Wednesday, November 30, 2011

சிறிலங்கா படைகள் போர்க்குற்றங்கள் புரிந்து உண்மையே – ஜேவிபி


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஜேவிபி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்க,
“தேவைப்பட்டால் சிறிலங்கா படையினர் மீது பொறுப்புக் கூறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அண்மையில் கூறியுள்ள கருத்தை வரவேற்றுள்ளார்.

லண்டன் சென்றுள்ள சோமவன்ச அமரசிங்க, அங்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

“எல்லாப் போர்களுமே அழுக்கானவை தான். போர் தான், உலகிலே மிக மோசமானது.

ஏற்கனவே படையினர் மீதான சில போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரித்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளதன் மூலம், சிறிலங்கா படைகளால் போர்க்குற்றங்கள் புரியப்பட்டுள்ளன என்பது உறுதியாகியுள்ளது.

போரின்போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கூட அதைக் கூறியுள்ளார்.

சிறிலங்காப் படையினரால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எம்மிடம் அதுபற்றிக் கூறியுள்ளன.

சிறிலங்கா அரசுக்கு நாம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் தான், போரின்போது இறந்தவர்கள், காணாமற் போனவர்கள் பற்றிய கணக்கெடுப்பை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்களில் நம்பிக்கையில்லை.

ஆனாலும் அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளுடன் இணைந்து கொண்டு போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைக்கு ஜேவிபி அழைப்பு விடாது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் பொருத்தமான விசாரணைகள் நடத்தினால், அனைத்துலக விசாரணைகள் தேவையில்லை.

சிறிலங்கா அரசின் முட்டாள்தனமான காரியங்களால், சிறிலங்காவின் உள்விவகாரங்களில் அனைத்துலக சமூகம் தலையிடுகிறது.“ என்றும் சோமவன்ச அமரசிங்க மேலும் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறிலங்கா அரசுக்கு பிரதானமாக ஆதரவு கொடுத்து வந்தது ஜேவிபி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment