Thursday, November 03, 2011

மத்திய அரசு சதி செய்வதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலையில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் உள்பட மூவரால் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மூவரது கருணை மனுவை ஜனாதிபதி ஏற்கெனவே நிராகரித்து விட்டதால், இவர்களின் தூக்கு தண்டணையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தப் பின்பு அதில் தலையிடும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
மூவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், மதிமுக பொதுச் செயலருமான வைகோ நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “கடந்த முறை வழக்கு விசாரணை அமைதியாக நடந்தது. ஆனால், நீதிமன்றத்தில் கொந்தளிப்பும், பதற்றமும் இருந்ததாக கூறி ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கக் கூடாது என நினைக்கும் மத்திய அரசு பின்னணியில், இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி, மூவரின் தண்டனையை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். ஆனால், 2000-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி ஆட்சியில் இருந்த திமுக தான் நளினிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க கேட்டும், 3 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற கோரியும் ஆளுனருக்கு பரிந்துரை செய்தது.
தமிழக அமைச்சரவை மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ஐ பயன்படுத்தி ஆளுனரின் பரிந்துரை செய்வதன் மூலம் இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும்.
மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை சட்டபூர்வமானது அல்ல. அதை மீறி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது. இந்த மூவரின் கருணை மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்றார் வைகோ.

No comments:

Post a Comment