Monday, October 03, 2011

அலரி மாளிகை நாடகத்தில் முக்கிய பங்கெடுத்த அவுஸ்ரேலிய தூதுவர்!

விடுதலைப் புலிகள் என்று குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்ட புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு கொழும்பிலுள்ள அவுஸ்ரேலிய தூதுவர் கதி குலுக்மன் சான்றிதழ்களை வழங்கியதற்கு அவுஸ்ரேலியாவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அலரிமாளிகையில் கடந்த வெள்ளியன்று நடந்த நிகழ்வில் 1800 முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக கூறி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அனைத்துலக இராஜதந்திரிகள் மத்தியில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருந்தார்.

இந்த நிகழ்வில் அவுஸ்ரேலியத் தூதுவர் கதி குலுக்மன் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கியதை அனைத்துலக சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற அவுஸ்ரேலியாவின் முன்னணி சட்டவாளரான ஜோன் டவுண் கண்டித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் உள்ள அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் தலைவரும், நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் முன்னாள் சட்டமா அதிபருமான ஜோன் டவுண், சிறிலங்காப் படையினரின் தடுப்பு முகாம்கள் மீள் கல்வி வழங்கப்படுவதே தவிர, புனர்வாழ்வு முகாம்களல்ல என்றும் கூறியுள்ளார்.

அவுஸ்ரேலியத் தூதுவர் இந்த நிகழ்வில் பங்கேற்றது, உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்த மறுக்கும் சிறிலங்கா ஆட்சியாளர்களின் செயலுக்கு, அவுஸ்ரேலியா சட்டரீதியான ஆதரவைக் கொடுப்பதாக அமைந்து விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பேர்த்தில் இந்த மாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில், கொமன்வெல்த்தில் இருந்து சிறிலங்காவை இடைநிறுத்த வேண்டும் என்று அவுஸ்ரேலியாவின் கிறின் கட்சி விடுத்து வரும் கோரிக்கையின் பின்னணியில் பேராசிரியர் ஜோன் டவுணும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சிறிலங்காவில் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்காக அவுஸ்ரேலியா எந்தவொரு நிதியையும் வழங்கவில்லை என்று அவுஸ்ரேலிய வெளிவிவகாரத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

முன்னாள் போராளிகளை தடுத்து வைக்கும் திட்டத்தை அவுஸ்ரேலியா ஆதரிக்கவில்லை என்றும், முன்னாள் போராளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்றே சிறிலங்கா அரசிடம அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அவுஸ்ரேலியத் தூதுவர் இந்த நிகழ்வில் பங்கேற்றது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

அண்மையில் 44 தமிழர்களுடன் அவுஸ்ரேலியா நோக்கிப் புறப்பட்ட படகு ஒன்றை இடைமறித்தற்காக சிறிலங்கா படைகளை அவுஸ்ரேலியத் தூதுவர் குலுக்மன் புகழ்ந்துரைத்திருந்தார்.

ஆனால் அது அவரது தனிப்பட்ட கருத்தே என்றும் அவுஸ்ரேலியாவின் நிலைப்பாடு அல்ல என்றும் அவுஸ்ரேலிய அரசாங்கம் பின்னர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment