Wednesday, January 04, 2012

தமிழர்களுக்கு எதிரான புலம்பெயர் பிரச்சாரத்தைக் கருணா மூலம் நிறைவேற்றும் அரசு!

விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகளில் ஒருவரும், அவ் அமைப்பைப் பிளவுபடுத்தியவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா கனடாவிற்கு சிறீலங்கா அரச தரப்பிலான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் 27ம் திகதி சிறீலங்கா ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகர் ஒருவருடன் இணைந்து மேற்கொண்ட இப் பயணத்தின் போது விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.


அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு அழைத்து அதனுடன் உத்தியோகபூர்வ சந்திப்புக்களை கனடா மேற்கொண்டதையடுத்து இது விடயத்தில் சிறீலங்கா விழிப்பாகச் செயற்பட்டு வட-கிழக்குத் தமிழர்கள் இணைந்து வாழ்தல் சாத்தியமல்ல என்ற கருப்பொருளை கருணா மூலம் கனடாவின் முடிவெடுக்கும் தரப்புக்களிடம் பரப்பியுள்ளதாகத் தெரியவருகிறது.

மனிதவுரிமை மீறல்கள், சிறார்களைப் படையில் இணைத்தல் மற்றும் யுத்தக்குற்ற மீறல்களில் சம்பந்தப்பட்ட கருணாவிற்கு வீசா வழங்கப்பட்ட செய்தியானது கனடிய மனிதவுரிமை அமைப்புக்களை கனடாவின் போக்குக் குறித்த கரிசனைக்கு இட்டுச் சென்றுள்ளது.

போராளிகளாக இருந்து அரசியலில் பிரவேசித்தவர்கள் மீது கடும்போக்கைக் கடைப்பிடித்து வந்த கனடா கடந்த காலத்தில் கருணா வீசாவிற்கு விண்ணப்பித்திருந்த போது அதனை நிராகரித்திருந்தது. அதுபோலவே டக்ளஸ் தேவானந்தாவின் வீசா விண்ணப்பத்தையும் நிராகரித்திருந்தது.

இருந்த போதும் இப்போது நிகழ்ந்துள்ள இம் மாற்றத்திற்கு மகிந்த ராஜபக்சவினது நேரடித் தலையீடும் அவரது ஆலோசகர்களின் செயற்பாடுகளுமே காரணம் எனத் தெரியவருகிறது. ராஜபக்சவின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் காரணத்தால் இராஜதந்திரக் கடவுச்சீட்டைக் கருணா கொண்டிருந்தாலும்,

அவர் லண்டனிற்கு நவம்பர் 2007 விஜயம் செய்த போது லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு போலியான இராஜதந்திரக் கடவுச்சீட்டில் பயணம் செய்ததற்காக ஒன்பது மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். இந்தக் கடவுச்சீட்டு தனக்கு கோத்தபாய ராஜபக்சவால் வழங்கப்பட்டதாக அப்போது பிரித்தானிய நீதிமன்றில் கருணா தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டு பொதுநலவாய நாடொன்றில் சிறை வைக்கப்பட்ட ஒரு நபருக்கு பொதுநலவாய நாடுகளில் முக்கியமானதான கனடா வீசா வழங்கியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஈழப்போர் இரண்டின் ஆரம்பத்தில் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் பணியாற்றிய பொலிசாரை சுற்றி வளைத்து போது அவர்களை புலிகளிடம் சரணடையுமாறு பிரேமதாசா அரசு கேட்டிருந்தது. அதன்படி சரணடைந்த 600 பொலிசார் யூன் 11, 1990ல் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அதற்காக காரணமாகக் கருணாவை குற்றஞ்சாட்டும் மேற்படி பொலிசாரின் குடும்பத்தினர் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டுமெனவும் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமெனவும் இரு வாரங்களிற்கு முன்னர் மகிந்தவின் அரசைக் கேட்டிருந்த நிலையிலேயே கருணாவின் கனடாவிற்கான இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

No comments:

Post a Comment