2009 ஏப்ரல் 3ம் நாள் கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் குறிப்பிலேயே இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நாவின் செய்மதிப் படங்கள் பாதுகாப்பு வலயத்தில் எறிகணை மற்றும், விமானத் தாக்குதல்களால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டுவதாக அவர் தனது குறிப்பில் கூறியுள்ளார். 2009 மார்ச் 6, 15, 23 மற்றும் 29ம் நாள்களில் இந்த செய்மதிப் படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
ஐ.நா திரட்டிய இந்தப் படங்களின் மூலம், பாதுகாப்பு வலயத்தில் பீரங்கி, விமானத் தாக்குதல்களால் 53 பிரதான கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதையும், 5 கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதையும் அவதானிக்க முடிவதாகவும் பிளேக் தனது தகவலில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் கணக்கிடப்படவில்லை என்றும் பிளேக் கூறியுள்ளார். ஐ.நா எடுத்துள்ள படங்களில் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே, புதுக்குடியிருப்பு பகுதியில் மோசமான எறிகணைத் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் அழிந்து போயிருப்பதை காணமுடிவதாக பிளேக்கின் தகவலில் கூறப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல்களால் 17 மீற்றர் விட்டமுள்ள பாரிய குழிகள் ஏற்பட்டுள்ளதை ஐ.நாவின் செய்மதிப் படங்கள் மூலம் அவதானிக்க முடிவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் ஜனவரி 20 தொடக்கம் மார்ச் 31 வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களில் 78 வீதமானவர்கள் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே மரணமானதாக ஐ.நாவின் புள்ளிவிபரங்கள் கூறுவதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த செய்மதிப் படங்களை சிறிலங்கா அரசிடம் காண்பிப்பது குறித்து ஐ.நா வதிவிடப் பிரதிநிதி நீல் புனேயிடம் பரிந்துரைத்ததாகவும் பிளேக் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு காண்பிப்பதன் மூலம், தம்மைக் கண்காணிக்கும் பொறிமுறை ஒன்று செயற்படுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் அறியாதிருந்தால், பீரங்கித் தாக்குதல்கள் பற்றிய ஆதாரங்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பீரங்கித் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு ஊக்குவிக்கும் என்றும் பிளேக் தனது தகவல் பரிமாற்றக் குறிப்பில் கூறியுள்ளதாக விக்கிலிக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment