Wednesday, April 23, 2014

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு! சித்திரை முதல்நாள் சித்திரைப் புத்தாண்டு என்று கொண்டாடலாம்! நக்கீரன்

சித்திரை முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக இந்துசமயத் தமிழர்கள் கொண்டாடி வந்திருக்கின்றனர். அது எப்போது தொடக்கம் கொண்டாடப்பட்டு வருசிறது என்பது தெரியாவிட்டாலும் அதன் காலம் இருநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள எவனும் அவற்றைத் தமிழ் ஆண்டுகள் என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இந்த 60 ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.


  
நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே 'பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்' என்று தமிழ்க் கலை களஞ்சியமான 'அபிதான சிந்தாமணி' கூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் 'பிரபவ' ஆண்டிலிருந்து தான் தொடங்க வேண்டும். இதனால் ஆண்டுகளை 60 க்கு அப்பால் எண்ணமுடியாது இருக்கிறது. இது அறிவுக்கு ஒவ்வாததாகும்.
இப்போது வழங்கும் 'பிரபவ' தொடங்கி 'அட்சய' ஈறாக உள்ள 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டதனால் அவற்றின் பெயர்கள் வட மொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம்7 இந்து 10-03-1940)
இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் இரண்டையும் எண்ணிப் பார்த்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்து மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தார்கள்.
1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது
2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது
3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31. வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 யைக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. இந்த முடிவை எடுத்தவர்களில் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
அதன் பின் 1937 டிசெம்பர் 26 இல் திருச்சியில் 'அகில இந்திய தமிழர் மாநாடு' சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிர மணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. மறைமலை அடிகளார், பி.டி. இராசன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும் பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது. தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் சான்றுகளுடன் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா என்று அறுதியிட்டுப் பேசினார்.
இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்' என்று விளக்கம் கொடுத்தார்.
தமிழ்ப் புத்தாண்டு குறித்து ஈழத்து அறிஞர் பண்டிதர் க.பொ. இரத்தினம் அவர்கள் "சித்திரை வருடப்பிறப்பு என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன்மூலம்) தமிழினத்தின் பழமையையும் பண்பையும் சிறப்பையும் செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும் தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன'' என மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
1969 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது.
1971 இல் கலைஞர் கருணாநிதி ஆட்சி திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையை 1971 முதல் அரசு நாள்குறிப்பிலும் 1972 முதல் அரசிதழிலும் வெளியிட்டது. 1981 முதல் எம்ஜிஆர் ஆட்சி அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றுமாறு ஆணை பிறப்பித்தது.
தமிழ்ப் புத்தாண்டு தையா அல்லது சித்திரையா என்ற விவாதத்திற்கு தமிழக சட்ட மன்றத்தில் சனவரி 28, 2008 இல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்ட அடிப்படையில் ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. தை முதல் நாள் தமிழ்த் புத்தாண்டு என்றும் அதுவே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் எனவும் அந்தத் தீர்மானம் மொழிந்தது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தார்கள்.
ஆனால் ஜெயலலிதா மட்டும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. "நான் ஒரு பிராமண இனத்தைச் சேர்ந்தவள். சாத்திரங்களின்படி அமைந்துள்ள புதுவருடத்தைத் தமிழ் என்ற போர்வையில் களங்கம் செய்வது தவறு. இது பிராமணிய இனத்தினையே அவதூறு செய்வது போல் உள்ளது. எனவே நான் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை இந்நடை முறையைத் தடைசெய்வேன்" என்று பேசினார். பேசியது போலவே ஆரியப் பண்பாட்டின் அடையாளமாக, தமிழர் மீது தொடுக்கப்பட்ட பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் வாள் வீச்சாகப் புதிய சட்டம் 23.8.2011 அன்று பாய்ந்துவிட்டது.
2011 இல் மறுபடியும் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா கலைஞர் கருணாநிதி ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட சட்டத்தை இல்லாதொழித்தார். வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. இதன் மூலம் ஜெயலலிதா தன்னை ஒரு இந்து அடிப்படைவாதி என்பதோடு ஆரியர் - திராவிடப் போர் தொடர்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டிக் கொண்டார்.
கலைஞர் கருணாநிதி எதைச் செய்தாலும் - அது நல்லதோ கெட்டதோ - அதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்ப்பது அல்லது மாற்றி அமைப்பது என்பதை ஜெயலலிதா ஒரு நோன்பாகக் கொண்டிருக்கிறார். இந்தக் காழ்புணர்ச்சி காரணமாகவே ஆட்சிக் கட்டில் ஏறிய அடுத்த வினாடி சமச்சீர் கல்வி, அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக அரசு தலைமைச் செயலகம் ஆகியவற்றை மாற்றப் போவதாக அறிக்கை விட்டார். அண்ணா நூற்றாண்டு நூலகம் தெற்காசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். நல்ல காலமாக சமச்சீர் கல்வியை மாற்ற முடியாது என உயர் நீதி மன்றம் அவர் தலைமீது குட்டியது. அதன் பின்னர் பாடப் புத்தகங்களில் இருந்த திருவள்ளுவர் படம் உட்பட பல கட்டுரைகளைக் கிழித்தெறிந்துவிட்டுப் பாடப் புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் அண்ணா நூற்றாண்டு நினைவாகக் கட்டப்பட்ட நூலகத்தை ஜெயலலிதா இழுத்து மூடிவிட்டார். அது போலவே 1,200 கோடி செலவில் கட்டிய தமிழ்நாடு தலைமைச் செயலகத்தைச் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றிவிட்டார்.
அண்ணாவின் பெயரைக் கட்சியிலும் அண்ணாவின் படத்தைக் கொடியிலும் வைத்திருக்கும் ஜெயலலிதா அண்ணா நூற்றாண்டு நுாலகத்தை குழந்தைகள் மருத்துவமனை ஆக்கத் தீர்மானம் எடுத்தது பேரறிஞர் அண்ணாவுக்குச் செய்யும் பச்சை இரண்டகமாகும். அண்ணா பிறந்த நாளில் அவரது நினைவுச் சிலைக்கு மாலையிடுவது அரசியல் நாடகமாகும். தமிழ்ப் புத்தாண்டை தை முதல் நாளில் இருந்து சித்திரை முதல் நாளிற்கு மாற்றியதை நியாயப்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா நீண்ட அறிக்கை ஒன்றினை அப்போது சட்டசபையில் படித்தார். அதில் தமிழ்ப் புத்தாண்டுச் சட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சுயவிளம்பரத்துக்காக இயற்றப்பட்டது என்றும் இதனால் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என்ற கண்டுபிடிப்பை ஜெயலலிதா வெளியிட்டார்.
அப்படிப் பார்க்கப்போனால் தந்தை பெரியார், தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் எல்லாம் தங்கள் சுயவிளம்பரத்திற்காகத் தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார்களா?
சென்னை Convent Church Park பள்ளிக்கூடத்தில் ஆங்கிலமொழி மூலம் பல்கலைக் கழக புகுமுகத் தேர்வு வகுப்பு மட்டும் படித்த முதல்வர் ஜெயலலிதா சைவ சித்தாந்தி தமிழ்க் கடல் மறைமலை அடிகளார், முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்ற அறிஞர்களைவிடத் தனக்கு அதிகம் தெரியும் என்பது அறிவுடமை அன்று. அஃது அவரது அறியாமையை அல்லது ஆணவத்தைக் காட்டுகிறது எனலாம்.
பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நர்ச்சினார்க்கினியர் எழுதிய உரை மூலம் தெரிகிறது. இரண்டு நூற்றாண்டுக்கு முன்பின்னாகச் சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தமிழ்ப் புத்தாண்டைச் சித்திரைக்கு மாற்றியதற்கு இன்னொரு காரணத்தையும் மொழிந்தார். அது ஆண்டின் தொடக்கம் வசந்தமாக (இளவேனில்) இருப்பதற்காகக் கணிக்கப்பட்டதே சித்திரைப் புத்தாண்டு எனக் கூறினார். இந்தக் காரணம் அவருக்கு வானியல் பற்றிய அறிவு பற்றாது என்பதையே காட்டுகிறது. சோதிடர்களைக் கேட்டால் ஞாயிறு புவியைச் சுற்றி வருவதாகவே சொல்வார்கள். அதன் அடிப்படையிலேயே சாதகம் கணிக்கப்படுகிறது. உண்மையில் புவிதான் ஞாயிறைச் சுற்றிவருகிறது.
புவி தனது அச்சில் சுற்றும் அதே வேளை ஞாயிறையும் ஒரு நீள் வட்ட வடிவான ஓடு பாதையில் (ecliptic) சுற்றிவருகிறது. புவி தனது அச்சில் தன்னைத்தானே விநாடிக்கு 30 கிமீ (மணிக்கு 108,000 கிமீ) வேகத்தில் சுழல்கிறது. ஒருமுறை புவி ஞாயிறைச் சுற்றிவர 365.242 நாட்களை எடுக்கிறது. சனவரி 3 இல் புவி ஞாயிறுக்கு அண்மையில் (147.3 மில்லியன் கிமீ) காணப்படுகிறது. யூலை 4 இல் புவி ஞாயிறுக்கு சேண்மையில் (152.1 மில்லியன் கிமீ) காணப்படுகிறது. ஆனால் பருவமாற்றத்துக்குப் புவியின் தொலைவு காரணமல்ல. அதே போல் கோள்கள், நட்சத்திரங்களும் காரணமல்ல. புவியின் அச்சு ஓடுபாதையின் செங்குத்துக் கோட்டிற்கு (perpendicular) 23.45 பாகை ஒருக்களித்துக் காணப்படுகிறது. இந்தச் ஒருக்களிப்பில் மாற்றம் ஏற்படுவதில்லை. இதுவே பருவ மாற்றங்களுக்குக் காரணமாகும்.
பருவ மாற்றங்கள்
வட கோளத்தில் செப்தெம்பர் 22 அல்லது 23 (இலையுதிர் சமபகலிரவு) வட துருவம் ஞாயிறுக்கு அண்மையாகவோ சேண்மையாகவோ இல்லாமல் இருக்கும். அதே போல் வட கோளத்தில் மார்ச்சு 20 அல்லது 21 இல் (வேனில் சமபகலிரவு) வட துருவம் ஞாயிறுக்கு அண்மையாகவோ சேண்மையாகவோ இல்லாமல் இருக்கும். இந்தச் சமபகல் இரவு குறுக்குக் கோட்டில் எங்கிருந்தாலும் வேறுபடாது.
இந்த வேனில் சமபகலிரவு நாளே வடகோளத்தில் வேனில் காலத் தொடக்கமாகும். அஃதாவது மார்ச்சு 20 அல்லது 21 வேனில் காலத் தொடக்கமாகும். எனவே ஞாயிறு சித்திரை முதல் நாள் (ஏப்ரில் 13 அல்லது 14) மேட இராசியில் அசுவினி நட்சத்திரத்தில் புகுகிறது (வானியல் கணிப்பின்படி ஞாயிறு வான் நடுக்கோட்டைக் கடக்கும் நாள் ஏப்ரில் 19 ஆகும்) என்பது சரியான கணிப்பே. ஆனால் வேனில் (வசந்த) காலம் ஏப்ரில் 14 இல் தொடங்குகிறது என்பது பிழையான கணிப்பு. வேனில் காலம் மார்ச்சு 20 அல்லது 21 இல் தொடங்குகிறது என்பதுதான் சரி!
சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருப்பது போலவே தை புத்தாண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. தை முதல் (January 14/15) நாள் ஞாயிறு தனது தென்திசை செலவை முடித்துக் கொண்டு தனு இராசியில் இருந்து விலகி - மகர இராசியில் உட்புகுந்து வடதிசைப் பயணத்தத் தொடங்குகிறது.
மேலே கூறியவாறு புவி ஞாயிறை ஒரு நீள்வட்டத்தில் சுற்றிவருகிறது. இது எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றுவது போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. ஒரு வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. அதன் தொடக்கம் எந்தப் புள்ளியிலும் தொடங்கலாம். ஞாயிறின் வடதிசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசிக்கு (பாகை 270) உட்புகும் நாளும் (மகரசங்கராந்தி) வானியல் அடிப்படையில் ஆனதுதான்.
புவி தனது அச்சில் சுழலும் போது ஞாயிறு ' நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அதன் நடுப்பகுதி புடைத்து துருவங்கள் சிறிது தட்டையாக இருப்பதாலும் அதன் அச்சில் தளம்பல் (wobble) ஏற்பட்டு சுற்றும் வேகம் குறைகிறது. இதனால் புவி தனது பாதையில் ஆண்டொன்றுக்கு 50.26 ஆர்க் வினாடிகள் (20 மணித்துளி 14 வினாடி) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. 71.5 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (ஒரு நாள்) ஆகக் கூடிவிடும்.
இந்தப் பின்னேகலை (Precession of Equinoxes) நட்சத்திரத்தை வைத்து ஆண்டைக் கணிக்கும் இந்திய சோதிடர்கள் கணக்கில் எடுப்பதில்லை. வானியலாளர்களும் மேற்குலக சோதிடர்களும் இந்தப் பின்னேகலை கணக்கில் எடுக்கிறார்கள். இந்திய பஞ்சாங்கங்களில் கடந்த 2000 ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் அயனாம்ச வேறுபாடு திருத்தப்படவில்லை. இதனால் பருவகாலங்கள் பிந்திப் போகின்றன. அயனாம்ச வேறுபாட்டைத் திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு வேனில் தொடங்கும் மார்ச்சு 20-21 ஆம் நாள் கொண்டாடப் பட்டிருக்கும். இது போலவே ஏனைய சமய விழாக்கள் பிழையான நாள்களில் கொண்டாடப் படுகின்றன.
தென்னாட்டுப் பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் கிபி ஏழாம் நூற்றாண்டில் வராகமிகரர் வகுத்துத் தந்த காலக்கணிப்பை அப்படியே இன்றும் பின்பற்றி வருகின்றனர். அதனால் 24 நாள்கள் காலக்கணக்கில் பிற்பட்டதாகி இருக்கிறது.
இயற்கையை வழிபட்ட தமிழன் தனது ஆண்டுத் தொடக்கத்தையும் அப்படியே வகுத்துக் கொண்டான். ஒரு நாள் என்பது, சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம். ஒருமாதம் என்பது, ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.
அதேபோல் ஆண்டு என்பது, சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் (உத்ராயணம் தொடங்கும்) நாள் முதல் மீண்டும் அதே நிலை (உத்ராயணம் மீண்டும்) தொடங்கும் வரையுள்ள கால அளவு ஓர் ஆண்டு.
அதாவது பஞ்சாங்கக்காரர்களுக்கு சித்திரை மாதம் முதல் நாள், மத்திய அரசிற்குப் - பெரும்பாலான வட இந்தியப் பஞ்சாங்கங்களின் கணக்குமுறைக்கு - சித்திரை 24 ஆம் நாள் ஆக இருந்து வருகிறது. 1957 இல் இந்திய நடுவண் அரசினால் இலாகிரி என்பவரது தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையமே அயனாம்சத்தைக் கணக்கில் எடுத்து புதிய நாள்காட்டியை உருவாக்கியது.
தமிழ் இந்துக்கள் சித்திரை முதல்நாளை சித்திரைப் புத்தாண்டு என்று தாராளமாகக் கொண்டாடலாம். ஆனால் அது தமிழ்ப் புத்தாண்டல்ல. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிக. அதள் காரணமாகவே "தைப் பிறந்தால் வழி பிறக்கும்' "தை மழை நெய் மழை' முதலான பழமொழிகள் இன்றும் வாழையடி வாழையாக வந்த வாய்மொழிப் பழமொழிகளாகும்.
தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்; நித்திரையில் இருக்கும்
தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்கவந்த ஆரியக்கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டு
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

No comments:

Post a Comment