Thursday, February 24, 2011

இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடுமாறு போராட்டம்: பழ.நெடுமாறன் அறிவிப்பு

[ வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011, 01:13.51 PM GMT ]
விடுதலைப் புலிகளின் தாயார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை மூடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பார்வதி அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் சிங்கள இராணுவம் புகுந்து சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த சிதையில் வைத்தும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பகைவர்களாயினும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது நாகரிக மக்களின் கடமை. ஆனால் இலங்கையில் சிங்கள இராணுவத்தினர் மாவீரர்களின் நினைவிடங்களை இடித்துத் தள்ளி அட்டூழியம் புரிந்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக பார்வதி அம்மையாரின் தகனம் நடைபெற்ற சிதையை இழிவுபடுத்தியிருக்கிறார்கள்.

மனிதநேயமும் நாகரீகமும் அற்ற இந்த இழிசெயலைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் மயிலை டி.டி.கே. சாலையில் உள்ள சிங்கள துணைத் தூதரகத்தை உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பெப்ரவரி 26ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும்.

மயிலை லஸ் சாலையில் உள்ள நாகேசுவரராவ் பூங்கா அருகே அணிவகுத்து அங்கிருந்து ஊர்வலமாக சிங்கள துணைத் தூதரக அலுவகத்துக்கு செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment