Monday, November 14, 2011

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு தற்போது அனைத்துலக பரிமாணம் உண்டு!வி.ருத்திரகுமாரன்


கடந்த முப்பதாண்டு கால தமிழீழ விடுதலைப் போராட்டம் ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினையினை அனைத்துலக மயப்படுத்தியிருக்கும் சூழலில் ஈழத் தாயகத்தில் நடைபெறும் ஒவ்வொரு தமிழர் போராட்டங்களுக்கும் தற்போது அனைத்துலக பரிமாணம் உண்டு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.அமெரிக்க இலங்கைத் தமிழ் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இக்கருத்தினை பிரதமர்.வி ருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.





70களில் இருந்த நிலைமைகள் மாறிவிட்ட நிலையில் தற்போது ஈழத்தமிழர் தேசம் ஏறத்தாழ 1 மில்லியன் மக்கள் பலம்கொண்ட ஈழத் தமிழ் டயாஸ்பாறாவினையும் தனது அங்கமாகக் கொண்டுள்ளது.

இதனால் தாயகத்தில் நடைபெறும் பேராட்டங்கள் அனைத்துலகமயப்படுவது, அனைத்துலகமயப்படுத்தப்படுவது தற்போது கூடுதல் சாத்தியமானது.

இதனால் நேரடியான போராட்டங்கள் தமிழர் தாயகத்தைப் பாதுகாப்பதற்கு முக்கியமானவை என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வி. ருத்திரகுமாரன் அவர்களின் முழுமையான உரையின் விபரம்!

தமிழீழத் தாயகத்திலிருந்து தாயக மக்களின் தலைவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களும், தமிழகத்திருந்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் மாண்புமிகு செந்தமிழன் சீமான் அவர்களும் இந்த நிகழ்வில் பங்கு கொள்ள இருந்தார்கள்.

செந்தமிழன் சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது கண்டனத்தை இத்தருணத்தில் பதிவு செய்து கொள்கின்றது.


ஈழத்தாயகம், தமிழகம், தமிழ் டயாஸ்பொறா எனப்படும் புலம் பெயர் தமிழ் மக்கள் அனைவரும் இணையும் ஒரு நிகழ்வாக இது அமைந்திருப்பது இந்த நிகழ்வுக்கு ஒரு கூடுதல் சிறப்பைத் தருகிறது.

இங்கு கூடியிருப்பவர்களுக்கிடையேயும் கூடியிருக்கும் நோக்கிலும் ஒரு பொதுமை உள்ளது.

ஈழத்தாயகத்திலே சிங்களத்தின் இனஅழிப்புக்கு உள்ளாயிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக, விடுதலைக்காக உழைப்பவர்கள், பாடுபடுவர்கள் என்கிற வகையில் நமக்கிடையே ஒரு பொதுத்தளம் உள்ளது.

2009 ஆம் ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்று முடிந்த மாபெரும் இனப்படுகொலையின் ஊடாக ஈழத் தமிழர் தேசம் தனக்கென உருவாக்கி வைத்திருந்த நடைமுறையரசினைச் சிங்களம் சிதைத்து அழித்தது. ஈழத்தமிழர் பூமியெங்கும் சிங்கள ஆக்கிரமிப்புக்குள்ளாகிப் போனது.

முள்ளிவாய்க்கால் என்பது ஈழத்தமிழ் மக்களின் ஒரு பெரும் வரலாற்றுத்துயர். நவீன மனிதகுலவரலாற்றில் நடைபெற்ற ஒரு மாபெரும் இனப்படுகொலை.

இறுதி யுத்தக்காலப் பகுதியில், யுத்தப் பகுதியில் இருந்த ஏறத்தாழ மூன்றரை லட்சம் மக்களில் ஒரு லட்சம் வரையிலான நமது உறவுகள் கொத்துக் கொத்தாக நம் கண்முன்னாலேயே சிங்களத்தால் கொல்லப்பட்டார்கள்.

