Monday, October 17, 2011

அவுஸ்ரேலியாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் விசாரிக்க ஆஸி பொலிசிடம் மனு!

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதியும், அவுஸ்ரேலியாவுக்கான சிறிலங்காவின் தூதுவருமான அட்மிரல் திசார சமரசிங்க போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலிய சமஸ்டி காவல்துறையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக நீதியாளர் ஆணைக்கழுவின் அவுஸ்ரேலிய பிரிவே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.


அட்மிரல் திசார சமரசிங்க, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் நேரடியாக தொடர்புபட்டது குறித்த நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாகவும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

முன்னர் சிறிலங்காவில் வாழ்ந்த - தற்போது அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சாட்சிகளை முன்னிறுத்த முடியும் என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் காலகட்டங்களில் அட்மிரல் திசார சமரசிங்க, கிழக்கு, வடக்கு பகுதகளுக்கான கடற்படைத் தளபதியாகவும், கடற்படையின் தலைமை அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் மோதல்களில் இருந்து தப்பிக் கொள்ள முயன்ற பொதுமக்கள் மீது சிறிலங்கா கடற்படைக் கப்பல்களில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தனியான, சுதந்திரமான குற்றச்சாட்டுகள் அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் முன்பாகவும், ஏனைய விசாரணையாளர்களிடமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அட்மிரல் திசார சமரசிங்க எறிகணைத் தாக்குதல்களுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளதற்கோ, அல்லது நேரடியான உத்தரவுகளை வழங்கியதற்கோ சாட்சியங்கள் இல்லை என்றும், ஆனால் தமது கட்டளையின் கீழ் இடம்பெற்ற நடவடிக்கைகளுக்கு இராணுவத் தலைமையாளர்களே பொறுப்பு என்றும் அவுஸ்ரேலிய காவல்துறையிடம் நீதியாளர் ஆணைக்குழு முன்வைத்துள்ள கோரிக்கையில குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு குறித்து அவுஸ்ரேலிய சமஸ்டி காவல்துறை ஆராய்ந்து வருவதாகவும், அதற்கு முன்னர் இதுதொடர்பாக மேலதிக தகவல்களை வெளியிடுவது பொருத்தமல்ல என்றும் அவுஸ்ரேலிய சமஸ்டிக் காவல்துறையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை, மோதல்களின் போது தனதும் கடற்படையினரதும் எல்லா நடவடிக்கைகளுமே சட்டரீதியாகவே இருந்ததாக அட்மிரல் திசார சமரசிங்க தெரிவித்துள்ளார்.

'தவறான அல்லது சட்ட விரோதமான நடத்தை என்ற குற்றச்சாட்டுகளில் உண்மை எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு இந்த அறிக்கையை அவுஸ்ரேலிய சமஸ்டி காவல்துறைக்கு மட்டுமன்றி கொமன்வெல்த் பொது வழக்குகள் பணிப்பாளர், அவுஸ்ரேலிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கும் கூட அனுப்பி வைத்துள்ளது.

இந்த அறிக்கையில், அம்மிரல் திசார சமரசிங்கவையும் ஏனைய இராணுவத் தலைவர்களையும், சிறிலங்கா ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரியான அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களையும் விசாரிக்க வேண்டும் என்றும், கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு ஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் சுதந்திரமான சட்டஅமைப்பாகும்.

இது யுனெஸ்கோ ஐரோப்பிய ஒன்றியம், ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றுக்கு ஆலோசனைகளை வழங்கும் ஒன்றாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆணைக்குழுவின் அவுஸ்ரேலிய பிரிவுக்கு நியுசவுத் வேல்ஸ் உயர்நீதிமன்ற நீதிபதியும், சட்டமா அதிபருமான ஜோன் டவுட், அட்மிரல் திசார சமரசிங்க தொடர்பான அறிக்கை குறித்து கருத்து வெளியிட மறுத்து விட்டார்.

சிறிலங்காவின் நல்லணிக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த பெண் ஒருவர், 2009 மே மாதம் போர் வலயத்தில் இருந்து இரண்டு வெள்ளைக்கொடிகள் தாங்கிய படகு ஒன்றில் தப்பிச் செல்ல முயன்ற போது, சிறிலங்கா கடற்படையினர் திடீரென பீரங்கித் தாக்குதல் நடத்தியதாகவும், அந்த இடத்திலேயே 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், தற்போது அவுஸ்ரேலியாவில் வாழும் போரின் இறுதி வாரங்களில் கடலில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதல்கள் தொடர்பாக நேரில் கண்ட சாட்சியங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஆனால் சிறிலங்கா கடற்படையின் எல்லா நடவடிக்கைகளுமே உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டங்களுக்கு அமைவாகவே இடம்பெற்றதாக அட்மிரல் திசார சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா கடற்படைப் படகுகளில் இருந்து எவர் மீதும் தாக்குதல் நடத்துமாறு உத்தரவு வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும், எல்லாத் தளபதிகளும் அந்த விதிமுறையைப் பின்பற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன் மீதும், சிறிலங்காவின் ஏனைய இராணுவத் தளபதிகள் அரசியல் தலைவர்கள் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் அட்மிரல் திசார சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment