Saturday, May 21, 2011

எம்மை நாமே ஆளும் உரிமை கிடைக்கும் வரை போராடுவோம்

எம்மை நாமே ஆளும் உரிமை கிடைக்கும் வரை போராடுவோம்; உடுவிலில் மாவை நேற்றுச் சூளுரை
பிரசுரித்தவர்: Sukkran May 21, 2011Add a comment
மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து எம்மை நாமே ஆளும் உரிமையை வெல்லும் வரை தமிழர்களின் போராட்டம் தொடரும் என்று சூளுரைத்துள்ளார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.


உடுவிலில் நேற்று உரையாற்றிய அவர், இலங்கையில் நடந்து வந்த ஆயுதப் போர் முடிந்து விட்டாலும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தார். அமைச்சர்களின் வருகைக்காக நீண்டகாலமாகக் காத்துக் கிடந்த உடுவில் பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டடம் நேற்றுத் திறந்துவைக்கப்பட்டது. இந்தக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு 50 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன கட்டடத்தை திறந்துவைத்து பொதுமக்கள் பாவனைக்கு அர்ப்பணித்தார்.

திறப்பு விழாவின் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சற்று உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். பொதுமக்களால் ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசவைபவங்களிலும் அபிவிருத்திக் கூட்டங்களிலும் முக்கிய கலந்துரையாடல்களிலும் சுதந்திரமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையும் கௌரவமும் மறுக்கப்பட்டால் அங்கு உண்மையான ஜனநாயகம் மதிக்கப்படுவதாக கருதமுடியாது என்று சீறினார் மாவை.

“அன்று இங்கு வரும் அமைச்சர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி பிடித்து கடும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தான் நாங்கள். போர் ஓய்ந்துவிட்டதாகக் கூறலாம். ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் ஓயவில்லை. ஜனநாயக வழியில் தமிழ்மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தை தொடர்கின்றோம். ஏனைய பிரதேச, ஏனைய இன மக்களைப் போன்று நாங்களும் கௌரவமாக வாழவேண்டும். எங்களை நாங்களே ஆளும் நிலை உருவாகவேண்டும். அதுவே எங்கள் இலட்சியம்” என்று சூளுரைத்தார் அவர்.அமைச்சுப் பதவிகளுக்காவோ, சுயலாபத்துக்காகவோ அரசியல் போராட்டம் நடத்தவில்லை என்றும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
My kathiravannews.
மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

'தேசியத் தலைவரின் எண்ணக்கதிர்'

No comments:

Post a Comment