அங்கு வாழ்ந்த மக்களில் ஏறத்தாழ மூன்றில் ஓரு பங்கு மக்கள் மிகவும் அவலமாக பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில்; கொல்லப்பட்டார்கள். தமது சொந்த நிலத்திலேயே துரத்தித் துரத்திக் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

மக்களைக் கொல்வதன் மூலம் போராளிகளை அழிக்கும் தந்திரோபாயத்தில் தாம் வெற்றி பெற்றுவிட்டதாக - , கடலில் வாழும் மீன்கள் போல மக்களுடன் மக்களாக வாழ்ந்து வந்த போராளிகளை அழிப்பதற்காக – கடலையே அழித்து, கடல்நீரையே வடித்து நடாத்தப்பட்ட போரில் தாம் வெற்றி கொண்டு விட்டதாக சிங்களம் மார்தட்டிக் குதூகலித்தது.

உண்மையில் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையால் ஈழத்தமிழர் தேசத்தின் விடுதலைவேட்கையினை சிங்களத்தால் நசுக்கி விடமுடியவில்லை. மாறாக முள்ளிவாய்க்கால் நமக்கிடையே ஒரு பெருந்தீயினையும் மூட்டியுள்ளது.

ஈழத்தாயகம் சிங்கள ஆக்கிரமிப்புக்குள் சிக்கியிருக்கும் காரணத்தால், - தமது உணர்வுகளையெல்லாம் முழுமையாக வெளிப்படுத்துவதற்கு அங்கு போதிய அரசியல் வெளி இல்லாத காரணத்தால் - இப்பெருந்தீ ஈழத்தாயகத்தில் வெளிப்படும் விதம் வேறாக உள்ளது.

தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ஈழத்தமிழ் மக்கள் தமது வாக்குச்சீட்டின் ஊடாக அதனை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சிங்களத்தின்; ஆசைவார்த்தைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது ஈழத்தாயக மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்து நிற்கிறார்கள்.

கருத்துத்தளத்தில் அரசியல்வெளி கிடைக்கும் இடங்களிலெல்லாம் - தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் - இப்பெருந்தீ வெளிப்படையாக நேரடியாவே கிளம்புகிறது.

இனப்படுகொலை புரிந்தவர்கள் செல்லும் தேசமெல்லாம் அவர்களைத் துரத்துகிறது.

ஈழத்தமிழர் தேசத்துக்கு நீதி கிடைக்கும் வரை இத் தீ அணையாது. நமது சுதந்திர தாகம் தணியாது.

இத்தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் தொடர்பாக சில வார்த்தைகள் கூறல் பொருத்தமானது எனக் கருதுகிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோன்றுவதற்கான அடிப்படையாக அமைந்தவை இரண்டு காரணிகள்.

முதவாவது, ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை என்பது சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசே என்ற நிலையினை உயிர்ப்பாக வைத்திருத்தல்.

தமிழீழத் தனியரசு என்ற நிலைப்பாடு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கொள்கையளவிலும் 1977ஆம் ஆண்டுப்பொதுத் தேர்தலில் ஜனநாயகவழிமுறை மூலமும் ஈழத்தமிழ் மக்களது ஆணையாக வெளிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் நிகழ்ந்த ஆயதப்போராட்ட காலத்தில் 40,000 க்கும் மேற்பட்ட மாவீர்களின் ஈகத்தாலும் குருதியாலும் அது மேலும் உறுதி செய்யப்பட்டது.

தனது சக்தி அனைத்தையும் திரட்டிப் போராடிய நமது சிறிய தேசத்துக்குரிய அனைத்து வலுவையும் தளராது கொடுத்து நின்ற நமது மக்களது பங்களிப்புக்கூடாக இது முற்றாக வெளிப்படுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்காலின் பின் ஈழத்தாயகத்தில் வாழும் மக்களுக்கு தமிழீழத் தனியரசு அமைப்பதில் உள்ள அபிலாசை - பெருவிருப்பு அற்றுப்போய்விட்டதா? நாம் அப்படிக் கருதவில்லை.

அங்கு அதனை வெளிப்படுத்துவதற்குரிய அரசியல்வெளி இல்லாத காரணத்தால் மக்கள் அந்தப் பெருவிருப்பைத் தமது ஆழ்மனங்களில் புதைத்து வைத்திருக்கிறார்கள்.

தமிழீழம் தற்போதய சூழலில் சாத்தியம்தானா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில், ஏன் தலைவர்கள் மத்தியிலும் எழுவதுண்டு. இது இவர்களின் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையும் உண்டு.

இங்கு ஒரு வாதத்துக்காக தமிழீழம் சாத்தியம்தானா என்ற கேள்வியினை ஒரு புறம் தற்போது ஒதுக்கி வைத்துக் கொள்வோம்.

மக்களின் பெருவிருப்பு எது என்பதனை வெளிப்படுத்த ஒரு பூரணவாய்ப்புக் கிடைக்கிறது எனவும் வைத்துக்கொள்வோம்.

இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், அண்மையில் தென்சூடான் மக்கள் வாக்களித்தது போல் - தாயகத்திலும் புலத்திலும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் தமிழீழத் தனியரசு தேவையா அல்லது சிங்களத்துடன் இணைந்து வாழ்வதா என்ற கேள்விக்கு வாக்குகள் மூலம் பதிலளிக்கும் வாய்ப்பு ஈழத்தமிழர் தேசத்துக்கு கிடைக்கிறது எனவும் எடுத்துக் கொள்வோம்.

இந்நிலை வருமாயின் 99 வீதத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் - தாயகத்திலும் சரி புலத்திலும் சரி - தனித் தமிழீழ அரசுக்கு ஆதரவாகவே தமது வாக்குகளை வழங்குவார்கள் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

இதனை இங்குள்ள அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நான் கருதுகிறேன்.

இதுதான் நாம் பேசும் அரசியல் அபிலாசை. ஈழத்தமிழ் மக்களின் தமிழீழம் என்ற பெருவிருப்பு. ஆனால் இதனைச் சாத்தியப்படுத்துவது எப்படி?

இதற்காகத் தொடர்ந்து போராடாமல், செயற்படாமல் சாத்தியப்பாட்டுக்கான வாய்ப்புக்களை உருவாக்க முடியாது.

தற்போதைய சூழலில் இந்த அரசியற் பெருவிருப்புக்கான போராட்டத்தை, செயற்பாடுகளை ஈழத்தமிழர் தாயகத்தில் செய்யமுடியாது. அதற்கான அரசியல்வெளி அங்கு இல்லை.

இதிலிருந்துதான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான தேவை ஏற்பட்ட இண்டாவது அடிப்படை எழுகிறது.

ஈழத் தாயகத்தில் நமது அரசியல் பெருவிருப்பான தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தைக் கருத்துத்தளத்தில்கூட மேற்கொள்வதற்கான அரசியல்வெளி அங்கே இல்லை.

இதனால் தான் இப் போராட்டத்தினை மேற்கொள்வது புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பொறுப்பாக – தமிழகத்தில் மற்றும் உலகப்பரப்பெங்கும் பரந்து வாழும் தமிழ்த் தேசியர்களின் பொறுப்பாக உணரப்பட்ட காரணத்தால் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது அவசியம் எனக் கருதப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமையே தன்னளவில் குறியீட்டுவடிவில் தழிழர்தேசத்தின் அரசியல் பெருவிருப்பை வெளிப்படுத்தி நிற்கிறது.

எம்மைப் பொறுத்த வரையில் through the employment of our soft power namely the combination of the geographic location of Tamil Eelam, the changing dynamics in the geopolitical situation in South Asia, the presence of 60 million Tamils in Tamil Nadu, the politically active one million Tamil diaspora, the politically conscious second and third generation, the emerging jurisprudence pertaining to international crimes and immunity, the moral and legal legitimacy of our political cause, in a smart way we hope we can realize our political goal. Needless to say, the Sri Lankan government’s ”one country – one people” policy and its intransigence are important components of our soft power.

தமிழர் தேசத்தின் புவியியல் இருப்பிடம், தென்னாசியாவில் மாறி வரும் பூகோள அரசியல் நிலைப்பாடு, 60 மில்லியன் தமிழகத்து தமிழர்கள், புலத்தில் வாழும் 1 மில்லியன் ஈழத் தமிழர், அந்தந்த நாட்டு அரசியல்களில் பிரவேசிக்கும் இரண்டாம், மூன்றாம் ஈழத் தலைமுறை, சர்வதேச குற்றங்கள், இமுனிடி தொடர்பாக மாறிவரும் சர்வதேச சட்ட நிலைப்பாடு, எமது அரசியல் கோரிக்கையின் தார்மீக, சட்ட வலு எமது பலம் ஆகும். மேலும் ஒரு நாடு ஒரு மக்கள் என்ற சிறிலங்கா அரசியின் பல்லின மக்களின் அடையாளங்களை அளிக்கும் கொள்கையும் எமது பலமாக கருதுகின்றோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்றன.

இங்கு நாம் ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்வது முக்கியமானது எனக் கருதுகிறேன்.

இன்று சிலர் மத்தியில் தாயகத்தில் வாழும் மக்கள் - புலத்தில் வாழும் மக்கள் என ஈழத்தமிழ் மக்களை இரு பிரிவினராக - இரு தொகுதியினராக - அதுவும் இரண்டு முரண்பட்ட தொகுதியினராகப் பார்க்கும் பார்வை இருப்பதனை நாம் அவதானித்துள்ளோம்.

இப்பார்வையினை நாம் நிராகரிக்கின்றோம். We categorically reject this distinction. The Eelam Tamil diaspora is not an alien and distinct entity. It is an extension of our brethren back home. The Eelam Tamils both inside the island of Sri Lankan and outside the island of Sri Lanka are two sides of the same coin – the Eelam Tamil Nation. The Tibetans inside and outside Tibet are neither considered as two separate entities nor is there any hierarchical order.

திபெத்தின் உள்ளேயும் வெளியேயும் வாழும் திபெத்தியர்களை இரு தொகுதிகளாக சர்வதேச சமுதாயம் கருதவில்லை.

எம்மைப்பொறுத்தவரை ஈழத் தமிழ் மக்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தமிழீழத்தாயின் குழந்தைகளே. இவர்கள் ஒரு தொகுதி மக்களே.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல களத்திலும் புலத்திலும் வாழும் ஈழத்தமிழ் மக்கள் ஈழத்தமிழர் தேசத்தின் இணைபிரியா அங்கங்களே!

இவர்களது அரசியலும் சமூக வாழ்வும் நாடு கடந்த நிலையில் உள்ள அரசியல் சமூகவெளிகளின் ஊடே முன்னெடுக்கப்பட்டு வருபவை.

இவர்கள் வாழும் இடங்கள் வேறுபடுவதால் இவர்கள் வாழும் சூழல் வேறுபடுகிறது. வௌ;வேறு சூழலில் வௌ;வேறு அரசியல் யதார்த்தங்கள் உள்ளன.

இந்த வேறுபாடுகளை நாம் புரிந்து கொண்டு - ஒவ்வொரு இடத்தில் உள்ள வாய்ப்புக்களையும் சவால்களையும் கவனத்திற் கொண்டு ஈழத்தமிழர் தேசம் தனது செயற்திட்டங்களை வகுக்க வேண்டும். செயற்படவேண்டும்.

இந்த வகையில் தாயகத்தில் உள்ள தலைவர்களாலோ – மக்களாலோ அங்குள்ள அரசியல்வெளியில் தமிழீழம் பற்றிப் பேச முடியாது. செயற்பட முடியாது. இதனை புலத்தில் வாழும் ஈழத்தமிழர் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதேவேளை தமக்குக் கிடைக்கும் அரசியல் வெளியினைப் பயன்படுத்தி ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பான தமிழீழம் நோக்கியும், நமது மக்களை இன அழிப்புச் செய்தவர்களை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதற்கும் புலத்துத் தமிழ் மக்கள் எடுக்கும் முயற்சிகளை தாயகத்துத் தலைவர்களும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது பார்வையில் இவ்விரண்டு தளங்களிலும் நடைபெறும் செயற்பாடுகள் ஒன்றுக்கொன்று முரண்பாடானவையே அல்ல. மாறாக அவை ஒன்றுக்கொன்று துணைபுரியக்கூடியவை.

உலகில் உள்ள ஏனைய தேசங்கள்போல ஈழத் தமிழர் தேசமும் தனது சுதந்திரமான, கௌரவமான, பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்யும் அரசியல் கட்டமைப்பை தனக்கென உருவாக்குவதற்கு உரித்துடையது. தகமையுடையது.

ஒரு தேசம் என்ற வகையில் - அதுவும் இனஅழிப்புக்குள்ளாக்கப்படும் மக்கள் என்ற வகையில் - நமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் - இன அழிப்புக்கு மாற்றீடான பாதுகாப்பு ஏற்பாடு என்ற வகையில் - நமக்கான தனி அரசினை முன்னிறுத்தி - நீதியின் அடிப்படையில் நமது போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

தமிழீழத் தனியரசு உருவாகுவது தமது நலன்களுடன் இணைகிறது எனும்போதுதான் அனைத்துலக அரசுகள் உலகில் இத்தகையதொரு தனியரசு அமைவதற்கு ஆதரவு தருவார்கள்.

தற்போது இல்லாவிடினும் எதிர்காலத்தில் தமிழீழத் தனியரசும் பலம் வாய்ந்த அனைத்துலக அரசுகளின் நலன்களும் ஒரேகோட்டில் சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

அனைத்துலக அரசுகள் வெளிப்படையாக எம்முடன் உறவுகளைப் பேண வேண்டும் என தற்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. உரிய நேரம் காலம் வரும் போது நிலைப்பாடுகளில் மாற்றங்கள் வரும் என்பதை நாம் அறிவோம்.

தாயக செயற்பாடுகளும் நிகழ்வுகளும் புலத்துச் செயற்பாடுகளை வலுப்படுத்தக்கூடியதைப்போல புலத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளும் அனைத்துலக அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளும் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களுக்கும் தலைவர்களுக்கும் அரசியல்வெளியினை அதிகரிக்க உதவும். ஈழத் தாயகத் தமிழ்த் தலைவர்களின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கும்.

அனைத்துலக ரீதியாக சிங்களம் தற்போது அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளது. வடஆபிரிக்கவிலும் மத்தியகிழக்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளும் (”Arab Spring”) சிங்கள அரசுக்கு உள்ளார்ந்த அழுத்தம் கொடுக்கும் நிகழ்வுகளாக அமையக்கூடியவை.

இவையெல்லாம் தாயகத்தின் அரசியல்வெளி சற்று விரியக்கூடிய வாய்ப்பைத் தரக்கூடியவை.

தாயகத்தில் தமிழ்மக்களுக்கான அரசியல் வெளி அதிகரிக்கும் போது களமும் புலமும் நெருங்கிப்பணியாற்றுவதற்கான நிலைமைகள் வலுவடையும்.

இது ஈழத் தமிழர் தேசத்தை மேலும் வலுவடையச் செய்யும்.

இதேவேளை, தாயகத்திலே இரு விடயங்கள் தொடர்பாக ஈழத் தமிழர் தேசம் உடனடியான நடவடிக்கைகளை உயிர்ப்பாக எடுக்கவேண்டியுள்ளது.

முதலாவது போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது மற்றும் போராளிகளது குடும்பங்களின் மறுவாழ்வும் பொருளாதார மேம்பாடும் குறித்த செயற்பாடுகள்.

இரண்டாவது, தமிழர் பிரதேசங்களை சிங்களமயமாக்கும் திட்டங்களை தடுத்து நிறுத்துவது குறித்த செயற்பாடுகள்.

இவ் விடயங்களில் களமும் புலமும் தமிழகமும் கைகோர்த்துச் செயற்படுவது அவசியமானதாகும்.

இலங்கைத் தீவில் அமைந்துள்ள ஈழத்தமிழர் தாயகம் தற்போது சிங்கள இராணுவ மற்றும் நிர்வாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதால் புலத்தில் உரிமைகளை முன்னிறுத்திச் செயற்படும் அமைப்புக்களால் மனிதாபிமான, புனருத்தாரண, மேம்பாட்டுத் திட்டங்களில் நேரடியாக ஈடுபடுதல் நடைமுறைச் சாத்தியம் அற்றதாக உள்ளது.

இதனால், இப்பணியினைத் தாயகத்தில் உள்ள தமிழர் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி போன்ற அமைப்புக்கள்தான் தலைமை தாங்கி முன்னெடுக்க வேண்டும்.

இதற்குத் தேவையான உதவிகளை புலத்தில் இருந்து கிடைக்கச் செய்யும் ஏற்பாடுகளை நாம் மேற்கோள்ள முடியும்.

தமிழர் தாயகத்தை சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து காப்பதற்கு நேரடியான போராட்டங்களைத் தீவிரமாக மேற்கொள்;ளல் அவசியமானதாக இருக்கும்.

கூட்டமைப்பு தலைமையில் அண்மையில் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட அடையாள உண்ணாவிரதம் இது குறித்த ஒரு நல்ல ஆரம்பம்.

களத்தில் சாத்வீகவழியில் தீவிரமான போராட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது இதற்கு உறுதுணையாக நாம் வெவ்வேறுவகையான போராட்டங்களையும் கவனயீர்ப்பு நடவடிக்கைகைளையும் மேற்கொள்ள முடியும்.

இத்தகைய போராட்டங்களில் தமிழர் பிரதேசம் சிங்கள ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளமை தொடர்ச்சியான முன்னிறுத்தப்படவேண்டும்.

கருத்துரீதியாக வெளிப்படுத்தப்படும் சிங்கள ஆக்கிரமிப்புத் தொடர்பான தகவல்கள் மட்டும் இத்தகைய ஆக்கிரமிப்பினைத் தடுத்து நிறுத்துவதற்குப் போதிய அழுத்தங்களை ஏற்படுத்தாது என்றே நாம் கருதுகிறோம்.

இதனால் இவ்விடயத்தில் நேரடி நடவடிக்கை அவசியம். இவ்விடயத்தில் ஈழத்தாயகமும் புலமும் தமிழகமும் இணைற்து நேரடியான போராட்டங்களை மேற்கொள்ளல் அவசியம்.

அனைத்துலக சமூகத்தின் மத்தியில், மக்களின் இயல்பான பரம்பலும் தமிழர் பிரதேசத்தின் குடிசனப்பரம்பலினை சிங்கள அரசு திட்டமிட்டமுறையில் மாற்றியமைக்கும் நடவடிக்கைகைளும் வேறுபடுத்தித்தான் பார்க்கப்படுகிறது என்றே நாம் அறிகிறோம்.

தமிழர் பிரதேசங்களின் குடிசனப்பரப்பலைத் திட்டமிட்டமுறையில் மாற்றியமைக்கும் சிங்கள அரசின் முயற்சிக்கு அனைத்துலக சமூகம் மத்தியில் ஆதரவு இல்லை என்றெ எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ஈழத் தமிழர் தாயகத்தில் நடைபெறுவது இயல்பான மக்கள் பரம்பல் அல்ல – மாறாக திட்டமிட்ட முறையில் சிங்கள அரசு வெவ்வேறு திட்டங்கள் ஊடாக மேற்கொண்டுவரும் நிலப்பறிப்பு நடவடிக்கைகைள் என்பதனை நாம் மிகவும் காத்திரமாக முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

தற்போது சிங்கள அரசால் மேற்கொள்ள முனையப்படும் நிலப்பதிவு முயற்சியின் பின்னணி நோக்கங்களையும் அனைத்தலக மயப்படுத்த வேண்டும்.

கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற தமிழீழ விடுதலைப்போரட்டம் ஈழத் தமிழர் தேசியப்பிரச்சினையினை அனைத்துலக மயப்படுத்தியருக்கும் சூழலில் ஈழத்தாயகத்தில் நடைபெறும் ஒவ்வொரு தமிழர் போராட்டங்களுக்கும் தற்போது அனைத்துலக பரிமாணம் உண்டு.

இது 70களில் இருந்த நிலைமைகளைவிட மாறுபட்டது.

