மட்டக்களப்பு நிருபர் : மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவதுடன் அவுஸ்திரேலியாவில் தமிழை வளர்ப்பதற்கு அளப்பரிய சேவையாற்றி வரும் சட்டத்தரணி சு.ஸ்ரீகந்தராசா எழுதிய "சங்க காலமும் சங்க இலக்கியங்களும்'நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் செங்கதிர் இலக்கிய வட்டத் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
அவுஸ்திரேலியாவில் பல தமிழ் இலக்கிய நூல்களை வெளியிட்டு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் இவர் எழுதிய இந்நூல் அவரது சொந்த இடமான மட்டக்களப்பில் முக்கிய இலக்கியவாதிகள்,படைப்பாளிகள்,இலக்கிய ஆர்வலர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.நூலாசிரியர் இவ்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதுடன் பிரதம விருந்தினராக முன்னாள் கலாசார உத்தியோகஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய வரலாற்றாசிரியர் செல்வி.க.தங்கேஸ்வரி கலந்து கொண்டார்.
இதன்போது நூல் அறிமுக உரையினை மூத்த எழுத்தாளர் தமிழ் வித்தகர் அன்புமணி நிகழ்த்தியதுடன் விமர்சன உரையினை முன்னாள் கலாசார உதவிப் பணிப்பாளர் எஸ்.எதிர்மன்னசிங்கம் நிகழ்த்தினார்.நூல் வெளியீட்டினைத் தொடர்ந்து நூலாசிரியரை விழாவில் கலந்து கொண்ட படைப்பாளிகள்,இலக்கியவாதிகள் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து கௌரவித்தனர். மட்டக்களப்பு பொது நூலக வாசகர் வட்டத்தின் அனுசரணையுடன் செங்கதிர் இலக்கிய வட்டத்தினால் இவ்வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source:thinakkural
No comments:
Post a Comment