Monday, May 23, 2011

நிராகரிக்கப்பட்டது கர்நாடகா கவர்ணரின் சிபாரிசு!


கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரிய கவர்னர் பரத்வாஜின் சிபாரிசை, மத்திய அரசு நிராகரித்துள்ளது.கர்நாடகாவில், கடந்த அக்டோபரில், முதல்வர் எடியூரப்பா அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரிய போது, அவரை எதிர்த்து, 11 பா.ஜ., மற்றும் 5 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், கட்சி தாவல் தடைச்சட்டத்தின் அடிப்படையில், ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே, 16 எம்.எல்.ஏ.,க்களையும் சபாநாயகர் போப்பய்யா டிஸ்மிஸ் செய்தார்.

இதை எதிர்த்து 16 பேரும், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். "சபாநாயகர் செய்தது சரியே' என, ஐகோர்ட் தீர்ப்பளித்தது.இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

"சபாநாயகர் போப்பய்யா, அரசியல் சட்ட விதிகளை மீறி நடந்துள்ளார். எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்தது செல்லாது' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசை டிஸ்மிஸ் செய்யும்படி மாநில காங்கிரஸ் கட்சி கோரியது. கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி கவர்னர் பரத்வாஜ், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

பரத்வாஜின் இந்த கடிதம் குறித்து முடிவு செய்வதற்காக, மத்திய அரசியல் விவகாரங்களுக்கான காபினட் கமிட்டி கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், கவர்னரின் சிபாரிசை நிராகரிக்க முடிவு செய்யப்பட்டது. முதல்வர் எடியூரப்பா போதுமான எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளதாக, ஜனாதிபதியிடம் தெரிவித்ததால், கவர்னரின் சிபாரிசை நிராகரிக்க முடிவு செய்ததாக, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

இதுகுறித்து சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில், "" கர்நாடக அரசுக்கு போதிய ஆதரவு உள்ள நிலையில், கவர்னர் பரத்வாஜின் சிபாரிசு குறித்து தீவிர விவாதம் நடந்தது.

இறுதியில், சிபாரிசை நிராகரிக்க, முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, உள்துறை அமைச்சகம் சார்பில், கர்நாடக அரசுக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

காபினட் கூட்டம் துவங்குவதற்கு முன், கவர்னரின் சிபாரிசை நிராகரிக்குமாறு, பா.ஜ., தரப்பில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்பட்டது. முதல்வர் எடியூரப்பாவும் இது தொடர்பாக, பிரதமர் மன்மோகனிடம் முறையிட்டார்.

மேலும், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய அரசு மற்றும் கர்நாடக கவர்னருக்கு எதிராக, நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என, பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment