அப்புறப்படுத்தி அதனைக் கைப்பற்ற அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையை பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுதிரண்டு முறியடித்தனர.
இதன்பின் இக் குழு சிறீலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு வருகிறது என்றும், என்ன பாடுபட்டாவது நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை நிறுத்தி விட வேண்டும் என்றும் இது ஒரு குழுவாகச் செயற்பட்டது என்பதும் இனங்காணப்பட்டது.
தேசியத்தின் பெயரால் இக் குழுவிலுள்ளவர்கள் நடாத்தும் இணையத்தளங்கள், பத்திரிகைகள் என்பன நாடு கடந்த அரசை மிகவும் தரக்குறைவான ஒரு பிரச்சாரத்திற்குள் வைத்திருந்தன. நாடு கடந்த அரசின் பிரதமரை நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் ஒப்பிட்டு 23ம் புலிகேசி எனப் பரிகசித்து பல கடிதங்களையும் கட்டுரைகளையும் வரைந்தன.
இதில் கவலையான விடயம் என்னவென்றால் இந்த ஊடகங்கள் அனைத்தும் தமிழீழம் என்ற தனியரசிற்கு உரம் சேர்க்கும் ஊடகங்களாகவே உருவாக்கப்பட்டிருந்தன. இக்குழுக்களின் நேரடி கண்காணிப்பில் அமைப்பினால் துரோகிகள் என இனம் காணப்பட்ட மாற்று இயக்க உறுப்பினர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட பத்திரிகைகளும் இவர்களுக்கு துணையாக செயற்பாட்டில் இறங்கினர்.
இவ்வாறு ஊடகங்களால் மேற்கொள்ளப்பட்ட மலினப் பிரச்சாரங்களை மிஞ்சும் வகையில் இந்த சத்தியப் பிரமாணம் எடுக்காத உறுப்பினர்கள் தங்களின் மின்னஞ்சல்களினூடாக பல விசமப் பிரச்சாரங்களையும், பிரதமர் உருத்திரகுமாரனையும் ஏனைய உறுப்பினர்களையும இலக்கு வைத்து நாடு கடந்த அரசைச் செயலிழக்கச் செய்யும் வகையில் இடம்பெற்றன.
இப் பிரச்சாரங்களை முறியடித்து நாடு கடந்த அரசு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுகிறது. நாடு கடந்த அரசின் பிரதமரின் பாதுகாப்பில் அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது. சூடான் சுதந்திர தேசமாகும் நிகழ்விற்கு நாடு கடந்த அரசு உத்தியோக பூர்வ அழைப்பை பெறுகிறது என்ற செய்திகள் தமிழீழ மக்களின் காதுகளில் தேனாகப் பாயத் தொடங்கின.
யார், யாரையெல்லாம் புலம்பெயர்ந்த மக்கள் தமிழீழம் காண்பதற்காக தெரிவு செய்தார்களோ அவர்களே நாடு கடந்த அரசிற்கு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து செயலிழக்க வைக்க முயன்ற நம்பிக்கைத் துரோகத்தைத் தாண்டி நாடு கடந்த அரசு பயணித்துக் கொண்டிருந்தது.
உலகமே வியக்கும் வண்ணம் இந்தியாவிலும் நாடு கடந்த அரசின் பணியை தமிழக உறவுகள் ஆரம்பித்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என எமது மக்களிற்கு எடுத்துக் கூறின.
எந்த இந்தியாவை எட்டாக் கணியாக நினைத்தோமோ அதே இந்திய மண்ணிலுள்ள எமது தமிழக உறவுகள் நாடு கடந்த அரச செயற்பாட்டை தடைகளையும் மீறி ஆரம்பித்தன.
இப்படியாக நாடு கடந்த அரசு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிற ஒரு நேரத்தில் தமிழீழ அரசைக் கவிழ்ப்பதற்காக செயற்பட்ட உறுப்பினர்களை சத்தியப்பிரமாணம் செய்ய நாடு கடந்த அரசின் சபாநாயகர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
உண்மையிலேயே இதனை வரவேற்க விரும்பினாலும் அதற்கும் மேலாக எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய ஒரு பணியை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் எங்கள் இனம் மீண்டும் எழுந்திருக்காதா என நினைத்திருந்த எமது மக்களிற்கு அடிவாணின் விடிவெள்ளியாகப் பிரசவித்த நாடுகடந்த அரசை சாம, தான, தண்ட, பேத முறைகளால் இல்லாது செய்ய முற்பட்ட இவர்கள் இனியும் உங்களது செயற்பாடுகளை மட்டுப்படுத்தவும், மட்டம் தட்டவும் தானே முயல்வார்கள்? இவர்களை உள்ளே எடுப்பதால் உங்களின் செயற்பாடுகள் மேலும் எதிர்ப்புக்களையும் தடைகளையும் தானே சந்திக்கப் போகின்றன?
நாடு கடந்த அரசிற்கு எதிரான இந்தச் பிரசாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டது மாதிரியல்லாமல் ஒரு குழு இவர்களை பின்னாலிருந்து ஆட்டுவித்ததை பலருமே கண்டோம்.
தேசியத்தின் பெயரிலான ஊடகங்களும் இந்த விசமப் பிரச்சாரத்தை முன்னெடுத்து தமிழீழக் குழந்தையை கருவறையிலே கொல்ல முயன்றதையும் தரிசித்தோம்.
அதே குழு இனியும் இவர்களைப் பாவித்து நாடு கடந்த அரசை செயலாற்றாமல் தடுக்காது என்பதற்கு என்ன உறுதி?
சூடான், லிபியா விவகாரங்களில் குரல் கொடுப்பதோடு, தேசத்தாய் பார்வதியம்மாவின் மரணத்தின் போதும் மக்களிற்கு வழிகாட்டியாக விளங்கி திடமே செயலாற்றும் நாடு கடந்த அரசையும் அதன் பிரதமரையும் இல்லாது செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள் எவ்வாறு அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு உதவுவார்கள்?
தயாள சிந்தனை, தயாள சிந்தனை, தாராள மனது, தேசியத் தலைவரை உளமாற ஏற்றதனால் ஏற்பட்ட நேர்த்தியான வழிகாட்டல் என்பவற்றைக் கொண்டுள்ள பிரதமரும், சபாநாயகரும் இவர்களை இருகரம் நீட்டி உள்ளே அழைத்தாலும் அவர்கள் கொண்டுள்ளது சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலே என்பதை எந்தவித சந்தேகமில்லாமல் நிரூபிக்கும் மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகளிற்கான பதில் இவர்களை உள்ளே விட்டால் நாடு கடந்த அரசு மரணித்துப் போகும் அபாயம் உடனேயே ஏற்படும் என்பதே.
ஒரு நன்னீர்க் குளத்தைப் பாழாக்க ஒரு துளி விசம் போதும். எனவே நன்னீர்க் குளமாக உள்ள நாடு கடந்த அரசு இவர்களை உள்வாங்குவதன் மூலம் தனது செயற்பாடுகளில் மண்ணையள்ளிப் போடும் செயற்பாட்டிற்குள் சிக்குண்டு போகிறது என்பதை மக்கள் உடனடியாக கிரகித்து இந்த முயற்சித்துக் தடை போட வேண்டும்.
பாவலன்
http://thamilarasu.com/
No comments:
Post a Comment