Tuesday, October 25, 2011

விமான நிலையத்தில் மகிந்தவை வரவேற்க அவுஸ்ரேலிய அரச பிரதிநிதிகள் செல்லவில்லை

கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்க பேர்த் அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை வரவேற்க, அவுஸ்ரேலிய அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகள் எவரும் செல்லவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு அவுஸ்ரேலிய பிராந்திய அதிகாரிகளே, சிறிலங்கா அதிபரை வரவேற்றுள்ளனர்.


மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி சிராந்தி ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், விளையாட்டுத்றை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரைக் கொண்ட குழுவே நேற்றிரவு பேர்த் விமான நிலையத்தைச் சென்றடைந்தது.

அங்கு, சிறிலங்கா அதிபரை அவுஸ்ரேலிய அரசின் சார்பில், மேற்கு அவுஸ்ரேலிய செனட் உறுப்பினர் மார்க் பிசப், மேற்கு அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் எலிசபெத் பெஜட் ஆகியோரே வரவேற்கச் சென்றிருந்தனர்.

அவுஸ்ரேலிய சமஸ்டி அரசின் அமைச்சர்களோ, உயர்நிலைப் பிரதிநிதிகளோ அல்லது வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளோ சிறிலங்கா அதிபரை வரவேற்கச் செல்லவில்லை.

இது சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட குழுவினருக்கு பெரிதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

மகிந்த ராஜபக்ச மீது அவுஸ்ரேலியாவில் போர்க்குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து நடுநிலையாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலிய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையிலேயே சிறிலங்கா அதிபருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை அவுஸ்ரேலியா தவிர்த்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment