இலங்கை
அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர்களில் ஒருவரும் மற்றும் தற்போது
வெளிநாடு ஒன்றிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள அமைச்சர் ஒருவர் லங்கா
லீக்ஸ் என்னும் இணையத்துக்கு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் கே.பி
தனது உயிரைப் பாதுகாக்க 850 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசுக்கு
வழங்கினார் எனத் தெரிவித்துள்ளார். இச் செய்தி ஒருபுறம் இருக்க கே.பி பற்றி
மேலும் சில செய்திகளும் கசிந்துள்ளது. அதாவது 2009ம் ஆண்டு மே மாதம் முதல்
பகுதியிலே விடுதலைப் புலிகளை முற்றாக முடக்க இலங்கை அரசு திட்டம்
தீட்டியது. குறிப்பாக மே 1ம் அல்லது 2ம் திகதி அளவில் புலிகள் இறுதியாக
தக்கவைத்திருந்த 1 கிலே மீட்டர் பரப்பளவை இலங்கை இராணுவம் கைப்பற்ற
நினைத்ததாம். ஆனால் அதற்கு கோத்தபாயவிடம் இருந்து பச்சைக்கொடி
காட்டப்படவில்லை.
இதற்கான காரணம் என்னவெனத் தெரியாமல் சரத்பொன்சேகா முதல் பல தளபதிகள் குழப்பிப்போய் இருந்திருக்கிறார்கள். புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் தப்பிச் செல்லக்கூடும் அதனால் தாக்குதலை உடனே ஆரம்பித்து அந்த 1 கிலே மீட்டர் பரப்பளவை அன்றைய தினம் மாலையே கைப்பற்றி விடலாம் என இராணுவம் கூறியபோதும் சுமார் 16 நாட்கள் அவர்களைக் காக்கவைத்திருந்திருக்கிறார் கோத்தபாய. காரணம் கே.பியிடம் இருந்து பணம் வரவேண்டும் என்பதற்காகத் தானாம். அதாவது பலருக்கு நினைவிருக்கும் "இறுதி நேரச் சமர்" "இதுதான் இறுதிக்கட்ட தாக்குதல்" என்று எல்லாம் சொல்லி பிரித்தானியா கனடா உட்பட பல நாடுகளில் மக்களிடம் பணம் வாங்கப்பட்டது. இது அனைத்தையும் மிக நேர்த்தியாகச் செய்தது கே.பி தான் என்கிறார்கள். அவர் இதற்காக பல தேசிய செயல்பாட்டாளர்களை ஏமாற்றி நம்பவைத்தும் உள்ளார்.
அதாவது வெளிநாடுகளில் இயங்கிவரும் கட்டமைப்புகளை தொடர்புகொண்ட கே.பியின் ஆட்கள் தமக்கு உடனடியாகப் பணம் தேவை என்றும் கடைசிக் கட்ட தாக்குதலை நடத்த விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்யவேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சொல்லிவைத்தது போல அதற்கு முன்னதாக (சில வாரங்களுக்கு) தேசிய தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனி அவர்கள் கே.பியிடம் விமான எதிர்ப்பு ஏவுகணை தொடர்பாகப் பேசியதாகவும் ஒரு செய்தியை திட்டமிட்டே கசிய விட்டது இலங்கை அரசு. அச் செய்தியை தமிழ் ஊடகங்கள் பல வெளியிட்டிருந்தது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழர்களிடமும் தமிழ் வர்த்தகர்களிடமும் பெருந்தொகைப் பணம் சேர்க்கப்பட்டது.
சேர்க்கப்பட்ட இப் பணத்தை செயல்பாட்டாளர்கள் மலேசியாவுக்கு அனுப்பியுள்ளனர். இது பல நாடுகளில் நடைபெற்றுள்ளது. சில நாடுகளில் கே.பியின் ஆட்களே நேரடியாக களமிறங்கி காசைச் சேர்த்துள்ளனர். இவ்வாறு பணத்தை சேர்க்கவும் மற்றும் சேர்க்கப்பட்ட பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மலேசியாவுக்கு எடுக்கவும் கே.பிக்கு கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக போர் முடிந்தால் மக்கள் பணத்தைக் கொடுக்கமாட்டார்கள் எனக் கணக்குப் போட்ட கே.பி உடனே கோத்தபாயவை தொடர்புகொண்டு போரை சிறிய காலம் இழுத்தடிக்கும்படி சொல்லியுள்ளார். இவ்வாறு சேர்க்கப்பட்ட பெருந்தொகையான பணம் மற்றும் ஏற்கனவே தன்னிடம் புலிகளால் வழங்கப்பட்ட பணம் என சுமார் 850 மில்லியன் டாலருடன் அவர் இலங்கையிடம் சரணடைந்தார் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு கொடுக்கப்பட்ட பணத்தில் பெரும் பகுதி இலங்கையின் பங்குச் சந்தையில் விடப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. தாமிக்க பெரேரா அஷோக் பத்திராஜ் டிலித் ஜெயவர்த்தன போன்ற பெரும் புள்ளிகளிடம் இப் பணம் கொடுக்கப்பட்டு இவை பங்குச் சந்தையில் போலியான ஒரு எழுச்சியை தோற்றுவிக்க பயன்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பெரும் செல்வந்தரும் வர்த்தகருமான ஹரி ஜெயவர்த்தவிடம் இப் பணத்தின் பெரும் பங்கை மகிந்தர் தற்போது கையளித்துள்ளாராம். இவர் தென்கொரிய நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடவுள்ளதாகவும் குறித்த தென்கொரிய நபர் ஐ.நா செயலாளர் பான் கீ மூனின் நெருங்கிய நண்பர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இலங்கை வெளிநாடுகளின் அழுத்தங்களில் இருந்தும் தப்பிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளதாம்.
இலங்கையில் காலூன்றியுள்ள இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனமூடாக பிரணாப் முகர்ஜீயை தொடர்புகொள்ள இலங்கை முயற்சித்ததாகவும்(தனிப்பட்ட நப்பு ரீதியாக) அதேபோல இலங்கையில் உள்ள ரோவர் (Rover) கம்பெனியூடாக பிரித்தானிய முன்நாள் பிரதமர் டோனி பிளயரை இலங்கை அரசு தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சஜின் வாஸ் குணவர்த்தனவே இந் நடவடிக்கைகளை மேற்கொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இத் தலைவர்களூடாக இலங்கைக்கு மேல் சுமத்தப்படும் பழியை சமாளிக்க சில நகர்வுகளை இலங்கை மேற்கொள்ளவிருந்தது என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment