Thursday, November 03, 2011

இலங்கைக்கு காமன்வெல்த் மாநாட்டில் பெருத்த அவமானம் ! மகிந்தாவின் அழைப்புரையை புறக்கணித்து வெளியேறினார் கனடா பிரதமர்

CANADA-PRESIDENTஇலங்கையில்  2013ம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்குமாறு  இலங்கை   அதிபர் மகிந்தா ராசபக்சே  அழைப்பு விடுத்து பேசிய போது, கனடா  பிரதமர் ஸ்டீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக கனடா  ஊடகம் ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது.

பேர்த் நகரில் நடைபெற்று வந்த காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டு ஞாயிற்றுக்கிழமை    மாலை நிறைவடைந்தது.
மாநாட்டின் முடிவில் இலங்கையின்  அதிபர் மகிந்தா ராசபக்சே , அடுத்த காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றுமாறு 53 நாடுகளின்  தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து பேசியதாக தெரிகிறது. 
அழைப்புரையாற்ற மகிந்தா ராசபக்சே  அழைக்கப்பட்டதும், கனடா  பிரதமர் ஸ்டீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கனடா  அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையின்  மனிதஉரிமை நிலைமைகள் பற்றி கனடா  பிரதமர் ஹாபர், கடந்த வாரம் இலங்கை அதிபர் மகிந்தா  ராசபக்சேவுடன் நேரடியாகப் பேசியிருந்தார்.
அப்போது அடுத்த காமன்வெல்த் கூட்டத்துக்கு முன்னர் தமது கவலைகளுக்கும் கரிசனைகளுக்கும் இலங்கை  உரிய வகையில் பதிலளிக்க வேண்டும் என்று கனடா  பிரதமர் உறுதிபடக் கூறியுள்ளார்.
அவர்கள் அதைச் செய்யாது போனால் நாங்கள் புறக்கணிப்போம் என்று அவர் குறிப்பிட்டதாகவும் கனடா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment