Saturday, March 05, 2011

யுத்த நீதிமன்றத்திற்கு எம்மைக் கொண்டு செல்ல எமது அரசாங்கம் செய்த குற்றம் என்ன?-ஜனாதிபதி


யுத்த நீதிமன்றத்திற்கு எம்மைக் கொண்டு செல்ல வேண்டுமெனக் கூறுகின்றனர். எம்மை ஏதாவதொரு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒழுங்குமுறை உள்ளது. இருந்த போதிலும் எமது அரசாங்கம் செய்த குற்றம் என்ன? இவ்வாறு அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி  மேற்கண்டவாறு கூறினார்.
இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அமெரிக்க செனற் சபையில் எம்மை யுத்தக்குற்ற நீதிமன்றிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென பிரேரணை கொண்டு வந்துள்ளனர். நான் செய்த குற்றம் என்ன? புலிப் பயங்கரவாதத்தை ஒழித்தது குற்றமா? துண்டாடப்பட்டிருந்த நாட்டை ஒன்றிணைத்தது தவறா? நாட்டில் சமத்துவத்தையும் அச்சம் பீதியின்றி வாழக்கூடிய சூழலையும் ஏற்படுத்தியது தவறா?
இந்த விடயங்கள் தொடர்பில் இவர்கள் இன்று பாரிய சத்தமிடுகின்றனர்.  மனித உரிமைகள் மீறப்பட்டதாம். யாருடைய மனித உரிமை மீறப்பட்டது? எங்களுடைய மனித உரிமை மீறப்பட்டுள்ளது.
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கிலாந்து சென்று புலிகளுடன் சேர்ந்து விமான நிலையத்திற்குள் என்னால் செல்ல முடியாது போனது. இப்படி சிலர் இன்று முயற்சிக்கின்றனர். என்று ஜனாதிபதி கூறினார்.
எதிர்க்கட்சியினர் தேவையற்ற முறையில் எம்மை உலகின் முன் காட்டிக் கொடுக்கின்றார்கள். நாட்டு மக்கள் அவர்களை ஒதுக்கியுள்ளதால் அவர்களால் நாட்டுக்குள் நேரடியாக செயற்பட முடியாதிருக்கின்றது. அதனாலேயே அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.
ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய ஜனாதிபதித் தேர்தல் - பொதுத் தேர்தல் நடைபெற நீண்ட காலமுள்ளது. அதுவரைக்கும் ஆட்சிலிருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப எதிரணியினர் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment