வடக்கு, கிழக்கில் காலதாமதமின்றி இராணுவமயமற்ற ஆட்சிமுறை நடைமுறைக்கு வரவேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்ற இலங்கை நண்பர்கள் கழகத் தலைவர் ஜியோப்ரி தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் சுதந்திரமும், அபிவிருத்தியும் ஒருங்கே இழையோடுவதற்குப் புதிய அரசியல் தீர்வே தேவை. அது சட்டத்தைப் பேணும் இலங்கை மக்கள் அனைவரின் நலன்களுக்கும் மதிப்புக்கும் உரியதாக அமையவேண்டும். அதேவேளை, காலதாமதமின்றி தெளிவான காலவரையறைக்குள் வடக்கிலும், கிழக்கிலும் இராணுவமயமாக்கல் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஜியோப்ரி, இங்கு ஜனாதிபதி, சிரேஷ்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்துள்ளார். அதுபோல அரசினதும் எதிரணியினதும் அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றையும் சந்தித்துள்ளார்.
ஏற்கனவே போரினால் சிதைவுற்ற நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்குத் தாம் மேற்கொண்ட பயணத்தின்போது இவர் வடக்கு, கிழக்குப் பிராந்திய ஆளுநர்கள், யாழ். ஆயர், இராணுவத் தளபதிகள், அநேக உள்ளூர்வாசிகள் ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளார். அத்துடன், பூசாவிலுள்ள தடுப்பு முகாம், ஆழிப்பேரலை அழிவுக்குப் பின்னர் கட்டி எழுப்பப்பட்ட வெலிகம கிராமம் ஆகியவற்றுக்கும் சென்று பார்த்திருந்தார்.
இந்த பயணத்துக்குப் பின்னர் ஜியோப்ரி வெளியிட்டுள்ள கருத்துகள் வருமாறு:
போர் முடிவடைந்தமையால் ஏற்பட்டுள்ள மனநிம்மதியை எனது பயணத்தின்போது அவதானிக்கமுடிந்தது. எதிர்கால சுபீட்சத்தைக் கருதி, தற்போது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் நாடு அதீத ஈடுபாடு கொண்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டைச் சீர்குலைத்து வந்த ஆயுதப்போர் மீள உருக்கொள்ளாமல் தவிர்ப்பதற்கு நல்லிணக்கப்பாடும், அரசியல் ஒருமைப்பாடும் அவசியம்.
கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழு வெளிப்படுத்தும் அறிகுறிகளால் நான் உற்சாகமடைகிறேன். ஆணைக்குழு காத்திரமான முடிவுகளோடு வெளிப்பட்டுள்ளது. அநேக சர்வதேச எதிர்பார்ப்புகளை இம்முடிவுகள் நிறைவு செய்யக்கூடும். இதன் அறிக்கை மிகவிரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதேவேளை, இலங்கையர்கள் தங்களின் சொந்த வழியிலேயே இந்த விவகாரங்களைக் கையாளவேண்டும். இதுவிடயத்தில் வேண்டுமானால் எங்களின் ஆதரவையும், ஊக்குவிப்பையும் கோரலாம்.
மனித உரிமை துஷ்பிரயோகங்கள் சம்பந்தப்பட்ட முறையீடுகளும் எழுந்துள்ளன. இதில் சந்தேகமில்லை. கடந்தகால இடர்பாடுகளிலிருந்து மீள்வதற்கு அரசு, இம்முறையீடுகளுக்குத் தக்கவகையில் பரிகாரம் காண முயல வேண்டும்.
குறிப்பிடத்தக்க தமிழ் வாக்குகளை ஈட்டியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கூட பிரிவினைவாதத் திட்டத்தைத் தொடர்ந்தும் கைக்கொள்ளவில்லை. பல்லினங்களைக் கொண்ட இலங்கைக்குள் தாங்களும் சங்கமிப்பதற்கான ஆவலையே அவர்கள் நேரடியாக என்னிடம் தெரிவித்துக்கொண்டார்கள்.
நீண்டகாலத் தீர்வுக்கு ஒத்துழைக்கவும் முன்வந்துள்ளார்கள். அதேசமயம், தனது பேச்சாளர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்போது சாதகமான செய்தியையே விடுக்க வேண்டுமென்பதை தமிழ்க் கூட்டமைப்பு உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்."பிரிட்டனிலும் இதர நாடுகளிலும் வசிக்கும் இலங்கை வம்சாவளித் தமிழர்களில் பெரும்பாலானோர் ஆக்கிரமிப்பாளரின் தலையீடு இல்லாமலிருந்தால் தம் தாய்நாட்டு மக்களில் பெரும்பாலானோரின் மேம்பாட்டுக்கு உதவத் தயாராகவே இருக்கின்றார்கள்.
இவர்கள் இலங்கைக்குப் பயணிக்க வேண்டும். இங்கு நிலவும் சூழ்நிலையை அவர்களே அவதானிக்க வேண்டும். அத்துடன், வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் அவர்கள் முதலீடு செய்யவேண்டும். இத்தகைய கூட்டமைப்புத் திட்டங்களுக்கு ஏற்ப தற்போது வெளிநாடுகளில் நிதி திரட்டப்படுவதற்கான அறிகுறி தோன்ற ஆரம்பித்துள்ளது.இந்த முன்னெடுப்புகளுக்கு உதவ சாதகமான, இதயபூர்வமான ஆதரவு சர்வதேச சமூகத்திடமிருந்து இலங்கைக்குக் கிடைக்கவேண்டும்.இப்படி அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment