கடந்த வாரம் பாதுகாப்புச் சபைக்கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் போது பாதுகாப்புச் செயலாளர், சட்டமா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு அவசரகாலச் சட்டத்தை விரைவாக நீக்குவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட்டிருப்பதோடு பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதால் அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அரசாங்கம் கருதுவதால் பாதுகாப்புச் சபையில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது.
இதேவேளை, இலங்கையில் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் இருப்பது தொடர்பாக சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் கடும் விமர்சனத்தைத் தெரிவித்து வருகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நாளை 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் பதிவுகள் தொடர்பாக பேரவையின் கவனத்திற்குக் கொண்டுவருமாறு அமெரிக்கா உட்பட மேற்குலக
நாடுகளுக்கு மனித உரிமைக் குழுக்கள் அழுத்தம் கொடுத்துவருகின்றன.
அதேசமயம் அண்டைய நாடான இந்தியாவும் அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டாமென்ற தொனியில் கொழும்பை வலியுறுத்தியிருந்ததுடன், நல்லிணக்க நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் கேட்டிருந்தது. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த கருத்துகளை இந்திய அரசு தெரிவித்திருந்தமை கூட்டறிக்கையின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர் குழுவானது யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போதான உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கு சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு செயலாளர் நாயகத்திற்கு சிபாரிசு செய்திருந்தது. ஆனால், இந்த விடயமானது சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் அல்லது பொதுச் சபை, பாதுகாப்புச் சபை, மனித உரிமைகள் பேரவை போன்ற அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பொன்றின் அங்கீகாரத்துடனேயே மேற்கொள்ள முடியுமென ஐ.நா. செயலாளர் நாயகம் கூறியிருந்தார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விமர்சனங்களுக்கு நல்லிணக்க ஆணைக்குழு பதிலாக அமையுமென கொழும்பு கூறிவந்துள்ள நிலையில் அதனை ஏற்றுக்கொள்வதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மறுத்துவருகின்றன. ஐ.நா. நிபுணர் குழுவும் சர்வதேச தரத்திற்கு இந்த ஆணைக்குழு இல்லையென குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் உள்ளூர் பொறிமுறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு துரிதமாக மீறல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பிக்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்தின் கவலைகளையும் விசனங்களையும் அகற்றும் நோக்கிலேயே அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்த அரசு தீர்மானத்திற்கு வந்திருப்பதாகத் தென்படுகிறது.
source:thinakkural
No comments:
Post a Comment