Monday, October 03, 2011


மகிந்தருக்கு நீதிமன்ற அழைப்பானை! ஊடகங்கள் மூலம் அழைப்பு?
சிறிலங்கா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய 30 பக்க அழைப்பாணையை அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டவாளர் புரூஸ் பெய்ன் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் சுமார் 100 ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.

கடந்த செப்ரெம்பர் 30ம் நாள் இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளதாக சட்டவாளர் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.


சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது சித்திரவதைக்கு உள்ளானோரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட மூவரின் சார்பில் அமெரிக்க சமஸ்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 30 மில்லியன் டொலர் நட்டஈடு கோரும் வழக்கில், சிறிலங்கா அதிபருக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை ஏற்க சிறிலங்காவின் நீதி அமைச்சு மறுத்து விட்டது.

இதையடுத்தே ஊடகங்களின் மூலம் அழைப்பாணையை அனுப்ப அனுமதிக்குமாறு புரூஸ் பெய்ன் அமெரிக்க சமஸ்டி நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார்.

இந்த அழைப்பாணையை சிறிலங்கா அதிபர் நீண்டகாலத்துக்கு புறக்கணிக்க முடியாது என்றும், சிறிலங்கா அதிபரிடம் அழைப்பாணை சமர்ப்பிக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் என்று தாம் நம்புவதாகவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் நியுயோர்க்கில் குயின்ஸ்சில் உள்ள புத்த விகாரைக்கு வரும்போது அழைப்பாணையை கையளிக்க முனைந்தாகவும், ஆனால் அவரது பாதுகாவலர்கள் அந்த ஆவணத்தை கையளிக்க முடியாமல் தடுத்து விட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அழைப்பாணை பெறுவதை அவர் தவிர்ப்பது தெளிவாகியுள்ளதால், நீதிபதிகள் மகிழ்ச்சியடையவில்லை என்றும் கூறியுள்ள புரூஸ் பெய்ன், இந்த அழைப்பாணையை பரிமாற ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அழைப்பாணையை முழுமையாக வெளியிட முன்வருமாறு உலகிலுள்ள ஊடகங்களுக்கு குறிப்பாக சிறிலங்கா ஊடகங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment