Monday, October 10, 2011

அரசின் செயற்பாடுகளில் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் மேற்குலக நாடுகள்!

அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரின் போது சிறிலங்காவானது தன் மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேற்குலக நாடுகளால் எடுக்கப்படவிருந்த எதிர்மறைத் தீர்மானத்திலிருந்து வெற்றிகரமாகத் தப்பியுள்ளது.

ஆனால் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து இப்போர்க் குற்றச்சாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்களைத் தான் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளிற்கு எதிராக சிறிலங்காவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிக் கட்டமானது மே 2009ல் இடம்பெற்ற போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என தற்போதும் மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்துவருகின்றன.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 10,000 தொடக்கம் 20,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அனைத்துலக மன்னிப்புச்சபையானது கடந்த மாதம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தேசிய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணை இதுவரையில் தோல்வியடைந்துள்ளது.

இந்த மாதத்தின் பிற்பகுதியில் இடம்பெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக விவாதிக்கப்பட  வேண்டுமென கனடாவானது முதன் முறையாக தனது கருத்தை முன்வைத்துள்ளது.

அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் நவம்பர் 15 அன்று கையளிக்கப்பட வேண்டிய சிறிலங்காவின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் போர்க் குற்ற அறிக்கை தொடர்பாக அடுத்த மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது கலந்துரையாடப்பட வேண்டும் என நடந்து முடிந்த மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கனடா பரிந்துரை செய்துள்ளது.

யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான நம்பகத்தகுந்த சாட்சியங்கள்,  ஐ.நாவின் வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கான சாட்சியங்கள் புலி ஆதரவு வட்டாரங்களால் அல்லது பரப்புரை ஊடகங்களின் ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

புலிகள் அழிக்கப்பட்ட காரணத்தினால், ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொது மக்களின் இழப்புத் தொடர்பான நீதிசார் தீர்மானங்களுக்கு சிறிலங்கா அரசாங்கமே முகங்கொடுக்க வேண்டும்.

புலி உறுப்பினர்களை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும், போர்க் குற்றங்கள் தொடர்பாக மேற்குலக நாடுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது தேசிய மட்டத்தில் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை தொடர்பாக உள்ளுர் மற்றும் அனைத்துலக மனித உரிமைக் குழுக்கள் கேள்வியெழுப்பியுள்ளன.

ஒக்ரோபர் 28-30 வரை பேர்த்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கமானது தன் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் தொடர்பாக எவ்வாறு பதிலளிக்கப் போகின்றது எனவும் கேள்வியெழுப்பப்படுகிறது.

அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்தைக் குறைப்பதற்காகவாவது சிறிலங்காவானது போர்க் குற்றங்கள் தொடர்பான நம்பகத்தன்மையான ஏதாவது நகர்வுகளை எடுக்க வேண்டும். இதனைவிட இது தொடர்பாக ஏதாவது சுயாதீன விசாரணைகள் மற்றும் தடைகள் போடப்படுமா?

போர்க் காலத்தில் நடைமுறையிலிருந்த இறுக்கமான சில அவசரகாலச் சட்ட நடைமுறைகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கமானது தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்ததானது, ராஜபக்சவின் அரசியல் எதிரிகளை அல்லது ஆட்சியை எதிர்ப்பவர்களை அடக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

ராஜபக்ச அரசாங்கமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தமை, எதிர்க்கட்சிகளுக்குள் நிலவும் உட்கட்சி முரண்பாடுகள் போன்றவற்றால் சிறிலங்கா அரசாங்கமானது புதிய சட்டங்களை அமுல்ப்படுத்தும் போது அவற்றை எதிர்க்கட்சிகளால் நிறுத்த முடியவில்லை.

ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்குள் சேர்க்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடைமுறைகளின் கீழ் போர் இடம்பெற்ற போது அறிவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த அரசாங்கமானது தன்னை எதிர்ப்பவர்களை அடக்குவதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பரந்த அதிகாரங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துமா அல்லது இல்லையா என்பது தொடர்பாக சந்தேகம் நிலவுகின்றது.

முன்னர் போர் வலயங்களாக இருந்த பகுதிகளில் வாழும் சிறுபான்மைத் தமிழர்களைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் சட்டங்கள் தற்போது ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்குமாறு மேற்குலக நாடுகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற தமிழ் மக்களின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துகின்றதா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment