Monday, March 21, 2011

இந்திய அரசின் வீடுகளும் இல்லை, இலங்கை அரசின் வீடமைப்புக் கடனும் இலலை: கிளிநொச்சி மக்களின் அவல வாழ்வு!


கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுவந்த வீட்டுக் கடன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களின் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், கடன்பெறுவதற்காகக் காத்திருந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஏமாற்றமடைந்துள்ளன.

இருப்பிட வசதியின்றி அல்லல்படும் தங்களது பரிதாப நிலையைக் கருத்திற் கொண்டு கடன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களைத் தொடர்ந்து வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியினால் வீடுகளை அமைக்கவோ திருத்தவோ முடியாமல் கஷ்டப்பட்ட மக்களுக்கு கைகொடுத்து உதவ முன்வந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இதுவரை காலமும் இரு பிணையாளிகளுடன் கடன் வழங்கி வந்தது.

கடன் வழங்கும் திட்டத்தை இலகுவாக்கும் நோக்குடன் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் எடுத்த நடவடிக்கையினால் தற்பொழுது ஒரு பிணையாளியுடன் தனியாருக்கு 3 இலட்சம், அரச ஊழியர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும் கடனாக வழங்கப்பட்டு வருகின்றது.இதனால், கடன் பெறுவோரின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருந்தது.

இந்த நிலையில், கிளிநொச்சியிலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கடன் வழங்குவதற்காக விநியோகிக்கப்பட்டு வந்த விண்ணப்பப் படிவங்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment