Friday, May 27, 2011

யாழ் மாநகரசபையில் வன்னியில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி.ஆளும்தரப்பு கடும் எதிர்ப்பு


வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு யாழ்.மாநகர சபையில் எதிர்க்கட்சியினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது. எனினும் இதற்கு ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

யாழ்.மாநகரசபையின் இவ்வருடத்திற்கான ஐந்தாவது மாதாந்தப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.



முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களுக்கு இக்கூட்டத்தின்போது அஞ்சலி செலுத்துமாறு எதிர்த்தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் முற்றாக நிராகரித்ததோடு தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகளும்தான் காரணம் என ஒத்துக்கொண்டால் தாம் அஞ்சலி செலுத்தத்தயார் எனவும் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த எதிர்த்தரப்பு உறுப்பினர்கள், போரின்போது அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது யாரால் என்பது தொடர்பாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது யாரால் என்பது தொடர்பாக நாம் ஆராயவரவில்லை. கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தவே நாம் அழைப்புவிடுத்தோம் எனவும் தெரிவித்தனர்.

மேலும் ஆளும் தரப்பினால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதிலும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இரு நிமிட அக வணக்கம் செலுத்தினர். இதன்போது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மேசையில் அடித்து சத்தம்போட்டதோடு அக வணக்கத்தை குழப்பவும் முயற்சித்தனர்.

இதற்கிடையில் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக சபையை விட்டு வெளிநடப்புச் செய்தார். இதனால் நேற்றைய மாதாந்தக் கூட்டம் பரபரப்பின் மத்தியில் முடிபடைந்தது.

கூட்டம் முடியும்வரை நல்லூர் ஆலய சூழலிலிருந்து யாழ்.மாநகர சபை வரையான பகுதியில் இராணுவத்தினர் கடுமையான வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

No comments:

Post a Comment