Sunday, May 29, 2011

யுத்த வெற்றி அணி வகுப்பிலிருந்து தமிழ் பொலிஸார் திடீர் நீக்கம்


policeயாழ்நகர் நிருபர் : யுத்த வெற்றி விழாவின் பொலிஸ் அணி வகுப்பிற்கென்று யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தமிழ்ப் பொலிஸார் "தமிழர்' என்ற காரணத்தால் அணி வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடித்த இரண்டாம் வருட யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

இதில் இடம்பெறவுள்ள பொலிஸ் அணிவகுப்பிற்கென யாழ்ப்பாணத்திலிருந்தும் தமிழ்ப் பொலிஸார் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து பொலிஸிற்கு தெரிவு செய்யப்பட்ட 5 பெண் பொலிஸார் உட்பட 26 தமிழர்களும் மலையகத்தைச் சேர்ந்த இரு தமிழர்களுமாக 28 தமிழ்ப் பொலிஸாரே கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த அணி வகுப்பு பயிற்சிக்காக இம்மாதம் 14 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை களுத்துறை விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் இவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. எனினும் இவர்கள் திடீரென்று பொலிஸ் அணிவகுப்புப் பிரிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில், காலி முகத்திடலில் இடம்பெறும் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களின் போது பொலிஸ் அணிவகுப்பில் பங்குபற்றுவதற்காகக் கடந்த மாதம் 28 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 13 ஆம் திகதி வரை காங்கேசன்துறையில் எமக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
பின்னர் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து களுத்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். கொழும்பில் 16 ஆம் திகதியிலிருந்து 24 ஆம் திகதி வரை எமக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

நாளொன்றிற்கு 3 தடவை எமக்கு பயற்சிகள் வழங்கப்பட்டன . ஒரு பயிற்சிக்காக 4 மணித்தியாலங்கள் நாம் காத்திருக்க வேண்டியிருந்தது. இவ்வாறு கடந்த 24 ஆம் திகதியும் பயிற்சிகளுக்காக நாம் வழமைபோல் சென்றிருந்தோம். 25 ஆம் திகதி பொலிஸ் உயர் அதிகாரிகளின் உணவகத்திற்கு அணிவகுப்பில் பங்கு கொள்ளும் சகல பொலிஸாரும் தேசிய அடையாள அட்டை பொலிஸ் அடையாள அட்டையுடன் அழைக்கப்பட்டோம்.

பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தமிழ்ப் பொலிஸார் மாத்திரம் தனியாகப் பிரிக்கப்பட்டோம். சிங்களப் பொலிஸார் வெளியே போக அனுமதிக்கப்பட்ட பின்னர் எமக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் சோதனை செய்யப்பட்டன.

கடந்த 18 ஆம் திகதி எமக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்ட போது அதன் உள்ளே இருந்த குண்டுகள் மற்றும் "கோல்ப்' என்பன கழற்றப்பட்ட பின்னரே வழங்கப்பட்டன. அவற்றை மீண்டும் சோதனை செய்த பின்னர் எம்மிடமிருந்து அவற்றை வாங்கிக் கொண்டு எம்மை அனுப்பி விட்டார்கள். அதன் பின்னர் எங்களுடைய இடத்திற்கு வேறு சிங்களப் பொலிஸார் இணைக்கப்பட்டு 25,26 ஆம் திகதிகளில் அவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டது. எனினும் தாங்கள் பயிற்சிக்கு அழைக்கப்படவில்லை என்றும் அணிவகுப்பு பிரிவில் சேர்க்கப்படவில்லையென்றும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment