இவ்வாறு SiliconIndia என்னும் இணையத்தளம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட போட்டியானது தற்போது கடல் விவகாரத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான அண்மைய சமீபத்திய குழப்பநிலையானது ஒரு எச்சரிக்கைக்கான சமிக்ஞையாக இருந்தால், அது பல நாடுகளை உள்ளடக்கிய மூன்றாம் உலக யுத்தமாக உருவெடுக்கும் என எதிர்வுகூறப்படுகின்றது.
இவ்வாறு உருவாகும் உலகப் போரானது சமுத்திரங்களை மையப்படுத்தி உலக வரலாற்றில் இடம்பிடிக்கும் மிகப் பெரிய போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது.
தென் சீனக் கடலில் கனிய வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடவுள்ளதாக அறிவித்த வியட்நாம் மற்றும் பிலிப்பீன்ஸ் ஆகிய இரு நாடுகள் மீது யுத்தத்தை ஆரம்பிக்குமாறு கடந்த மாதம் சீன அரசாங்கத்திடம், சீன கம்யூனிசக் கட்சியால் வெளியிடப்படும் Global Times ஊடகம் கோரிக்கை விடுத்திருந்தது.
வியட்நாமின் பங்களிப்புடன் அதற்குச் சொந்தமான கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வை மேற்கொள்வதற்காக இந்தியா மேற்கொண்ட உடன்படிக்கையை நிறுத்துமாறு சீனா கேட்டுக்கொண்ட போதும் அது தொடர்ந்தும் தனது முயற்சியில் இறங்கியுள்ளதானது யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கான பிறிதொரு சாத்தியக்கூறாக உள்ளது.
தென் சீனக் கடலில் இந்தியாவும் வியட்நாமும் இணைந்து எண்ணெய் வள ஆய்வை மேற்கொள்ளும் முயற்சிகள் சீனாவின் எதிர்ப்பையும் மீறி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கப்பால், சீனாவானது தனது செல்வாக்கையும் தளத்தையும் இந்து சமுத்திரத்தில் விரிவுபடுத்தி வருகின்றது.
சீனாவானது இந்து சமுத்திரத்தில் உரிமையைக் கொண்டுள்ள கிழக்கு ஆபிரிக்கா, சீசெல்ஸ், மொறிசியஸ், மாலைதீவு, சிறிலங்கா, பங்களாதேஸ், மியான்மார், கம்போடியா போன்ற நாடுகளுடன் கடல் சார் உறவுகளையும் ஏனைய உறவுகளையும் கட்டியெழுப்பி வருகின்றது.
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் வழமையான குழப்பங்கள் மற்றும் முரண்பாடுகளுக்கு அப்பால், இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மாலைதீவில் சீனாவானது தனது தடத்தைப் பதிப்பதற்கு தீர்மானித்ததன் பிறகு இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு மேலும் அதிகரித்துள்ளது.
1965ல் மாலைதீவானது சுதந்திரமடைந்ததன் பின்னர் முதன் முதலாக இதனுடன் இராஜீக ரீதியிலான உறவைப் பேணிய முதலாவது நாடு இந்தியாவாகும்.
இத்தீவில் நிலவும் இந்தியாவின் ஆதிக்கத்துடன் சவால் விடும் நோக்குடன் சீனாவானது தற்போது மாலைதீவில் பல்வேறு வகையான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் இந்தியாவிற்கு அருகிலுள்ள மாலைதீவிற்குச் சொந்தமான தீவுகளில் ஒன்றான மரோவாவில் சீனாவானது கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்கான இரகசியத் திட்டம் ஒன்றைக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கப்பால், சீனாவானது தனது முழுமையான தூதரகம் ஒன்றை மாலைதீவின் தலைநகரான Male இல் அமைத்துவருகின்றது.
இந்திய நாடானது சீனாவால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு விதமான நகர்வுகளைக் கட்டம் கட்டமாக மேற்கொண்டுவருகின்றது.
மாலைதீவு, மொறிசியஸ், சீசெல்ஸ் போன்ற நாடுகளுடன் இந்தியா தற்போது தனது பாதுகாhப்பு முன்னெடுப்புக்களை தீவிரப்படுத்தி வருகின்றது. இந்தியப் போர்க் கப்பல்கள் தற்போது கடற் கண்காணிப்பு மற்றும் கடல் ரோந்து போன்றவற்றில் மாலைதீவிற்கு உதவி வருகின்றது.
இந்திய இராணுவக் கண்காணிப்பு முறைமையுடன் தொடர்பை ஏற்படுத்துகின்ற தனது 26 பவளத்தீவுகளுடனும் மாலைதீவானது தற்போது நிலத்தடி ராடர் வலையமைப்புக்களை உருவாக்குவதில் இந்தியா உதவிபுரிகின்றது.
கடற்கொள்ளையர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக விரைவு காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குகந்த 260 தொன் எடையுள்ள விரைவுத் தாக்குதல் கலமான Tillanchang ஐ 2006 இல் இந்தியாவானது மாலைதீவிடம் வழங்கியது.
இந்து சமுத்திரத்திலுள்ள பல சிறிய நாடுகளுக்கு உதவி செய்வதற்கப்பால், தற்போது சீனாவிற்கு அருகிலுள்ள நாடுகளுடனும் இந்தியாவானது தனது இராஜதந்திர உறவைக் கட்டியெழுப்பி வருகின்றது.
"சீனாவானது இந்து சமுத்திரத்தில் தனது செல்வாக்கைச் செலுத்தினால், தென் சீனக்கடலில் நாங்கள் எமது செல்வாக்கைச் செலுத்துவோம்" என இந்தியா தெரிவிக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே, தற்போது சீனக் கடலில் எண்ணெய் வள ஆய்வை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையில் வியட்நாம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளன.
இந்தியாவானது சீனக் கடலில் தனது போர்க் கப்பல்களை தரித்து வைத்துள்ளது. இவ்வாறு தென் சீனக் கடலில் தரித்து நின்ற இந்திய போர்க் கப்பல் ஒன்று கடந்த மாதம் சீனாவால் முற்றுகையிடப்பட்டிருந்தது.
தனக்குச் சொந்தமான கடலில் இந்தியாவானது ஊடுருவலை மேற்கொண்டுள்ளதால் உடனடியாக இப்போர்க் கப்பலை இந்தியா மீண்டும் தனது நாட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என சீனா குற்றம் சாட்டியிருந்தது.
சீனாவால் விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலை இந்தியா செவிமடுக்கவில்லை. சீனக் கடலில் உள்ள வியட்நாமிய துறைமுகங்களுக்கு இந்தியாவானது தனது போர்க் கப்பல்களை அனுப்பும் செயற்பாட்டை இந்தியாவானது தொடரும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, யப்பான், தென்சீனக் கடலில் உள்ள வியட்நாம், மேற்கு பசுபிக் போன்றவற்றுடன் பிராந்திய மற்றும் பூகோள ரீதியான நடவடிக்கைகளில் இணைந்து செயற்படுவதால் ஏற்படும் அனுகூலங்கள் தொடர்பாக நேற்றைய தினம் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி குறிப்பிட்டுள்ளமையானது சீனாவை மேலும் சீற்றங் கொள்ள வைக்கலாம்.
1962 ல் இடம்பெற்றதைப் போல், சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு பெரிய ஆசிய நாடுகளுக்கும் இடையில் யுத்தம் மூள்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளன.
தற்போது தென்சீனக் கடல் தொடர்பில் இவ்விரு ஆசிய நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலானது பூகோள ரீதியில் திடீரென கவனத்தை திசைதிருப்பியுள்ள விடயமாக உள்ளது.
இத் தென்சீனக் கடலானது உலகிலேயே இரண்டாவது பரபரப்பு மிக்க கடற்பாதையாக உள்ளது. சீனா, வியட்நாம், பிலிப்பீன்ஸ், தாய்வான், மலேசியா, புறூணை போன்றவற்றுக்கிடையில் தீர்க்கப்பட முடியாத பிராந்திய முரண்பாடுகள் நிலவிவருகின்றன. அதாவது தென்சீனக் கடலில் தனக்கே அதிக பங்கு உள்ளதாக சீனா உரிமை கோரிவருகின்றது.
இந்நிலையில் தென் சீனக் கடலில் உள்ள எண்ணெய் வளம் மற்றும் ஏனைய செல்வம் ஈட்டித் தரக்கூடிய வளங்கள் காரணமாக எதிர்காலத்தில் யப்பான், அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற மிகப் பெரிய நாடுகளுக்கிடையிலும் ஏனைய சிறிய நாடுகளுக்கிடையிலும் ஏற்படக்கூடிய முரண்பாடானது உலக யுத்தம் ஒன்றிற்கு வழிவகுக்கும் என எதிர்வுகூறப்படுகின்றது.
இந்தோ சீனா முரண்பாடானது இவ்வாறானதொரு உலகப் போர் ஆரம்பிப்பதற்கு காலாக அமையுமா எனவும் சந்தேகம் நிலவுகின்றது. தற்போது இதற்கான வரவேற்புக் குறைவாக உள்ள போதிலும், இப்போர் மூள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமானதாகவே உள்ளன.
No comments:
Post a Comment