Thursday, October 13, 2011

முறைகேடாக அறிவாலய நிலம் வாங்குவதை எம்ஜிஆர் எதிர்த்ததால்தான் நீக்கினார் கருணாநிதி-ஜெயலலிதா

அண்ணா அறிவாலயத்திற்கு நிலம் வாங்குவது தொடர்பான பத்திரத்தில் கருணாநிதியின் பெயர் மட்டுமே இருக்கிறது. அறக்கட்டளைக்கு இடம் வாங்கும் போது எம்ஜிஆர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இப்படி பல அத்துமீறல்களை கருணாநிதி செய்து ஏமாற்றுவதை எதிர்த்ததால்தான் 1972 அக்டோபர் 9ந் தேதி எம்ஜிஆரை கருணாநிதி கட்சியை விட்டு நீக்கினார். அக்டோபர் 17ந் தேதி எம்ஜிஆர் அண்ணா திமுக எனும் புதிய கட்சியை தொடங்கினார். இந்த நில விவகாரத்தில் நீதிமன்றத்தை சந்திக்க முடியாத கருணாநிதி எனக்கு சவால் விடுவது வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.


தமிழகத்தில் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பிரசாரம் செய்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இன்று (13-ம் தேதி) காலை தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி-எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள ஜோதிநகர் ஹெலிபேட் தளத்தில் இறங்கினார். பின்னர் கார் மூலம் தூத்துக்குடி அண்ணா நகர் சென்றார். தூத்துக்குடி மேயர் வேட்பாளர் சசிகலா புஷ்பா, 60 வார்டுகளின் கவுன்சிலர் மற்றும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்து பேசினார்.

அப்போது ஜெயலலிதா பேசுகையில்,

நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளை ஏற்று மக்கள் எங்களுக்கு வாக்கு அளித்தீர்கள். அதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று இருக்கிறேன். அதற்காக மக்களுக்கு நன்றி. நான் ஆட்சி பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பான்மையானவற்றை நிறைவேற்றி இருக்கிறேன்.

விலையில்லா அரிசி வழங்கி இருக்கிறோம், முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி இருக்கிறேன். திருமண உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் 4 கிராம் தங்கமும் வழங்கி இருக்கிறோம். பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் 4 கிராம் தங்கமும் வழங்கி உள்ளோம்.

மீனவர்கள் பெற்ற உதவித் தொகையை 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி உள்ளோம்.அரசு பணிகளில் உள்ள பெண்களுக்கான மகப்பேறு விடுப்பை 6 மாதமாக உயர்த்தி இருக்கிறோம். இப்படிப்பட்ட திட்டங்களின் பயன்களை நீங்கள் அனுபவித்து வருகிறீர்கள்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவே சிறப்பு அமலாக்கத் துறை என்ற தனித்துறையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். தாய்மார்களுக்கு மிக்சி, பேன், கிரைண்டர், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி, ஏழை குடும்பங்களுக்கு ஆடு மாடு வழங்கும் திட்டம், இடைநிற்றலை தடுப்பதற்காக 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு திட்டம், குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு திட்டம் இப்படி பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இலங்கை தமிழர்களை படுகொலை செய்தவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கவேண்டும், அந்த அரசின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்கிற தீர்மானங்களை சட்டமனத்திலே நிறைவேற்றினோம்.கடந்த திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பர்களாக செயல்பட்ட காவல் துறை இப்போது பொது மக்கள் நண்பனாக செயல்பட தொடங்கி இருக்கிறது. திமுக ஆட்சியில் அமளிக்காடாக இருந்த தமிழகம் என் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக அமைதிப் பூங்காவாக தற்போது திகழ்கிறது.

எப்போது உங்கள் சொத்துக்களை திமுகவினர் அபகரிப்பார்களோ என்கிற அச்சம் மாறி நீங்கள் நிம்மதியாக வாழும் நிலை உருவாகி உள்ளது. அடுத்தவர் சொத்துக்களை அபகரிப்பது என்பது கருணாநிதிக்கு கை வந்த கலை. திருச்சியில் நான் பேசும்போது அறிவாலய நிலத்தை கருணாநிதி மிரட்டி வாங்கி உள்ளார் என்று கூறினேன். இதற்கு பதில்அளித்த கருணாநிதி அறிவாலய வளாகம் 25 கிரவுண்டு நிலம்தான் என்று சொல்லியிருக்கிறார். அது பொய்யானது. உண்மையிலேயே அங்கு நாலரை ஏக்கர் நிலம் அதாவது சுமார் 90 கிரவுண்டு நிலம் உள்ளது.

