தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையில் மூவர் கொண்ட இந்தியக் குழு ஒன்று எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. வெளிவிவகார அமைச்சுச் செயலாளர் நிருபமா ராவ் மற்றும் பாதுகாப்பு அமைச்சுச் செயலர் பிரதீப்குமார் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த மாதம் 16ஆம் திகதி இந்தியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எம்.எஸ்.கிருஷ்ணா ஆகியோருடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தன. இதன் பின்னணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியக்குழுதனது பயணத்தின்போது ஆராயும் என்று புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலிலான வழமையான பயணமே இது என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்ட ரயில்வே, வீடமைப்பு, சம்பூர் அனல் மின் நிலையம் போன்ற திட்டங்களில் உள்ள தேக்க நிலையை நீக்குவது தொடர்பாகவும் இந்தியக்குழு ஆராயும்.
இந்தப் பயணத்தின்போது இலங்கையும் இந்தியாவும் இணங்கிக் கொண்ட விடயங்களைச் செயற்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆராயவிருக்கின்றனர் என்றும் இரு நாடுகளுக்கும் இடையில் அமைக்கப்பட்ட ஒத்துழைப்புக் குழுக்கள் குறிப்பட்ட கால இடைவெளிக்குள் சந்திப்பது என்ற முடிவுக்கு அமைய இந்தியக் குழு இலங்கை செல்கின்றது என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது. |
No comments:
Post a Comment