Thursday, March 03, 2011

மானுருவிக் கிராமத்தில் முக்கிய முன்னாள் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை! கொலைசெய்யப்பட்டும் புதைப்பு!!


முல்லைத்தீவு மாவட்டம் மானுருவிக் கிராமத்தில் முக்கிய முன்னாள் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வன்னிப் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய போராளிகள் தொடர்பிலான எந்தத் தகவல்களும் வெளிவராத நிலையில், முல்லைத்தீவு மானுருவிக் காட்டுப் பகுதியில் சித்திரவதை முகாம் ஒன்று உள்ளமை தொடர்பில் இராணுவச் சிப்பாய் ஒருவரின் ஊடாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

மானுருவிக்குச் செல்லும் பாதையை அண்மித்ததாக பாரிய இராணுவ முகாம் ஒன்று உள்ளதாகத் தெரிவித்துள்ள இராணுவச் சிப்பாய் குறித்த முகாமில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணையின் போது கொல்லப்படும் புலிகளின் உறுப்பினர்கள் அதே முகாமை அண்மித்த காட்டுப் பகுதியிலேயே புதைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒட்டுசுட்டானில் இருந்து முல்லைத்தீவு செல்லும் வீதியில் கூழாமுறிப்புக் கிராமத்திற்கு முன்பாக மேற்குப்புறமாக மானுருவிக் கிராமத்திற்குச் செல்லும் பாதை உள்ளது.

பிரதான வீதியில் இருந்து மானுருவிக் கிராமத்திற்குச் செல்லும் வீதிச் சந்திப் பகுதியில் நாள் தோறும் 10ற்கும் மேற்பட்ட இராணுவப் புலனாய்வாளர்கள் சாதாரண உடையுடன் வாகனம் ஒன்றில் தரித்து நிற்பதை அவதானிக்க முடிவதாக அந்தப் பகுதிஊடாகப் பயணிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment