Tuesday, May 03, 2011

ஐநா நிபுணர் குழு அறிக்கை வெளிவந்து விட்டது! போர் குற்றவாளிகள்


214 பக்கங்களை உள்ளடக்கிய ஐநா நிபுணர் குழு அறிக்கை எவ்வித தணிக்கைக்கும்
உட்படாமல் வெளிவந்துள்ளது. இலங்கை அரசும் அதன் நட்பு நாடுகளும் அது
வெளிவராமல் தடுப்பதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.



தனது நம்பகத்தன்மையையும் ஐ.நா.வின் பயன்பாட்டையும் பாதுகாக்க வேண்டிய
பொறுப்பு ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு இருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு
எதிரான போர் தீவிரமடைந்த காலத்தில் தனது பொறுப்புக்களை அவர்
அலட்சியப்படுத்தினார்.
சர்வதேச சட்ட நிபுணரான அமெரிக்க இல்லினோய் பல்கழைக் கழகப் பேராசிரியர்
பிரான்சிஸ் போயில் (Francis A Boyle) சிறிலங்காவின் தமிழின அழிப்பு (The
Tamil Genocide By Sri Lanka) என்ற தலைப்பில் ஆய்வு நூல் எழுதியவர்.
வன்னித் தமிழின அழிப்பிற்கு பான் கீ மூனும் அவருடைய சில அலுவலர்களும்
துணை போயினர் என்றும் சிறிலங்காவின் போர் குற்றங்களுக்கு உதவியவர்
என்றும் (Accessory To The Fact) பான் கீ மூன் கருதப்பட வேண்டும் எனக்
கூறினார்.
ஏப்ரல் – மே 2009 காலத்தில் ஈழப் போர் தொடர்பாக ஐ.நா. என்ன நடவடிக்கை
எடுத்தது என்பது பற்றிய வெளிப்படையான விசாரணை தேவைப்படுகிறது. ஐ.நா.
நடவடிக்கைகள் மூடுமந்திரமாக இருக்கக் கூடாது. ஐ.நா.வின் கைகளைக் கட்டிப்
போட்டது யார் என்று அறியும் உரிமை அனைவருக்கும் உண்டு.
நிபுணர் குழு அறிக்கையில் ஐ.நா.வின் குறைபாடுகள் பற்றிய குறிப்பு
காணப்படுகிறது. இறுதிப் போரில் பெரும் எண்ணிக்கையில் பொது மக்கள்
கொல்லப்படுவதைத் தடுக்க ஐ.நா. இன்னும் அதிகம் செய்திருக்க முடியும் என்று
அறிக்கை குறை கூறியிருக்கிறது.
இது இராஜதந்திர மொழி. ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்வதற்குப் பதிலாக’
இன்னும் அதிகம் செய்திருக்க முடியும்’ என்று பூடகமாகச் சொல்லிப் புரிய
வைத்திருக்கிறார்கள். வன்னியில் இருந்து தனி மக்களும் மக்கள்
அமைப்புக்களும் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிய அவசர மனுக்களுக்கு
என்ன நடந்தது.
செயலாளர் நாயகத்தின் அலுவலகம் ஒரு கருங்குழியா (Black Hole)? எத்தனை
மனுக்கள் செய்யப்பட்டன. அவற்றிற்கு என்ன நடந்தது, என்ன நடவடிக்கை அவை
தொடர்பாக எடுக்கப்பட்டது போன்ற விபரங்களை செயலாளர் நாயகம் வெளியிட
வேண்டியது மிகவும் அவசியம்.
2008 செப்ரம்பர் முதல் வாரத்தில் ஐ.நா. அமைப்புக்களையும் பிற மனிதநேயத்
தொண்டர் அமைப்புக்களையும் வன்னியை விட்டு வெளியேறும்படி அரசு உத்தரவிட்ட
போது சிறிதளவு எதிர்ப்பும் காட்டாமல் ஐ.நா. அமைப்புக்களும் பிறவும்
உடனடியாக வெளியேறிவிட்டன.
வன்னி மக்கள் ஐ.நா. அமைப்புக்களின் வெளியேற்றத்தைத் தடுப்பதற்காக ஐ.நா.
வாகனத் தொடரணி வெளியெற உத்தேசித்த பாதையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்வாங்கிய ஐ.நா. அதிகாரிகள் வன்னி மக்களை நிரக்கதியாக்கி விட்டு
வெளியேற மாட்டோம் என்று உத்தரவாதம் வழங்கினர்.
ஆனால் அடுத்த நாளே வெளியேறி விட்டனர். இந்தப் பொறுப்பற்ற செயலால் ஒரு
‘சாட்சி இல்லாத போரை’ (A War Without Witnesses) தமிழ் மக்களுக்கு
எதிராகச் சிறிலங்கா” அரசால் நடத்த முடிந்தது.
பொஸ்னியா – ஹெர்சிகோவினாப் போரின் போது (1994-1995) ஐ.நா. கோழைத்தனமாக
நடந்தாலும் உதறித் தள்ளிவிட்டு ஓடவில்லை (Did Not Cut And Run). வன்னி
மக்களைப் பொறுத்தளவில் ஐ.நா. கிளை அமைப்புக்கள் வித்தியாசமாக நடந்துள்ளன.
ஐநாவின் உலக உணவுத் திட்ட அதிகாரிகள் தம்மால் இயன்றதைச் செய்தார்கள்
என்பது குறிப்பிடத்தக்க விடயம். சிறிலங்கா அரச அதிகாரிகள் வன்னி மக்களின்
எண்ணிக்கை மூன்று இலட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும் போது அதை 70-75
ஆயிரம் என்று குறைத்துக் காட்டினார்கள்.
இதை அறிந்தும் அறியாதது போல் உலக உணவுத் திட்ட அதிகாரிகள் நடந்துள்ளனர்.
இது பற்றிய குறிப்பை ஐ.நா. தலைமையகத்திற்கு அறிவிக்கத் தவறிவிட்டனர்.
அறிவித்திருந்தாலும் தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் கிளிநொச்சி மருத்துவமனை மீதான
தாக்குதலுடன் தொடங்கின. உடனடியாகச் செயலாளர் நாயகத்தின் அலுவலகம் ஊடாக
ஐ.நா.வுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டது. பதில் நடவடிக்கை ஒன்றும்
நடைபெறவில்லை.
மருத்துவமனைகள் மீதான தீவிர தாக்குதல்கள் தருமபுரம் மருத்துவமனைத்
தாக்குதலுடன் தொடங்கியது. அதே காலத்தில் தடைசெய்யப்பட்ட கொத்துக்
குண்டுகளும் தருமபுரச் சுற்றாடலில் வீசப்பட்டன ஏப்ரல் 2011ல் கடாபி
அரசின் படைகள் மிஸ்றாட்டாவில் (Misrata) கொத்துக் குண்டுகளைப் பொதுமக்கள்
நிலைகள் மீது வீசின.
நியூயோர்க் ரைம்ஸ் (New York Times) இதை உடனடியாக உலகின் கவனத்திற்குக்
கொண்டு வந்தது. மனித உரிமைக் காப்பக அதிகாரிகள் (Human rights Watch)
கொத்துக் குண்டு வீச்சை நிறுத்துவதற்குரிய நடவடிக்கையை எடுத்தனர்.
தருமபுரம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை கொத்து குண்டுகள் மாத்திரமல்ல
வெள்ளை பொஸ்பரஸ் எரிகுண்டுகள், நச்சு வாயுக் குண்டுகள், மனித உடல்
நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் வாயுக் குண்டுகள் வீசப்பட்டன. இது
பற்றிய தகவல் ஊடகங்களுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்ட
போதும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தின.
ஐ.நா.வுக்கு கொடுக்கப்பட்ட அவசர மனுக்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல்
பயனற்றுப் போயின.
சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மனிதநேய விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும்,
மனிதத்திற்கு எதிரான குற்றஙகள் புரியப்பட்டதாகவும் அரசுத் தலைமை,
இராணுவத் தலைமை மீது நிபுணர் குழு அறிக்கை குற்றஞ் சாட்டுகிறது.
போர்க்குற்றங்கள் பாரியளவில் நடந்ததை அது உறுதி செய்கிறது.
பொதுமக்கள் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
என்று சுட்டிக்காட்டும் அறிக்கை சர்வதேச சமூகத்தின் பாராமுகம்
இழப்புக்கள் நடப்பதற்கும், கட்டுக் கடங்காமல் உயர்வதற்கும்
காரணமாகியுள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது.
யூலை 1995ல் நடந்த சிறேபிறேனிக்காப் படுகொலைகளை ஜெனோசைற் குற்றம் என்று
ஐ.நா. தீர்ப்பு கூறியுள்ளது. அதிலும் பன்மடங்கானோர் வன்னியில்
கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளை ஜெனோசைற் என்று ஐ.நா. பிரகடனம்
செய்ய வேண்டும்.
குற்றச் செயல்களுக்கு எதிராகச் சர்வதேச ரீதியில் பாரபட்சமற்ற விசாரணைகள்
நடத்தப்பட்டுத் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நிபுணர் குழு
அறிக்கை பரிந்துரை செய்கிறது.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச வெள்ளைக் கொடியுடன் சரண்
புகுந்தவர்களை சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டதோடு வேறு பல குற்றச்
செயல்களோடு தொடர்புடையவர் என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
அமெரிக்க பிரஜையான அவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். தாயகப்
பாதுகாப்புத் திணைக்களம் (Dept Of Homeland Security) நீதி பரிபாலன
திணைக்களம் (Dept. Of Justice) ஆகியன அவருடைய போர்க்குற்றங்கள் தொடர்பாக
விசாரணை செய்யவிருக்கின்றன.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்த இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை
ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் ஒப்பபடைக்கப் பான் கீ மூன்
தீர்மானித்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கையை பாதுகாப்புச் சபை எடுக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நிபுணர் குழு அறிக்கையை அலட்சியப் படுத்தி ஒதுக்கி விடுமாறு
ரஷ்யாவும் சீனாவும் கூட்டாக இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளன. அறிக்கையை
எதிர்கொள்வதற்கு இது தான் சிறந்த உபாயமென்று ஐ.நா. பாதுகாப்புச் சபையில்
நிரந்தர உறுப்புரிமையுள்ள இந்த இரு நாடுகளும் கூறியுள்ளன.
பாதுகாப்புச் சபை இந்த அறிக்கையை விவாதத்திற்கு எடுப்பதை இந்தியா
கடுமையாக எதிர்க்கிறது. போருக்கும் இராஜதந்திரத்திற்கும் அளப்பரிய உதவி
புரிந்த இந்திய மத்திய அரசு இலங்கை தொடர்பாகத் தனது மூலோபாயத்தை மாற்ற
வேண்டிய கட்டத்தில் இருக்கிறது.
உலகத் தமிழினத்தின் எதிர்ப்பை மீறி இந்திய அரசு இலங்கைக்கு ஆற்றும்
பணிகளுக்குப் பிரதியுபகாரமாக சீனாவுடனான நெருக்கத்தை கைவிடுமாறு இலங்கையை
இந்தியா கோருகிறது. ஒப்புக்குச் சாதகமாகப் பதிலளிக்கும் இலங்கை சீனா
நெருக்கத்தைப் பலப்படுத்துகிறது.
இதற்கிடையில் அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான நிரந்தரத் தூதர் சூசன் றைஸ்
(Susan Rice) அறிக்கை பற்றிக் குறிப்பிடுகையில், போர்க் குற்றங்களில்
தொடர்புடையவர்கள் தப்பித்துக் கொள்ளாத வகையிலும் நடைபெற்ற போர்க்
குற்றங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படும் வகையிலும் சர்வதேச
விசாரணை அவசியம் என்று பேசினார்.
மனித உரிமைக் காப்பகம் தனது அறிக்கை மூலம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில்
நிபுணர் குழு அறிக்கை விவாதத்திற்கு எடுக்கப்படுவதைச் சீனாவும் ரஷ்யாவும்
தடுக்கக் கூடாது என்று கேட்டுள்ளது.
வழமை போல் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் மிக அமைதியான இராஜதந்திர (Quiet
Diplomacy) நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றின் முடிவில்
அமெரிக்கத் தூதரின் எதிர்பார்ப்புகள் சரிவருமா இல்லையா என்பது
தெரியவரும்.
1983ம் ஆண்டின் இனக்கலவரம் இனங்களுக்கிடையிலான குரோதத்தை வளர்த்தது. அது
போல் 2008-2009 காலப் போர் இன்னுமோர் சுற்றுக்கு வழி வகுக்கலாம் என்று
குறிப்பிடும் சர்வதேச நெருக்கடிக் குழு (Inter Crisis Group) அதை
நிறுத்தும் வலு சர்வதேச சமூகத்திடம் மாத்திரம் உண்டு என்று கூறுகிறது.

No comments:

Post a Comment