விக்னேஸ்வரன் முன்னிலையில் ஆனந்தி சசிதரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள மாட்டார்?கொழும்பு ஆங்கில ஊடகம்.
வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கூட்டமைப்பு வேட்பாளர் ஆனந்த சசிதரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள மாட்டார் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. புதிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் நடைபெறவுள்ள பதவிப் பிரமாண நிகழ்வுகளை புறக்கணிக்க ஆனந்தி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள எடுத்தத் தீர்மானத்திற்கு ஆனந்தி கடும் ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளார். எனவே, விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 11ம் திகதிக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது.
உத்தியோகபூர்வ பதவிப் பிரமாண நிகழ்வுகளில் பங்கேற்காது சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள ஆனந்தி சசிதரன் தீர்மானித்துள்ளார். வட மகாக்ணசபைத் தேர்தலில் ஆனந்தி சசிதரன் இரண்டாவது அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களை வாக்குகளைப் பெற்றுக்கொள்ள தம்மை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்திக் கொண்டதாக ஆனந்தி சசிதரன் விசனம் வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பிலும் கூட்டமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் இது குறித்து அனந்தி சநிதரன் உத்தியோகபூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்பதோடு தமிழ் ஊடகங்களும் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை.
No comments:
Post a Comment