இவ்வாறு சிறிலங்காவில் போரின் இறுதி மூன்றாண்டுகள் ஐநாவின் பேச்சாளராக பணியாற்றியவரும், சிறிலங்காவின் போரை விபரிக்கும் The Cage என்னும் நூலின் ஆசிரியருமான Gordon Weiss* தனது கருத்தை The Newcastle Herald என்னும் ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் தொடர்பில் ஐ.நா வால் மேற்கொள்ளப்படும் குற்றவியல் விசாரணையானது எவ்வளவு தூரம் வினைத்திறன் மிக்கதாக இருக்கும் என்பது தொடர்பாக கடந்த வாரம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் விவாதித்தன.
போரின் இறுதி மாதங்களில் மட்டும் 40,000 தொடக்கம் 70,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கத்தின் குண்டுத் தாக்குதல்களிலேயே பெருமளவானவர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஐ.நா அறிவித்தது.
அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய பேரவையின் உறுப்பு நாடுகளின் தலைமையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் பல நாடுகளின் ஒத்துழைப்புடன் கடந்த வாரம் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது போரில் ஈடுபட்ட இரு தரப்பினர்களும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதைச் சுட்டிநிற்கின்றது.
பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் எவ்வித பொறுப்பையும் அளிக்காது நான்கு ஆண்டுகளை இழுத்தடித்துள்ளது. இந்த அரசாங்கம் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்றை வழங்க முன்வரவில்லை.
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை அவுஸ்திரேலியா எதிர்த்துள்ளது. இத்தீர்மானத்தைத் தனது நாடு எதிர்ப்பதாகவும், தமிழ்ப் புலிகள் பயங்கரவாதிகள் என்பதையும் சான்றுபடுத்தி அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் யூலி பிசப் Foreign Minister Julie Bishop அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் நாட்டில் மீளிணக்கப்பாட்டை உருவாக்க முடியும் எனவும் இதன்மூலம் தமிழர் வாழும் பகுதிகளில் மீள்கட்டுமாணப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதுவே சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த வழியாகும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவுஸ்திரேலியாவில் வீதிகளையும் பாலங்களையும் கட்டுவதன் மூலம் இங்கு வாழும் பூர்விகக்குடிகளுக்கும் [Aboriginals] அவுஸ்திரேலியாவின் வெள்ளையினத்தவர்களுக்கும் இடையில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இதனை சிறிலங்காவில் மேற்கொள்ள முடியும் எனக் கூறுகின்றது.
போரில் கொல்லப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் நேர்மையான ரீதியில் பொறுப்பளிக்கப்பட்டு அரசியற் தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் இதுவே தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு வழியாகக் காணப்படும் எனவும் சிறிலங்காத் தமிழர்கள் உலகத்தின் முன் தமது செய்தியைத் தெளிவாக முன்வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு நிழல் வெளியுறவு அமைச்சராக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பிசப், அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு போருக்குப் பின்னான மீள்கட்டுமானப் பணிகளைப் பாராட்டியிருந்தார். சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புடன் இவர் தமிழர் பகுதிகளைப் பார்வையிட்டிருந்தார்.
சிறிலங்காவின் தமிழர் பகுதிகளில் தொடர்ந்தும் இடம்பெறும் காணாமற்போதல்கள், பாலியல் வன்முறைகள், நில அபகரிப்புக்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் தனது மனித உரிமை நிலவர அறிக்கையில் விரிவாக விளக்கியுள்ளது. சிறிலங்காவில் தொடரும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்நாட்டு அரசாங்கம் பொறுப்பளிப்பதுடன், நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான ஒரு முன்வேண்டுகோளாகவே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் உள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
எனது நூலில் திட்டமிட்ட ரீதியில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக நான் விவரித்துள்ளேன். இதற்கான காணொலிப் பதிவுகளை 'போர் தவிர்ப்பு வலயம்: சிறிலங்காவின் கொலை வலயங்கள்' என்கின்ற காணொலியில் காணமுடியும்.
எமது சார்பாக சிறிலங்கா தொடர்பில் முன்னெடுக்கப்படும் நீதியற்ற நடவடிக்கையை எமது வெளியுறவு அமைச்சரால் மட்டுமே விளங்கப்படுத்த முடியும். அவுஸ்திரேலியர்கள் இந்தக் காணொலியை பார்ப்பதன் மூலம் இதிலுள்ள சாட்சியங்களைக் கொண்டு நல்லதொரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.
*Gordon Weiss is the author of The Cage: The Fight for Sri Lanka and the Last Days of the Tamil Tigers, and an adjunct professor at Griffith University. He was the UN spokesman in Sri Lanka during the final three years of the war.
No comments:
Post a Comment