Friday, December 16, 2011

ஐ.நா வின் எத்தகைய குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க சிறிலங்கா தாயார்!! - டியூ குணசேகர

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எத்தகைய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவும் சிறிலங்கா அரசாங்கம் தயாராக உள்ளது என்று சிறிலங்காவின் மூத்த அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது புதிதாக எதையும் கூறவில்லை. போர்க்காலத்தைப் போல, அவர்கள் ஒன்றையே கூறிவருகின்றனர்.
தமிழ்மக்களின் பிரச்சினை, அவர்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் பற்றி இரா.சம்பந்தன் பேசுவதில்லை.

சிறிலங்காவின் வெளிநாட்டுக் கொள்கை, கடந்த காலங்களைப் போன்று இல்லாதிருக்கலாம். அது உண்மைதான்.

ஆனால் எமது வெளிநாட்டுக் கொள்கை இன்றுள்ள தேவைகள், பொருளாதார தேவைகள், நாட்டின் இறைமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே வகுக்கப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தன் கூறியது போன்று 2005 நவம்பரில் போர் தொடங்கவில்லை. 1983ல் போர் ஆரம்பமானதையும், அதன்போது இந்த நாட்டின் அதிபர் உள்ளிட்ட பல தலைவர்கள், பிரமுகர்கள் கொல்லப்பட்டதை அவர் அறியவில்லையா?

தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, ஒற்றுபட்ட சிறிலங்காவை கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வரும் நிலையில், கடந்த கால கொலைகள் பற்றிக் குறிப்பிட விரும்பவில்லை.

500 ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போது ஆசிய பொருளாதாரம் உலக பொருளாதாரத்தோடு போட்டி போடுகின்ற நிலை உருவாகியுள்ளது.

தெற்காசிய நாடுகள் முன்னொரு போதும் இல்லாதவகையில் இணைந்து செயற்படுகின்ற காலம் இது. மேற்குநாடுகள் எம்மை வித்தியாசமாகப் பார்க்கின்றன.

எத்தனையோ நாடுகள் இருக்கும் போது எம்மைப் போன்ற சிறிய நாடுகளையே மேற்கு நாடுகள் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன. 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நாவில் இரண்டு மூன்று நாடுகளே சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக உள்ளன.

அனைத்துலக சமூகம் எமக்கு எதிராக உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்கிறது. ஆனால் அது உண்மையல்ல. ஒருசில நாடுகள் தான் எமக்கு எதிராக உள்ளன.

லத்தீன் அமெரிக்காவில் உள்ள எல்லா நாடுகளுமே அமெரிக்காவுக்கு எதிராக நிற்கின்றன. ஆசியா இன்று பூகோள சக்தியின் மையமாக மாறியுள்ளது.

சீனா, பிறேசில், ரஸ்யா, தென்னாபிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இன்று சக்தி வாய்ந்தவையாக எழுந்து கொண்டிருக்கின்றன. இந்த நாடுகள் எம்முடனேயே நிற்கின்றன.

இன்று தீர்மானிக்கும் சக்தியாக உள்ள முக்கிய நாடு சீனா தான். அது எமது பக்கம் உள்ளது.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் எமக்குள்ள பலமான நட்புறவை சீர்குலைக்க எவருக்கும் நாம் இடமளிக்க முடியாது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எத்தகைய அறிக்கைகளை ஐ.நாவில் சமர்ப்பித்தாலும் அவற்றை எதிர்கொள்ள சறிலங்கா அரசாங்கம் தயாராகவுள்ளது.

அனைத்துலக சூழலை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இரா.சம்பந்தன் வெளியிடும் கருத்துக்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment