Saturday, March 05, 2011

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் அன்னை பார்வதியம்மாவுக்கு மலேசியாவில் அஞ்சலி

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அன்னை தமிழீழத் தேசியத் தாய் வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்களுக்கு மலேசியத் தமிழீழ உணர்வாளர்கள் அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நிகழ்வு நேற்று மாலை (04.03.2011) கோலாலம்பூர் சோமா அரங்கத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
நேற்று மாலை (04.03.2011) மணி 7.15 அளவில் ஆரம்பமான இவ்வஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடரினை சுவாராம் தலைவரும் செம்பருத்தி ஆசிரியருமான வழக்கறிஞர் கா.ஆறுமுகம் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை நிகழ்வை தலைமையேற்று நடாத்திய வழக்கறிஞர் சி.பசுபதி ஏற்றிவைத்தார்.
அதைத்தொடர்ந்து இதுவரை காலமும் போரினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காகவும், தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பார்வதியம்மாளின் திருவுருவப்படத்திற்கு நிகழ்வில் கலந்துகொண்டவர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது அத்துடன் அன்னை பார்வதியம்மாளின் நினைவுப் பாடல்களும் ஒலியேற்றப்பட்டன.
செம்பருத்தி குடும்பம் ஏற்பாடு செய்திருந்த இவ்வஞ்சலி நிகழ்வில் வழக்கறிஞர் பசுபதி, வழக்கறிஞர் ஆறுமுகம் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் பார்வதியம்மாள் அவர்களுக்கு நினைவுரையாற்றினர்.
சுமார் நூற்றுக்கு மேற்பட்ட தமிழீழ உணர்வாளர்கள் கலந்துகொண்ட இவ்வஞ்சலி நிகழ்வு மாலை மணி 9 அளவில் “தலைமகனே எம் பிரபாகரனே” என்ற தமிழீழப் பாடலுடன் இனிதே நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment