Wednesday, October 12, 2011

கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியாவில் உண்ணாவிரதம்!

வடக்கு - கிழக்கில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுவரும் வகையில் எதிர்வரும் 17.10.2011 அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் காலை 7மணி முதல் மாலைவரை அடையாள உண்ணா விரதத்தினை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.


1. முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைகளை மாற்றி வெலிஓயா என்னும் புதிய பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்குவதன் மூலம் அந்த மாவட்டத்தின் இனவிகிதாசாரத்தை மாற்றி இனங்களுக்கிடையில் கசப்புணர்வையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் செயற்பாட்டை உடன் நிறுத்துக.

2. போரினால் சின்னாபின்னமாக்கப்பட்டு உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து நிற்கும் நிலையில், காணிப்பதிவு என்னும் போர்வையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மோசடியான நில அபகரிப்புச் செயற்பாடுகளை உடன் நிறுத்துக.

3. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் காணி, வீடுகள் அற்று நிர்க்கதியற்ற நிலையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ குடியேற்றங்கள் மற்றும் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக இன ஒற்றுமையைக் குலைக்கும் செயற்பாட்டினை உடன் நிறுத்துக.

மேற்குறிப்பிட்டுள்ள விடயங்கள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பாக அரசினதும் சர்வதேச சமூகத்தினதும் கவனத்தினை ஈர்த்திட எதிர்வரும் 17.10.2011 அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் காலை 7மணிமுதல் மாலைவரை அடையாள உண்ணாவிரதத்தினை நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இன்று வவுனியாவில் நடைபெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சியினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment