Tuesday, April 15, 2014

சிறிலங்கா தலைமை தாங்கும் கொமன்வெல்த்துக்கான 20 மில்லியன் டொலர் நிதியை நிறுத்தியது கனடா

சிறிலங்கா தலைமை தாங்கும் கொமன்வெல்த் அமைப்புக்கான 20 மில்லியன் டொலர் நிதியுதவியை கனடா நிறுத்தியுள்ளது.

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையைக் காரணம் காட்டி, அந்த நாடு தலைமை தாங்கும், கொமன்வெல்த் அமைப்புக்கு ஆண்டு தோறும் வழங்கி வரும் நிதியையே கனடா நிறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட், “சிறிலங்காவில் இடம்பெற்ற மோசமான அனைத்துலக மனிதஉரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு, பொறுப்புக்கூறப்படாதது குறித்து கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால், சிறிலங்கா தலைமை தாங்கும் கொமன்வெல்த் அமைப்புக்கு வழங்கப்படும் 20 மில்லியன் டொலர் நிதியை நிறுத்தி வைப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.


சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமைகள் விவகாரத்திலோ, அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலோ அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொமன்வெல்த் அமைப்புக்கு ஆண்டு தோறும் கனடா 10 மில்லியன் டொலரை தானாக முன்வந்து அளித்து வருகிறது.

இந்த நிதியையே சிறிலங்கா தலைமை தாங்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் நிறுத்தி வைக்க கனடா முடிவு செய்துள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவதற்கும், தலைமைப் பொறுப்பு அதற்கு வழங்கப்படுவதற்கும் கனடா கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.

கடந்த நொவம்பரில் கொழும்பில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டை கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் புறக்கணித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.source:pp

No comments:

Post a Comment