Wednesday, January 04, 2012

பெரியாறு விவகாரம்: தமிழகத்திற்கு சாதகம்! கேரளாவின் சிறுபிள்ளைத் தனத்திற்கு குட்டு!!

முல்லைப் பெரியாறு அணையில், எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்த ஐவர் குழு, அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கு குறைத்திட வேண்டுமென்ற கேரளாவின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டது. இது தமிழக அரசின் நிலைக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. அடுத்த கூட்டம் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக, நீதிபதி ஆனந்த் தலைமையில், ஐவர் குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. அணை பலமாக உள்ளதா, இல்லையா என்பதை ஆராய்ந்து, அறிக்கை தரும்படி, இந்த ஐவர் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அணையின் பலம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி, குழுவில் இடம் பெற்றுள்ள தத்தே மற்றும் மேத்தா ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அணை பகுதிக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி, அறிக்கை தயாரித்தனர்.

இந்நிலையில், ஐவர் குழு நேற்று முன்தினம் டில்லியில் கூடியது. முதல் நாளான அன்று, இரு தரப்பிலும் வழக்கறிஞர்களின் வாதம் நடைபெற்றது. மேலும், வல்லுனர் குழு சார்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கேரள அரசின் புதிய அணை வாதத்திற்கு ஆதரவு காட்டவில்லை. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.தத்தே மற்றும் மேத்தா ஆகியோர் ஆராய்ந்து அளித்த அந்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், இடுக்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அணைக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. முல்லைப் பெரியாறு, வைகை, சிறுதோணி உள்ளிட்ட அணைகள் சமீபத்திய நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டனவா என்று பார்த்த போது, எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை.
மேலும், முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது. இக்கருத்தை ஐவர் குழுவும் ஏற்றிருக்கிறது.
தவிர தத்தேயும், மேத்தாவும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டனர் என்று கூறி, அவர்களை நீக்க வேண்டுமென்று கேரளா சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் மனுவை பரிசீலனை செய்த ஐவர் குழு, இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், அவர்களை நீக்கம் செய்திட முடியாது என்று கூறி புகார் மனுவை நிராகரிப்பதாக தெரிவித்தது.
அதுமட்டுமல்லாது, கேரளா சார்பில் அணையின் நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து, 120 அடி வரை குறைத்திட வேண்டுமென்று கோரி அளிக்கப்பட்டிருந்த மனுவையும் நிராகரித்தது.
தாங்கள் ஆய்வு செய்வதற்கு முன் அணையின் நீர் தேக்க அளவை 136 அடியாக தொடரலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்தை சுட்டிக் காட்டி, அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டுமா, வேண்டாமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியது.
இது விஷயமாக ஏற்கனவே கேரள எம்.பி,க்கள் பிரதமருக்கு தெரிவித்த மனு தங்கள் ஆலோசனைக்கு வந்ததாகவும், அதை பற்றிய கருத்துக்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டிருக்கிறது.
தவிரவும், முதல் நாள் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தங்களது வாதத்தின் போது, அணை பழமையானதாகி விட்டதே தவிர, அணையில் விரிசல் ஏதும் இல்லை என, கேரள வழக்கறிஞர்கள் கூறியதையும், ஐவர் குழு சுட்டிக் காட்டியது.
இனி மேலும் கால நீட்டிப்பு கோரப் போவதில்லை என்பதால், வரும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தன் இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு ஐவர் குழு முடிவெடுத்துள்ளது. இது தமிழகம் சார்பில் வலியுறுத்திய விஷயங்களுக்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில், தன் இறுதி அறிக்கையை நீதிபதி ஆனந்த் தயாரிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment