Friday, May 06, 2011

கே.பி புதிய அவதார்


மே 18 இற்குப் பின்னர் புலிகளின் புதிய தலைவராக தன்னை அறிவித்திருந்த கே.பி என்கிற குமரன் பத்மநாதனை இத்தனை நாளும் பஞ்சணை மெத்தையில் வைத்து, பாலூட்டி, சீராட்டி வருவதன் காரண காரியத்தை ஒருமாதிரி அரசு போட்டுடைத்திருக்கின்றது.
ஐ.நா நிபுணர் குழு அரசு மீது அள்ளி வீசியிருக்கும் குற்றச்சாட்டுக்களையெல்லாம் நிர்மூலமாக்கும் அஸ்திரமாகக் கே.பியை அரசு களமிறக்கப்போவதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல செய்தியாளர் மாநாட்டில் பிளந்துகட்டியிருக்கிறார்.  போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளே மக்களைக் கொன்றார்கள். அரசபடைகள் ஒரு பொதுமகனைக் கூடத் தப்பித்தவறியும் கொல்லவேயில்லை என்று தெருத் தெருவாகச் சென்று,  உச்சஸ்தாயியில் அலறுகின்ற கே.பியை இனிமேல் காணும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்கலாம். கே.பி என்ற மனிதன் ஓர் அதிசாகசக் காரனாகவே ஆரம்பத்தில் தமிழ்மக்களிடையே அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
புலிகளுக்கான வெளிநாட்டுத் தொடர்புகள், நிதிசேகரிப்பு, ஆயுதக் கொள்வனவு என்பவற்றை உலகநாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு செய்து முடிக்கின்ற அசகாயசுரனாகவே அவர் அறியப்பட்டிருந்தார். எனினும் பிறகு புலிகள் அமைப்பின் விஸ்வரூப வளர்ச்சி, புலம்பெயர் நாடுகளில் அவர்களின் புதிய  நிர்வாக இயந்திரச் செயற்பாடுகள் என்பன கே.பியின் பெயரை மறக்கடிக்கச் செய்தன. கே.பியின் வாக்கு மூலத்தின் படி புலிகளால் கே.பியின் “காற்றுக் குறைக்கப்பட்டிருந்தது”. (புலிகள் அமைப்பில் உயர்நிலையில் இருந்த ஒருவரிடம் இருந்து அதிகாரங்கள் அகற்றப்படுவதை “காற்றுக் குறைத்தல்” என்ற சொற்றொடர் குறிக்கும்) எனினும் போர் மிகத்தீவிரமாக மையங்கொண்டு, வன்னியின் கழுத்தை இறுக்கிக்கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் கே.பியின் பெயர் அடிபடத்தொடங்கியது. புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவராக கே.பி புலிகளால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக கே.பியால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதக்கப்பல்களை இலங்கைக் கடற்படை வெகு எளிதாகக் கண்டறிந்து அழித்தது.
சர்வதேச ரீதியில் தொடர்ச்சியான ஜனநாயக வழிமுறையிலான போராட்டங்கள் என்றுமில்லாத வகையில் முன்னெடுக்கப்பட்ட போதும் உரிய வகையில் வெற்றிபெறவில்லை. இந்தப் போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டதாக அல்லாமல் புலிக்கொடிகளை ஏந்தியபடி தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு சார்ந்தாக இருப்பதாக சர்வதேசம் கருதியதே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது.
கடைசியாக எல்லாம் முடிந்துபோன பின்னர் போரின் இறுதிக்கணங்களில் “புலிகள் நிபந்தனையற்று தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்கின்றனர்” என்ற அறிவிப்பை கே.பி விடுத்தார். எனினும் தொடர்ந்து வந்த நாள்களில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். இலங்கை அரசு அறிவித்த கையோடு அதற்கு மறுத்தான் அடித்து  தலைவர் இருக்கிறாரா, இல்லையா என இன்று வரை நீள்கின்ற சர்ச்சைக்கு வழிவகுத்தவரே கே.பிதான்.
“இதுதான் புலிகளின் தலைவருடைய உடல்” என இலங்கையரசு தொலைக் காட்சிகளில் காட்டியபோதும் கூட தன்நிலையில் விடாப்பிடியாக இருந்த கே.பி, பின் திடீரென ஒருநாள் “பிரபாகரன் இறந்தது உண்மைதான்! இனி மேல் இயக்கத்தின் புதிய தலைவர் நான் தான்” என்ற  அதிரடி அறிவிப்பை இணையங்களினூடாகப் பரவவிட்டார்.
“தலைவர் நலமாக பாதுகாப்பாக இருக்கிறார். சற்று முன்னர்தான் அவருடன் உரையாடினேன்” என்று சொல்லிக் கொண்டிருந்த கே.பியின் இந்த திடீர் பல்டி பெரும் குழப்பத்தை தமிழ்மக்களிடம் உண்டு பண்ணியது. புலம்பெயர் நாடுகளில் இருந்த மக்களும், புலிகளின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் தலைவர் இருக்கிறார் என்ற கட்சியாகவும், இறந்துவிட்டார் என்ற இன்னொரு குழுவாகவும் இரு கூறுகளாகப் பிரியும் நிலை கே.பியின் இந்த அறிவிப்பாலேயே எழுந்தது.அதன் பின்னர் இணையங்களில் அறிக்கைகள் வாயிலாக மக்களுக்குத் தன் நிலையை விளக்கிவந்த கே.பி எவருமே எதிர்பாராத வகையில் இலங்கைப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கை கூட தமிழ்மக் களிடையே பல சந்தேகங்களைத் தோற்று வித்தது. அதுநாள்வரை தன்னுடைய புகைப்படங்களைக் கூட வெளியிடாது முகம் மறைத்தபடி வாழ்ந்த, உலகம் சுற்றும் வாலிபனாக எல்லா இடங்களிலும் காற்றுப்போல புகுந்து விளையாடி, புலிகளுக்குத் தேவையான ஆயுதங்களை அனுப்பி வைத்துக் கொண்டிருந்த போது, இன்ரபோல் பொலிஸாராலேயே கைது செய்யப்படமுடியாத கே.பியை இலங்கையின் புலனாய்வுத்துறை வெளிநாடு சென்று கைது செய்துவந்தமை பலரது’ புருவங்களையும் நெளியச் செய்தது.
அதுவும் யுத்தம் முடிந்த பின்னர், தன்னையே புலிகளின் புதிய தலைவராக கே.பி. பிரகடனம் செய்த பின்னர் , இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் “கோழியைப் பிடிப்பது போல’ வெகு சுலபமாகக் கைது செய்யுமளவுக்குத் தன்னுடைய அசைவுகள், தொடர்புகள் என்பவற்றை அவர் பேணிவந்தாரா என்ற வினாவும் எழுந்தது. தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் அந்த வினாக்குறியை இன்னும் பெரிதாக்கின. “எம்முடைய முக்கியமான தளபதிகளை நயவஞ்சகமாகக் கொன்றுவிட்டார்கள்” என எந்த அரசை கே.பி சாடினாரோ அதே அரசின் மதிப்பார்ந்த விருந்தாளியாக்கப்பட்டார். புலிகளுக்கு சாப்பாடு கொடுத்தவர்கள் கூட சித்திரவதை செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கையில், புலிகளின் புதிய தலைவரான கே.பிக்கு இராஜ உபசாரம் செய்யப்பட்டது. இலங்கை அரசை குறிப்பாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜ பக்ஷவை புகழ்ந்து தள்ளும், அதே வேளை புலிகளையும் குற்றம் சொல்லாத (ஆனால் புலிகளின் வெளிநாட்டுக் கிளைப் பொறுப்பாளர்களே தோல்விக்கு காரணம் என்று கூறுகின்ற) கருத்துக்களை கே.பி முன்வைத்தார்.அவரது புகழ்மாலைகளுக்குப் பிரதியு பகாரமாக, “நோர்டோ” என்னும் தன்னார்வத்தொண்டு நிறுவனம் ஒன்றை அமைத்துச் செயற்பட கே.பிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கும், வன்னிக்கும் சொல்லாமல் கொள்ளாமல் தன் பரிவாரங்கள் சகிதம் கே.பி வந்து போனார். வடமாகாண சபைத்தேர்தலின் போது அரசு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி நிறுத்தப்படவுள்ளார் என்றும் ஊகங்கள் எழுந்தன. அதன் பிறகும் கே.பியின் அரச விசுவாசம் தொடந்தது.புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் கட்டமைப்பைத் தகர்ப்பதற்காக தனக்கு ஆதரவான புலம்பெயர் சக்திகளை அரசின் விசுவாசிகளாக்கி, புலம்பெயர் மக்களைக் கூறாக்கும் பணியைத் தன் கையில் எடுத்தார். இப்போது ஐ.நா நிபு ணர் குழுவின் அறிக்கை வெளிவந்தவுடன் அதில் அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களைத் தவிடு பொடியாக்குவதற்காக கே.பியை பயன்படுத்தவுள்ளதாக அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது.எனவே எல்லாக் குற்றங்களும் புலி களால் மட்டுமே புரியப்பட்டதாகக் கே.பி தன் “பிளேட்டை மாற்றிப்பாடப் போகி றார். அதன் மூலம் மஹிந்த அரசின் கரங் கள் வெண்மையானவை என்று உலகின் காதுகளில் கே.பியால் பூச்சுற்ற முடியும் என அரசு கனவு காண்கிறது.
ஆனால் அவரது வார்த்தைகள் எந்தளவு தூரம் எடுபடும் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். அத்துடன் அரசின் விருந்தாளியாக இருப்பவரின் வாக்கு மூலத்தை புலிகளின் ஒப்புதல் வாக்குமூல மாகக் கருதும் அளவுக்கு சர்வதேசமும், ஐ.நா அமைப்பும் முட்டாள்களல்ல.
கே.பியின் வாக்குமூலம் நிச்சயம் அரசின் குரலாகவே ஒலிக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்தவிடயம்தான். என்ன தான் உரத்துச் சொன்னாலும் கே.பி அரசின் தீர்மானத்தின்படி ஆடுகின்ற பொம்மை என்பது ஏற்கனவே நிரூபணமாகிவிட்ட நிலையில், அவரது சொல் செல்லாக்காசுதான். ஆனாலும் எல்லாம் குடிமுழுகிப் போய்விட்டநிலையில் அரசுக்கு உள்ள ஒரேயொரு பிடிமானம் கே.பி மட்டும்தான். அதன் பின்னர் தன்னுடைய அலுவல் முடிந்த பிறகு கே. பியை தூக்கிவீசுவதும் அரசுக்கு பெரிய விடயமல்ல. ஏனெனில் இலங்கைக்கு எதிரான விவாதத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையில் விவாதிக்கவிடாது தடுத்த ஐ.நாவுக்கான இலங்கைத் தூதர் டாக்டர் தயான் ஜயதிலகவையே தூக்கியெறிந்த அரசுக்கு கே.பி ஒரு பொருட்டே அல்ல. மக்களின் நல்வாழ்வுக்காக உழைக்கப் போவதாகச் சொன்ன கே.பி விருந்தாளிகளுக்கு விசுவாசமாக வாலையாட்டாது, மக்களுக்காக உண்மைகளை மட்டும் சொன்னாலே போதும் என்பதே அவலப்பட்ட மக்களின் ஏக்கம்.Posted by: on May 4, 2011



No comments:

Post a Comment