Monday, October 17, 2011

விடுதலைப்புலிகளிடம் மயங்கி விட்டது கனடா - சித்ராங்கனி வாகீஸ்வரா

விடுதலைப் புலிகளின் பரப்புரைக்குள் கனடா வீழ்ந்து விட்டதாக கனடாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வரா விசனம் வெளியிட்டுள்ளார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


கனேடிய ஊடகங்களை சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வரா நேற்று ஒட்டாவாவில் சந்தித்தபோது அளித்துள்ள செவ்வியில், கனடாவின் இந்த அறிக்கைகள் தொடர்பாக தாம் கவலை கொள்வதாகவும், உண்மையான நிலைமைகளை கனடா அறிந்து கொள்ள வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் அண்மையில் வெளியிட்டு வரும் கருத்துகள் தொடர்பாக சிறிலங்கா தூதுவர் வெளிப்படுத்தியுள்ள முதலாவது கருத்து இதுவாகும்.

போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் அண்மையில் விமர்சித்திருந்தார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பகமான- தீவிரமான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவர் ஐ.நாவிலும் கனேடிய நாடாளுமன்றத்திலும் கூறியிருந்தார்.

இதையடுத்து சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வரா, கனேடிய வெளிவிவகார அமைச்சரை கடந்தமாதம் சந்தித்துப் பேசியிருந்தார்.

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும், ஐரோப்பாவில் அதன் அரசியல் பிரிவு இன்னமும் பலமாக- உயர்ப்புடன் இருப்பதாகவும், அதன் பரப்புரை இயந்திரம் வலுவாக செயற்படுவதாகவும் சித்ராங்கனி வாகீஸ்வரா குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசுக்கு எதிரான நிலையை தோற்றுவிக்க புலிகள் பரப்புரைப் போர் ஒன்றைத் தொடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

புலிகள் பல்வேறு வடிவங்களில் இருப்பதாகவும், கனடா புலிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ள அவர், கனடா இந்த விடயத்தில் விழிப்புடன் இருந்து நிலைமைகளை அவதானிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment