இந்த ஊடகத்தில் நேற்று பிரசுரிக்கப்பட்ட புலனாய்வுக் கட்டுரை ஒன்றிற்காக மேற்கொள்ளப்பட்ட செவ்வி ஒன்றிலேயே சிறிலங்காவின் முன்னாள் படை அதிகாரியினால் இவ்வாறு வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை பொதுமக்களுக்கு எதிரான மிக மோசமான பல கொடூரங்கள் மேற்கொள்ளப்பட்டதை நேரடியாகக் கண்ட ஒருவரும் சாட்சி இந்த ஊடகத்திற்கு சாட்சியம் வழங்கியுள்ளார். இது தொடர்பாக இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'படைத்தரப்பினர் மீது போர்க்குற்றங்களை முன்வைக்கும் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி, இலங்கையில் இறுதிக் கட்டப் போர் இடம்பெற்ற காலத்தில் படைத்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பது போர்க்குற்றச்சாட்டுகளுக்கு வலுச்சேர்க்கின்றன.
போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த மற்றும் முற்றுகையிடப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளை சட்டத்திற்குப் புறம்பான முறையில் படுகொலை செய்வதென்பது இறுதிக் கட்டப் போரின் போது வழங்கப்பட்ட கட்டளைக்கு அமையப் பின்பற்றப்பட்ட நடைமுறையாகும்.
சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைக்கு அமையவே விடுதலைப் புலிகளின் போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர். சரணடைந்த விடுதலைப் புலிகளை கொன்று முடிக்குமாறு சிறிலங்கா படைத்தரப்பின் களமுனைத் தளபதிகளுக்கு கோத்தபாய ராஜபக்சவினால் பணிக்கப்பட்டதைத் தான் அறிந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
'யார் இத்தகைய கட்டளைகளை வழங்கியிருப்பர்? விடுதலைப் புலிகளின் தீவிரமான உறுப்பினர்களைக் கையாளும் முறை இதுவா?' என சிறிலங்காவின் முன்னாள் படைத்தரப்பு உறுப்பினரைக் கேட்டபோது, சிறிலங்கா ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டு, படைத்துறைச் செயலரினாலேயே பணிக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய முடிவுகளை எடுப்பதற்குரிய அதிகாரம் படைத்தளபதிகளுக்கு இல்லை என்று அவர் பதிலளித்தார்.
இதே பார்வையே அமெரிக்க இராஜதந்திரி Patricia Butenisஇனால் வெளிப்படுத்தப்பட்டதாக கடந்த ஆண்டு விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.
2010 ஜனவரி மாதம் 15ஆம் திகதியிடப்பட்ட தகவல் அறிக்கையில், இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்மீறல்களுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது சதோதரர் மற்றும் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா உட்பட்ட நாட்டின் அரசாங்க மற்றும் படைத்துறைத் தலைமையே பொறுப்பேற்க வேண்டுமென அவர் குறிப்பிட்டிருந்தார்.
சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் ஈடுபடுத்தப்பட்ட கருணா குழுவிற்கு சிறிலங்கா படைத்தரப்பினால் முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் முன்னாள் படை அதிகாரி தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினருக்கு கருணா குழு எவ்வாறு உதவியது என்பது தொடர்பாக 2007ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியிடப்பட்டு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கடத்துதல் போன்றவை மூலம் அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கான வாய்ப்பை இது சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்ற அறிக்கைகள், உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நம்பிக்கைக்குரிய வேறு பல தூதரக தொடர்புகளாலும் முன்வைக்கப்பட்டதாகவும், துணை இராணுவக் குழுக்களை சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு கையாண்டது என்பதற்கான விரிவான தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்ததாகவும் இந்த அறிக்கையில் குறிப்படப்பட்டிருந்தது.
எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களுடன் சிறிலங்காவின் முன்னாள் படை அதிகாரியின் குற்றச்சாட்டுகள் பொருந்துகின்றன.
வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் முக்கியமானதாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கோத்தபாயவினால் தெரிவு செய்யப்பட்ட நபர்களைக் கொண்ட குழுவே 'வெள்ளை வான்' கடத்தல் சம்பதங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் சிறிலங்காவின் முன்னாள் படை அதிகாரியினால் கூறப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் சிறிலங்கா படைத்தரப்பினரால் விசாரிக்கப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் இதழின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க உட்பட்ட ஊடகவியலாளர்கள் மீதான படுகொலை மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் சம்பவங்களின் பின்னணியிலும் சிறிலங்கா அரசாங்கமே இருந்துள்ளது.
இவர் கூறுவது போல இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற போர் மீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் சிறிலங்காவின் ஜனாதிபதி அல்லது படைத்துறைச் செயலாளர் ஆகியோரின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டிருப்பின், ஜெனிவா தீர்மானங்களுக்கு அமைய மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்தமைக்காக அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்த முடியும்.
சிறிலங்கா படைத்தரப்பினரை நோக்கி வெள்ளைக் கொடிகளோடு வந்த மக்கள் அவர்களால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீண்டும் போர் முன்னரங்கங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக பாதுகாப்புக் காரணங்களுக்காக பெயர் குறிப்பிட முடியாத நேரடிச் சாட்சி ஒருவர் கூறுயுள்ளார். திட்டமிட்ட முறையிலும் கண்மூடித்தனமாகவும் பொதுமக்கள் மீது சிறிலங்கா படைத்தரப்பினர் தாக்கினர்.
3000 வரையான சாவடைந்த மக்களின் உடலங்கள் பரவியிருந்ததைத் தான் நேரடியாகக் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்' என The International இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment