ஆட்கடத்தல் குற்றத்தால் ஏற்படுகின்ற மிகப் பெரிய அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் விதமாகவே சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரமானது தற்போது கனேடிய உச்சநீதிமன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
"புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான கனடாவின் மனிதாபிமான விழுமியங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பது தற்போது விவாதிக்கப்படுகிறது. அவசியமற்றதைச் செய்கின்ற ஒருவருக்கும், மனிதாபிமான நோக்குடன் செய்பவருக்கும் இடையில் வேறுபாட்டைக் காண்பிக்கின்ற ஒன்றாக இது காணப்படுகிறது. கனடாவின் ஆட்கடத்தல் சட்டம் முற்றிலும் தெளிவற்றதாகக் காணப்படுகிறது" என புகலிடம் கோரிக்கை மறுக்கப்பட்டு தற்போது மேன்முறையீடு செய்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் சட்டவாளரான ரவோல் பௌலாக்கிய தெரிவித்துள்ளார்.
500 பேரை ஏற்றிக் கொண்டு மூன்று மாத காலப் பயணத்தின் பின்னர், ஆகஸ்ட் 2010ல் கனடாவின் மேற்குக் கரையை அடைந்த MV Sun Sea கப்பலிலிருந்த மூன்று சிறிலங்காத் தமிழர்களின் மனுக்களை கனேடிய உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
இந்தக் கடற்பயணத்திற்காகத் தான் 3500 டொலர்களைக் கட்டணமாகச் செலுத்தியதாகவும், மீதி 20,000 டொலர்களைத் தனது தந்தையார் ஆட்கடத்தல்காரர்களிடம் வழங்குவதாகக் கூறியதாகவும் இந்தக் கப்பலில் பயணித்தவரும் தற்போது புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ளவருமான சிறிலங்காத் தமிழர் ஒருவர் தெரிவித்தார். தான் கப்பலில் பயணம் செய்த போது, மாலுமிகளுக்கு உணவு சமைத்து வழங்கியதாகவும் மழைநீரை சேகரித்து மேலதிக உணவுக்காக வழங்கியதாகவும் ஏனைய கப்பல்கள் தொடர்பாகக் கண்காணிப்பை மேற்கொண்டதாகவும் சிறிலங்காத் தமிழர் மேலும் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றில் மனுவைத் தாக்கல் செய்துள்ள J.P என அடையாளங் காட்டப்படும் கணவனும் G.J என அடையாளங் காண்பிக்கப்படும் மனைவியும் தாம் தமது பயணத்திற்கான தலா 30,000 டொலர்களை வழங்கியதாகவும் கப்பலைச் செலுத்துவதற்கு உதவுமாறு J.P யிடம் கேட்கப்பட்டதாகவும் இதனால் தான் இந்தப் பணியைச் செய்ததாகவும், ஆனால் இந்தக் கப்பலின் உதவி திசைகாட்டுனராகத் தான் பணிபுரியவில்லை எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மூவரும் கனடாவின் சட்டத்தின் படி, ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகவும் இதனால் இவர்களை நாடு கடத்துமாறும் கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் சபை தெரிவித்திருந்தது. ஆனால் இவர்கள் வருவாயை நோக்காகக் கொண்டு இந்தச் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை எனவும் இவர்கள் மனிதாபிமான அடிப்படையிலேயே செயற்பட்டதாகவும் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள் சார்பாக வாதிடும் சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கியுபாவைச் சேர்ந்தவரான ஜீசஸ் றொட்றிக் கெர்னாண்டேஸ் என்பவருக்கு எதிராகவும் ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இவர் தொடர்பான வழக்கு கனேடிய உச்ச நீதிமன்றில் வாதிடப்படுகிறது. கியூபா அரசாங்கத்தை விமர்சித்து வந்த கெர்னாண்டேஸ் 2001ல் அமெரிக்காவின் புளோரிடவில் தஞ்சம் புகுந்தார். இவருக்கு அங்கு அகதி நிலை வழங்கப்பட்டது. பின்னர் 2003ல், இவர் படகொன்றில் கியூபாவுக்குச் சென்றதுடன் அங்கிருந்த தனது குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட 48 பேரை கனடாவுக்குக் கொண்டு வரும்போது அமெரிக்க கரையோரப் பாதுகாப்புப் படையால் மறிக்கப்பட்டு இவருக்கு எதிராக ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டதுடன், அமெரிக்காவால் இவருக்கு வழங்கப்பட்ட அகதிநிலை மீளப்பெறப்பட்டது.
இவர் இதன்பின்னர் கியூபாவுக்குத் திரும்பிச் செல்லாது கனடாவில் தஞ்சம் புகுந்தார். இவர் முன்னர் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கனடா இவரது புகலிடக் கோரிக்கையை ஏற்க மறுத்தது. ஆனால் இவர் எந்தவொரு நிதியீட்டுவதை நோக்காகக் கொண்டும் தனது படகுப் பயணத்தை மேற்கொள்ளவில்லை எனவும், இவர் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான செயலில் ஈடுபட்டதாகவும் இவரது வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர்.
கனடாவின் ஆட்கடத்தலுக்கு எதிரான சட்டமானது மிகவும் விரிவாக உள்ளதாகவும் இது தேவையற்றதெனவும், இது மீண்டும் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டு சீர்திருத்தப்பட வேண்டும் எனவும் 2013 ஜனவரியில் கனடாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்னே சில்வர்மான் குறிப்பிட்டிருந்தார்.
செய்தி வழிமூலம் : OTTAWA CITIZEN BY DOUGLAS QUAN.
No comments:
Post a Comment