25 கிரவுண்டு நிலம் தான் அங்கு இருப்பதாக கருணாநிதி நினைத்தால் மீதமுள்ள நிலத்தை அரசுக்கு தருவதற்கு கருணாநிதி தயாரா? மேலும் அந்த நிலத்தின் அப்போதைய மதிப்பு ரூ.18 லட்சமாகும். ஆனால் கருணாநிதி அந்த நிலத்தை ரூ.9 லட்சத்திற்கு விற்குமாறு மிரட்டினார் என சுப்புரத்தினம் என்பவர் சர்க்காரியா கமிஷன் முன் கூறியிருக்கிறார். திமுகவிற்கு இந்த நிலத்தை விற்கவில்லையென்றால் அரசாங்கத்திற்கு எடுத்துக் கொள்வோம். குறைந்த தொகைதான் கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் அந்த இடத்திற்கு வரிகட்டவில்லை என்று நில உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அதற்குரிய தொகையை வசூல் செய்யாமல் மிரட்டி அந்த இடத்தை வாங்குவதற்காக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். நிலத்தை திமுக வாங்கிய பிறகு 60,123 ரூபாய் அளவுக்கு அதற்கு வரிவிலக்கு அளித்து அரசுக்கு வரி இழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஏழைகளின் நலன்களை காக்கவும், அவர்களை மேம்படுத்தவுமே திமுக அறக்கட்டளை தொடங்கியதாக கூறிய கருணாநிதி, பின்னர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கட்சியின் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவே இந்த இடத்தை வாங்கியதாக கடிதம் எழுதியுள்ளார்.

சர்க்காரியா முன்பு அளித்த மனுவில் தர்ம காரியங்களுக்காகவே திமுக அறக்கட்டளை செயல்படுவதாக கூறியிருக்கிறார். இப்படி மாறி மாறி நிலையற்ற தன்மைகளில் செயல்படுபவர்தான் கருணாநிதி.

இந்த நில விவகாரத்தில் செங்கல்பட்டு கோர்ட் அளித்த தீர்ப்பின்படி ஜமீன் வாரிசுதாரர்கள் 13 பேர் நில உரிமையாளர்கள் என்று உள்ளது. ஆனால் 10 பேர் இதில் கையெழுத்திட்டிருப்பதாக கருணாநிதி கூறியிருக்கிறார். இதில் பலருடைய கையெழுத்து கேள்விக்குறியாக உள்ளது. மேலும் திமுக அறக்கட்டளையில் எம்ஜிஆர் உறுப்பினராக இருந்தபோதுதான் நிலம் வாங்கப்பட்டது என்கிறார். ஆனால் பத்திரத்தில் கருணாநிதியின் பெயர் மட்டுமே இருக்கிறது. அறக்கட்டளைக்கு இடம் வாங்கும் போது எம்ஜிஆர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இப்படி பல அத்துமீறல்களை கருணாநிதி செய்து ஏமாற்றுவதை எதிர்த்ததால்தான் 1972 அக்டோபர் 9ந் தேதி எம்ஜிஆரை கருணாநிதி கட்சியை விட்டு நீக்கினார். அக்டோபர் 17ந் தேதி எம்ஜிஆர் அண்ணா திமுக எனும் புதிய கட்சியை தொடங்கினார். இந்த நில விவகாரத்தில் நீதிமன்றத்தை சந்திக்க முடியாத கருணாநிதி எனக்கு சவால் விடுவது வேடிக்கையாக உள்ளது.

கருணாநிதி ஆட்சியில் பல்வேறு நில அபகரிப்புகள் நடைபெற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து உரியவர்களிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இப்படி பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அதிமுக அரசு செய்து வருகிறது. இதே போல உள்ளாட்சித் தேர்தலிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் மக்களுக்கு கிடைக்க அதிமுக வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

பிரசாரத்தை முடித்துவிட்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பாளை ஆயுதப்படை மைதானம் வருகிறார் ஜெயலலிதா. அங்கிருந்து காரில் நெல்லை டவுன் வாகையடி முனைக்கு வருகிறார்.

பின்னர் நெல்லை மேயர் வேட்பாளர் விஜிலா சத்தியானந்த் மற்றும் உள்ளாட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் காரில் பாளை ஆயுதப்படை மைதானம் செல்கிறார். அங்கிருந்து விமான நிலையம் வந்து மதுரை புறப்பட்டுச் செல்கிறார்.

No comments:

Post a Comment