Wednesday, April 23, 2014

மஹிந்த சிந்தனை மக்கள் நிராகரித்துவிட்டனர் – சி.வி.

wicki top_CIவடமாகாண சபைத் தேர்தலில் மகிந்த சிந்தனை உள்ளடக்கிய அரசாங்கக் கொள்கைகளை மக்கள் நிராகரித்ததுடன், போரின் பின்னர் எமது மாகாணத்தைக் கட்டியெழுப்பவும், புனர்நிர்மாணத்தில் ஈடுபடவும், நாட்டில் சமரசத்தை ஏற்படுத்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று(21) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது, இணைத் தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
‘உங்கள் எல்லோருடைய மனதிலும் ஒரு கேள்வி எழக்கூடும். அதாவது சுமார் ஆறு மாதங்கள் பதவியில் இருந்த பின்னர் நான் ஏன் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுகின்றேன் என்று. என்னைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த என் மக்களுக்கும், உங்களுக்கும் இப் பங்குபற்றலுக்கான காரணத்தை எடுத்துரைப்பது எனது கடமை என எண்ணுகின்றேன்.
எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போருக்குப் பின்னரான மக்களின் தேவைகளையும், முன்னுரிமைகளையும் அடையாளங் காட்டி நாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் போரின் பின்னரான குறுகிய கால, நீண்ட காலத் தேவைகளை இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டுப் பூர்த்தி செய்வோம் என்று கூறித் தேர்தலில் பங்குபற்றினோம்.
எமது அரசியல் ரீதியிலான தீர்வையும் முன்வைத்தோம். அதாவது வன்முறைகளை களைந்து பிரிவுபடாத இலங்கையினுள் சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை முன்வைத்தோம். ஆகக் கூடிய அதிகாரப் பகிர்வே நாட்டுக்கு நலமுடையது என்பதே எமது கோஷமாக இருந்தது.தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 பிரதிநிதிகளினுள் எம்மவர்கள் 30 பேர் மிகப் அதிகப்படியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை
நாம் தேர்தலில் வென்ற சில வாரங்களினுள் எமக்கொன்று புலப்பட்டது. இன்றைய தேசியக் கொள்கைகளும், அரசாங்கக் கட்டுப்பாடுகளும் வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும், வாழ்க்கை முறைகளையுங் கருத்தில் எடுத்துச் செயற்படுவதாக அமையவில்லை என்பதே அது. அரசாங்கத்தின் கொள்கைகள் ஆளும் கட்சியின் நலன்களையும் அதன் சில முக்கிய பிரமுகர்களின் நலன்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சில அலுவலர்களின் நலன்களையும் முன்வைத்தே அமைந்திருப்பதையும்; நாம் உணர்ந்தோம். மத்திய அரசாங்க ஆளும் கட்சி தருவதை மாகாண மக்கள் ஏற்றே தீர வேண்டும் என்ற பாணியில் தான் நடவடிக்கைகள் சென்று கொண்டிருப்பதை அவதானித்தோம்.
எம்மைப் பொறுத்தவரையில் இந்நிலையை எவ்வாறு கணிக்கின்றோம், நோக்குகின்றோம் என்பதை அண்மையில் ‘துரித மாகாண அபிவிருத்தி – முன்னேற்றத்தின் மார்க்கம்’ என்ற பொருளில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் கூட்டப்பட்ட தேசிய கருத்தரங்கத்தின் முன்னிலையில் நான் பேசிய போது எடுத்து கூறினேன். அதில் அரசாங்கத்தின் நலன்களுக்கு முரணற்ற முறையில், ஆனால் மக்களுக்குப் பயனுள்ள விதத்தில் எவ்வாறு முன் செல்ல முடியும் என்று குறிப்படும் போது பின்வருமாறு கூறியிருந்தேன்
‘அபிவிருத்தியின் போது அனைவரையும் உள்ளடக்கக் கூடிய அர்ப்பணிப்பு நிறைந்த ஓர் அணுகுமுறை, பொதுமக்களின் விசேட தேவைகள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளிடையே ஒரு சமநிலையைப் பேணிப் பாதுகாக்க வேண்டியமை போன்றவை இன்றியமையாதவை’ என்று ஆங்கிலத்தில் அமைந்த அப்பேச்சின் ஆங்கில, தமிழ், சிங்கள மொழிப் பிரதிகள் ஒரே கைநூலாக வெளியிடப்பட்டுள்ளன.
