இந்த நிலையில் சிறிலங்கா இராணுவத் தளபதி போரின் போது எந்தவொரு மீறல்களும் இடம்பெறவில்லை என்று வலியுறுத்தியுள்ளதுடன், சிறிலங்கா படையினர் மீது ஐ.நா நிபுணர்குழு சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமைந்திருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சபுகஸ்கந்தயில் உள்ள சிறிலங்கா பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியில் பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போதே சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய இவ்வாறு கூறியுள்ளார்.
மனிதாபிமானப் போரின் போது சிறிலங்காவின் முப்படைகளும் எவ்வாறு செயற்பட்டன என்பதை விரைவில் வெளிவரப் போகும் இந்தஅறிக்கை அனைத்துலக சமூகத்துக்கு தெளிவுபடுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுத்தாத வகையில் போர் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது பற்றிய தெளிவான தகவல்களை இந்த அறிக்கை உள்ளடக்கியிருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
போர்க்கால இராணுவத்தை அமைதிக்கால இராணுவமாக மாற்றுவது மற்றும் மனிதாபிமானப் போரின் போதான பொறுப்புக் கூறுதல், போர் எவ்வாறு நடத்தப்பட்டது போன்ற விடயங்கள் குறித்து அவர் தனது உரையில் விபரமாக எடுத்துக் கூறியுள்ளார்.
இதையடுத்து உள்நாட்டு வெளிநாட்டு, பயிற்சி அதிகாரிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் ஜெகத் ஜெயசூரிய பதிலளித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது மீறல்கள் இடம்பெற்றதற்கான முதல் நிலைச்சான்றுகள் இருப்பதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
No comments:
Post a Comment