தற்போது ஈழத்தமிழர் தேசம் ஏறத்தாழ 1 மில்லியன் மக்கள் பலம்கொண்ட ஈழத் தமிழ் டயாஸ்பாறாவினையும் தனது அங்கமாகக் கொண்டுள்ளது.

இதனால் தாயகத்தில் நடைபெறும் பேராட்டங்கள் அனைத்துலகமயப்படுவது, அனைத்துலகமயப்படுத்தப்படுவது தற்போது கூடுதல் சாத்தியமானது.

இதனால் நேரடியான போராட்டங்கள் தமிழர் தாயகத்தைப் பாதுகாப்பதற்கு முக்கியமானவை.

தாயக மக்களால் தேர்வு செய்யுப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் இவ் இரு விடயங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுப்பும் பங்கும் முதன்மையானவை என்றே நாம் கருதுகிறோம்.

ஈழத் தமிழர் தேசம் தென்னாசியப் பிராந்தியத்தில் ஒரு சக்தியாகக் கணிக்கப்படுவது நாம் மேற் பேசிய விடயங்களுக்கெல்லாம் முக்கியமாக அமையக்கூடியது.

தென்னாசியாவின் புவிசார் அரசியலில் ஈழத் தமிழ் தேசம் ஒரு சக்தியாக கணிக்கப்படல் பெரிதும் தமிழக மக்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.

தமிழகம் ஈழத் தமிழ் மக்களுடன், தனித் தமிழீழ இலட்சியத்துடன் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் உறுதியாக அணிவகுத்து நிற்குமாயின் இந்தியாவில் ஈழத் தமிழர் தேசம் ஒரு அரசியற் சக்தியாக மாறி விடும். தென்னாசியப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலில் தவிர்க்கமுடியாத ஒரு பாத்திரமாக ஈழத் தமிழர் தேசம் மாறிவிடும்.

இத்தகைய ஒழு நிலையினை உருவாக்கல் ஈழவிடுதலையினை ஆதரித்து நிற்கும் தமிழகத் தலைவர்களினது கைகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழகத்தில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தொடர்பான மனுவுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு மில்லியன் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஈழத் தமிழர் தேசத்தைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான ஆண்டாக அமைகிறது.

சிங்களம் தமிழருக்கெதிராக நிகழ்த்திய போர்க்குற்றங்கள் ஜக்கிய நாடுகள் சபையினது அறிக்கை மூலமும் Channel 4 ஆவணம் ஊடாகவும் உலகை அதிர வைத்தது இவ்வாண்டின் போது தான்.

நமது மக்களுக்கான நீதி கோரும் பயணத்தில் மற்றையோரால் பொதுவாக போர்க்குற்றங்களாகச் சித்தரிக்கப்படுபனவற்றை நாம் இனஅழிப்பாகவே (genocide) அடையாளப்படுத்துகிறோம்.

இரண்டு தரப்பும் போர்க்குற்றம் புரிந்தது எனக்கூறி அனைத்துலக நியமங்களுக்கு உட்பட்ட ஒரு அரசு புரிந்த மாபெரும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை - போர்க்குற்றங்களாக மட்டும் குறியிடுவதன் மூலம் இனஅழிப்பு என்பதனைக் குறைத்து மதிப்பீடு செய்வதற்கு நாம் இடம் கொடுக்கமுடியாது.

அதனை விட மேலும் முக்கியமாக, ஈழத் தமிழர் தேசத்துக்கு எதிராக இன்றும் இனப்படுகொலை நடைபெறுகிறது என்ற நமது நிலைப்பாடு இனஅழிப்புக்கு எதிரான பாதுகாப்பைக் கோரி நிற்கிறது.

இதன் மூலம் நமக்கான சுதந்திரமும் இறைமையுமுள்ள அரசினைக் கோரி நிற்கிறது.

எனவே தான் நீதியின் அடிப்படையில் உரிமை கோரும் ஒரு தேசம் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்ட தேசமாக இயங்க வேண்டியது இன்றைய காலத்தின் அவசியமாக அமைகிறது.

இந்த அறைகூவலோடு எனது பேச்சினை நிறைவு செய்கிறேன்.

- நாதம் ஊடகசேவை -

No comments:

Post a Comment