அக் கைநூலின் பிரதியொன்றை இங்கு சமர்ப்பிக்கின்றேன். மக்களின் அமோக ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வடமாகாண சபையின் முதல் முதலமைச்சர் என்ற முறையில் அவரால் வழங்கப்பட்ட அவ்வுரை எமது வடமாகாண சபையின் கொள்கைக் கருத்துக்களைப் பிரதிபலிப்பதால் அதனை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட நடவடிக்கைக் குறிப்புக்களுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இணைத் தலைவராக செயற்பட ஜனாதிபதி வேண்டுகோள்
இங்கொரு முக்கியமான விடயத்தை உங்களுக்குக் கூறி வைக்க வேண்டும். 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதியிடப்பட்ட அதாவது ஜனாதிபதி அவர்களின் பிறந்த நாளன்று திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று அவரிடமிருந்து கிடைக்கப்பெற்றேன். அதன் பிரதி ஒன்றை இங்கு சமர்ப்பிக்கின்றேன். அதில் அவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு நான் இணைத் தலைவராகத் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மேலும் இம்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது வருங்காலம் சம்பந்தமான மஹிந்த சிந்தனையை நிலை பெறச் செய்யத் தயாரிக்கப்பட்ட 2013 தொடக்கம் 2016 வரையிலான மாவட்ட தர மத்திம கால முதலீட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்து, நடைமுறைப்படுத்தி, ஆற்றுப்படுத்திக் கண்காணிப்பதற்காக அரசாங்கத்தினாலும், அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் உருவாக்கப்பட்டதை நடைமுறைப்படுத்தவே நியமிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இது இவ்வாறிருந்தும் கூட நாங்கள் 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கம் 2014 ஜனவரி வரையில் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைக்கலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டோம். இவ்வருடம் ஜனவரி 2ஆம் திகதி மாண்புமிகு ஜனாதிபதியையும் சென்று சந்தித்தேன்.
அத்தருணத்தில் 13வது திருத்தச் சட்டத்தின் வலுவின்மையைச் சுட்டிக்காட்டி அதன் கீழான கட்டமைப்புக்கள் போதியவாறான அதிகாரங்களைத் தராத பட்சத்திலும்கூட போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நலன்கருதி நாங்கள் ஒத்துழைக்க முன்வந்துள்ளோம் என்ற கருத்தைத் தெரிவித்தேன்.
அந்த நேரத்தில், தேர்தலில் மக்கள் ஆதரவைப் பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்கள் தற்போது செயற்பட்டு வருவதால் ஜனாதிபதி செயலணியின் பணிகள் அனைத்தையும் எமக்குக் கையளிக்குமாறு கோரினேன். தொடர்ந்து அவற்றை எம்மால் பரிபாலித்து வரமுடியும் என்றும் கூறினேன்.
ஆனால் துரதிஷ்டவசமாக அது பற்றிய எமக்குச் சார்பான ஒரு முடிவை ஜனாதிபதி எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் தொடர்ந்து மத்திய அரசாங்கக் கட்டமைப்புக்களே வடமாகாண நிர்வாகப் பரிபாலனத்தைக் கொண்டு நடத்தப்பட்டு வரப்படுகின்றது.
மாகாண சபை அதிகாரங்களை அரசாங்க வசப்படுத்த இடமளிக்க முடியாது
இங்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன். அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கென சில விடயங்களும், மத்திய அரசாங்கத்திற்கென சில விடயங்களும், இரண்டிற்கும்; பொதுவான சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் காரணத்தினால் தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கூட்டப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால் ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் ஊடாக சட்டத்தால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன் வசப்படுத்த இடமளிக்க முடியாது. அந்த அதிகாரங்கள் ஊடாக அந்த விடயங்கள் சம்பந்தமாக கொள்கைகள் வகுப்பதும் அவற்றை நெறிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதும் மாகாண சபைகளையே சாரும் என்பதை இத் தருணத்தில் கூறி வைக்கின்றேன்.
அவ்வாறு நடக்கத் தலைப்பட்டால் மக்களால் புறந்தள்ளப்பட்டவர்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர்களின் தோளில் ஏறிச் சவாரி செய்பவர்களாய் ஆகி விடுவர்.
வடமாகாணத்தின் தேவைகள் தனித்துவமானது
ஜனவரி 2 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது எல்லா மாகாண சபைகளையும் ஒரே மாதிரியாகவே தாங்கள் நடத்திச் செல்வதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் நான் கூறினேன்- வடமாகாணம் மற்றைய மாகாணசபைகள் போலல்லாது போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டு வந்துள்ளதால் அதன் பிரச்சனைகளும், தேவைகளும் விசேடமானதும், தனித்துவமானதும் என்று.
அத்துடன் அவற்றிற்கான தீர்வுகள் பிற மாகாணப் பிரச்சினைகளைத் தீர்ப்பது போலல்லாது வேறு விதமாக அமைந்திருப்பன என்பதையும் சுட்டிக் காட்டினேன். எல்லோருக்கும் ஒரே மாதிரியான சப்பாத்து சைஸ் பொருந்தும் என்று நினைப்பது தவறு என்றும் கூறி வைத்தேன்.
மேலும் வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த, வரும் செயற்றிட்டங்களும், திட்ட அமுலாக்கங்களும் வடமாகாண சபையின் கருத்தொருமித்தல் இல்லாது அவசர அவசரமாகக் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையும் அச்சத்துடன் அவதானிக்கின்றோம்.
இந்தப் பின்னணியில் தான் இதுவரை நாங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றாது இருந்து வந்தோம். அதுபற்றி அரசாங்கம் எம்மை விமர்சிக்கவும் தவறவில்லை. ஆனால் விசித்திரமாக மன்னார், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு நாங்கள் வருவதாக அறிவித்ததும் இருமுறை அக்குழுக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மக்களுக்காக எமது முடிவினை மாற்றி கொண்டோம்
என்றாலும் மக்கள் எதிர்பார்ப்புகளை புறக்கணிக்காது நாங்கள் வடமாகாண சபையின் நிர்வாகச் செயற்பாட்டில் உள்ளிடுவது அவசியம் என்று கருதி தற்பொழுது எமது முடிவை மாற்றி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டங்களில் பங்குபற்ற முன்வந்துள்ளோம்.
இப்படியான நடவடிக்கை ஊடாக எமக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தேசியக் கொள்கைகளைக் கட்டுப்படுத்தவும், மறு ஆய்வு செய்யவும், அவற்றின் தாக்கங்களைக் குறைக்கவும் நாம் எண்ணியுள்ளோம். எமக்கு எம் மக்களின் போரின் பின்னரான தேவைகளும், முன்னுரிமைகளுமே மிக முக்கியமானவையாகத் தோன்றுகின்றன.
அவற்றை முன்னிறுத்தவும், முடித்துக் கொடுக்கவுமே எம்மை ஜனநாயக ரீதியில் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்களை வீணடிக்காது எவ்வளவு தான் மத்திய அரசாங்கம் தனது முகவர்களின் ஊடாக வடமாகாண மக்களின் நலன்களுக்கு எதிராக நடக்க எத்தனிப்பினும் அவற்றை முறியடிப்பதற்கே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். மாறாக மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கம் நடந்து கொண்டால் அவற்றிற்கு உறுதுணையாக இயங்கவும் நாங்கள் பின்நிற்க மாட்டோம்.
அரசாங்கம் அவசரப்படுகின்றது 
ஆனால் அண்மையில் ஒரு விடயத்தை அவதானித்துள்ளோம். ஜெனீவா பிரேரணை அலசி ஆராயப்பட்ட போதே அதனைக் காணக் கூடியதாக இருந்தது. அதாவது அரசாங்கம் தற்பொழுது வடமாகாணத்தில் அவசர அவசரமாகப் பல திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த முன்வந்துள்ளது.
நான் ஐக்கிய நாடுகள் சபை நிரந்தர வதிவாளருடன் எமது மக்களின் தேவைகள் பற்றிய கணிப்பு நடத்த வேண்டும் என்று கேட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்த போது அரசாங்கம் தானாகவே உள் நுழைந்து அது பற்றிய ஒரு உடன்பாட்டில் ஐ.நாவுடன் கைச்சாத்திட்டுள்ளது.
ஆகவே எமது வடமாகாணசபை இதுவரையில் என்ன செய்தது என்று கேட்போருக்கு இரண்டு பதில்கள் கூறுகின்றேன். எமது ஒவ்வொரு அமைச்சும் கடந்த ஆறு மாதங்கள் செய்த வேலைகளைக் கைநூல்களாக வெளியிடுகின்றன. அதே நேரத்தில் இன்னொன்று கூற விரும்புகின்றேன். நாங்கள் பதவியில் இருந்தால் மட்டும் போதும் – எங்கே தம்மையும் தம் சகாக்களையும் அடுத்த தேர்தலில் மக்கள் ஓரங்கட்டி விடுவார்களோ? என்ற பயத்தில் அரசாங்கம் நாம் செய்ய வேண்டிய வேலைகளைத் தாமே இழுத்துப் போட்டுக் கொண்டு செயலாற்றத் துணிந்துள்ளார்கள். யார் நெல்லைக் குற்றினாலும் நெல் அரிசியாக வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment