Monday, October 17, 2011

சிறிலங்காவின் அபிவிருத்தியை மேற்பார்வை செய்ய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கும் இந்தியா!

சிறிலங்காவில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்பார்வை செய்து ஒருங்கிணைப்பதற்காக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு பிரிவு என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள இந்தப் புதிய அலகுக்குப் பொறுப்பாகவும் – சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வை செய்து ஒருங்கிணைப்பதற்குமாக சிறப்பு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார்.


போர் முடிவுக்கு வந்த பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா 5000 மில்லியின் ரூபா பெறுமதியான உதவிகளை அறிவித்திருந்தது.

அத்துடன் வடக்கு,தெற்கு பகுதிகளில் தொடருந்துப் பாதை அமைக்கும் திட்டங்களுக்கும் இந்தியா 800 மில்லியன் டொலர்களையும் வழங்கியுள்ளது.

இதுபோன்ற அபிவிருத்திப் பணிகளை இந்தியா மேற்கொள்ளும், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் தமது பணிகளை ஒருக்கிணைப்பதற்கு இந்தியா இதுபோன்றதொரு சிறப்பு அலகை கடந்த ஆண்டில் உருவாக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளிவிவகார செயலர் ரஞ்சன் மத்தாய் அண்மையில் கொழும்புக்கு மேற்கொண்டிருந்த பயணத்தை அடுத்தே சிறிலங்காவிலும் இந்தப் பிரிவை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டங்கள் மிக மெதுவாகவே முன்னெடுக்கப்படுவது குறித்த ரஞ்சன் மத்தாய் அதிருப்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment