சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்கின்ற போதிலும், தமிழ்நாட்டு அகதிமுகாங்களில் குறைந்தது 120,000 ஈழத் தமிழ் அகதிகள் வாழ்வதாக PUCL சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு இந்தியாவின் தேசிய ஆங்கில நாளிதழ்களில் ஒன்றான Hindustan Times வெளியிட்டுள்ள Paramita Ghosh எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
அக்கட்டுரையின் விபரமாவது:
"நான் இப்போது எனது முகாமுக்குச் செல்ல வேண்டும்" என எம்முடன் கருணா கலந்துரையாடி ஒரு மணித்தியாலத்தின் பின் தெரிவித்தார். ஏனெனில் அவர் வேலைக்காக வெளியில் வந்திருந்தார். "நான் இன்னமும் தாமதமாகி முகாமுக்குச் சென்றால் அங்கு கண்காணிப்பில் ஈடுபடுபவர்கள் ஏன் இவ்வளவு தாமதம் என என்னிடம் வினவுவார்கள்" என கருணா எம்மிடம் கூறினார்.
இவரிடம் தகவல்களைப் பெற்ற பின்னர் நாங்கள் தெருவொன்றிலிருந்த பிறிதொரு வீட்டை அடைந்தோம். முன்னர் ஒரு தடவை அகதி முகாமொன்றில் நேர்காணலை மேற்கொள்ள முயற்சித்த போது அதற்கு தடைவிதிக்கப்பட்டதால், இம்முறையாவது இவர்களிடம் நேர்காணலை மேற்கொள்ள வேண்டும் என நாம் தீர்மானித்தோம். இதனால் நாம் எம்மால் முடிந்தளவு மிகவேகமாகத் தகவல்களைப் பெறவேண்டியிருந்தது.
2009ல் சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த போது வேதா என்கின்ற ஈழத்தமிழ்ப் பெண் கிளிநொச்சியிலிருந்து இராமேஸ்வரத்திற்கு படகு மூலம் வந்திருந்தார். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 100 சாதாரண அகதிகள் முகாங்களும் மூன்று சிறப்பு அகதி முகாங்களும் காணப்படுகின்றன. இவர்கள் அனைவரும் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாக, 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அகதிகளின் உரிமைகளுக்காகப் போராடிவரும் மக்கள் உரிமைக் கழகம் People’s Union of Civil Liberties - PUCL என்கின்ற அமைப்பு தெரிவித்தது.
வேதாவை நாம் சந்தித்த போது அவருடன் பிறிதொரு ஈழத்தமிழ் அகதி ஒருவரும் இருந்தார். இவரை நாம் ஒளிப்படம் எடுக்க முடிந்தாலும் அவரது அடையாளங் காட்ட முடியாது. முகாமுக்குள் வைத்து எவரையும் நேர்காண முடியவில்லை. ஏனெனில் தமிழ்நாட்டு காவற்துறையினர் தொடர்ந்தும் அகதிகள் மீது கண்காணிப்பை மேற்கொண்டிருந்தனர். தான் பெற்றுக் கொண்ட வடுக்கள் தன் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ் அகதியான வேதா கூறுகிறார். தமிழ்நாட்டுக் காவற்துறையினர் தன்னை புலிச் சந்தேகநபராகப் பார்ப்பதாக வேதா கூறுகிறார்.
1990 வரை சிறிலங்காத் தமிழர்கள் இராமேஸ்வரத்தை படகு மூலம் வந்தடைந்து அவர்கள் தம்மைப் பதிவு செய்ய முடிந்தது. ஆனால் 2005லிருந்து அகதிகளின் நடவடிக்கைகள் புலனாய்வு அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட அகதிகள் இனங்காணப்படுவதற்கு இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இத்தகைய நகர்வானது இந்தியாவின் பூகோள-அரசியல் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதாவது தமிழ்ப் புலிகளுக்கு இந்தியா இராணுவப் பயிற்சிகளை வழங்கியது. ஆனால் பின்னர் 1991ல் ராஜீவ் காந்தி இந்த அமைப்பால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா ஈழத் தமிழ் அகதிகளைக் கண்காணித்து புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களுக்கு தண்டனை வழங்கத் தொடங்கியது.
சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்கின்ற போதிலும், தமிழ்நாட்டு அகதிமுகாங்களில் குறைந்தது 120,000 ஈழத் தமிழ் அகதிகள் வாழ்வதாக PUCL சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் ஈழத்தமிழர் மீதான கண்காணிப்பு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த அகதிகளில் பெரும்பாலானவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.
எவ்வித சட்ட நடவடிக்கைகளுமின்றி பல அகதிகள் சிறப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பற்றிய தகவல்கள் வெளியில் தெரியப்படுத்தப்படுவதில்லை. "எந்தவொரு தனிப்பட்ட அகதியினதோ அல்லது நாடு கடத்தப்படவேண்டியவர்களின் தகவல்கள் வெளியிடப்படக் கூடாது. அகதி அமைப்புக்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படக்கூடாது. சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளவர்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படக்கூடாது" என தமிழ்நாட்டு அரசாங்கத்தின் புனர்வாழ்வுத் திணைக்களத்தின் கைநூலொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக 'தமிழர் பாதுகாப்பு அமைப்பு' தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. 11 செயற்பாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த அமைப்பு செயற்படுகிறது. இது தனது செயற்பாடுகளின் மூலம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாக செயற்பாட்டாளரான செந்தில் கூறுகிறார். தேர்தல்களில் பங்கெடுக்காது அரசியலில் ஈடுபடுவதன் மூலம் தாம் அதிகம் சாதிக்க முடிவதாகவும், மக்களின் உணர்வுகளுக்கு அரசியற் கட்சிகள் பதிலளிப்பதற்கான அழுத்தத்தை உருவாக்குவதாகவும் ஈழத் தமிழ் அகதிகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகவும் மக்கள் போராட்ட அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரும் தமிழ்த் தேசிய விடுதலை அமைப்பின் பொதுச் செயலருமான தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.
"1990கள் வரை ஈழம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிர்ப்பாக இருந்த தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சரும் அ.இ.அ.தி.மு.க தலைவியுமான ஜெயலலிதா, 2012ல் தமிழ்நாட்டு சட்டசபையில் சிறிலங்காவுக்கு அழுத்தம் வழங்குகின்ற தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். அதாவது மகிந்த ராஜபக்ச ஒரு போர்க் குற்றவாளி என்பதையும் இவர் இனப்படுகொலையை மேற்கொண்டவர் எனவும் ஐ.நா பிரகடனம் செய்யவேண்டும் என இத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது" என தோழர் தியாகு மேலும் தெரிவித்தார்.
2014ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுவதற்கான வாக்களிப்பு மேற்கொள்ளப்பட்ட போதும் இந்தியா இதில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்தது. இதன் விளைவை இடம்பெறவுள்ள தேர்தலில் தற்போதைய இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆளும் கூட்டணி பெற்றுக்கொள்ளும். "காங்கிரசின் எதிர்க்கட்சிகள் எந்தக் குதிரையில் சவாரி செய்வதற்கும் தயாராகவுள்ளன. இவை பாரதீய ஜனதாக் கட்சிக் குதிரையிலும் சவாரி செய்யும்" என தி.மு.க வுக்கு எதிரான ஒரு உள்ளுர் வைத்தியரான பாலகிருஸ்ணன் தெரிவித்தார். அகதிகள் தொடர்பில் எந்தவொரு கட்சிகளும் போதியளவு அக்கறை எடுக்கவில்லை என்பது பாலகிருஸ்ணனின் கருத்தாகும்.
இந்தியக் குடிமக்கள் போன்று பாகிஸ்தானிய இந்து அகதிகளும் சமஉரிமைகள் பெறவேண்டும் என இந்தியாவின் பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இவ்வாரம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழ் அகதிகள் தொடர்பாக எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. 1950 தொடக்கம் 1987 வரை இந்தியாவில் பிறந்த திபேத்தியர்களுக்கு இவ்வாண்டுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமை முதலாவது தடவையாக வழங்கப்படும் என கர்நாடக நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது. ஆனால் இத்திபேத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 'சிறப்புச் சலுகைகள்' கூட ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படாதது ஏன் என தகவற் தொழினுட்பவாளரான இளங்கோவன் கேள்வியெழுப்பியுள்ளார். திபெத்தியர்கள் இந்தியாவின் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்களைச் செய்கின்ற போதிலும் இவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் அகதிகள் தொடர்பில் கரிசனையுள்ள சென்னை வாசி ஒருவர் தெரிவித்தார்.
கும்மிடிபூண்டி அகதிகள் முகாமில் பணியாற்றுவதற்கு இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். இவர் தனது பெயரை வெளிப்படுத்த மறுத்துவிட்டார். இங்கு இவ்விரு நிறுவனங்களும் பணிபுரிவதற்கான அனுமதி வாயளவிலேயே வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனால் இவர்கள் எந்தநேரமும் அங்கிருந்து வெளியேற்றப்படலாம் என்பது முக்கிய தகவலாகும். "நான் அந்த முகாம் அகதிகளை அணுகியபோது அங்கு கியூப் பிரிவு காவற்துறை உறுப்பினர் ஒருவர் குறிப்புக்கள் எடுத்துக்கொண்டிருந்தார். 2008ல் அகதிகள் ஒரு வங்கியைக் கொள்ளையடித்ததாகக் கூறப்பட்டது. 2011ல், மதுரையில் ATM பணமோசடியில் அகதிகள் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் உண்மையில் உள்ளுர் தமிழர்களும் கியூப் பிரிவினருமே இதில் ஈடுபடுத்தப்பட்டனர்" என அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர் தெரிவித்தார்.
எடுத்துக்காட்டாக, வேதா என்கின்ற தமிழ் அகதி ஏதேனும் தவறு செய்வதாகச் சந்தேகிக்கப்பட்டால், தற்போது யாழப்பாணத்திலிருந்து இவரிடம் வந்திருக்கும் 21 வயதான வேதாவின் மைத்துனர் தமிழ்நாட்டிலுள்ள இரண்டு சிறப்பு முகாங்களில் ஒன்றுக்கு அனுப்பப்படலாம். இவர்கள் பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டே இந்த முகாங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், இதற்கான சாட்சியங்கள் இருப்பதில்லை எனவும், இவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வருவதால் இவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என கியூப் பிரிவு விரும்புவதாகவும் இவர்கள் சிறிலங்காவில் துப்பாக்கி ரவைகளால் மிக வேகமாக இறந்தார்கள் எனவும் ஆனால் இங்கே அதாவது இந்திய முகாங்களில் இவர்கள் தினம் தினம் சாவதாகவும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான அங்கயற்கண்ணி சுட்டிக்காட்டினார்.
ஜெனீவாவின் 1951 அகதிகள் உரிமைகள் தொடர்பான சாசனத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என Sri Lanka: Hiding the Elephant என்கின்ற நூலின் ஆசிரியரான பேராசிரியர் இராமு மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார். இவர் அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சாட்சியமளிப்பதற்கான ஒரு சுயாதீன கண்காணிப்பாளராகக் கலந்து கொண்டார். இடைக்கால குடியுரிமை தொடர்பாக ஆலோசனை வழங்குகின்ற PN Bhagwati ஆணைக்குழுவால் வரையப்பட்ட அகதிகள் தொடர்பான மாதிரிச் சட்டத்தையும் இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் இந்தச் சட்டவரைபானது 2006லிருந்து நாடாளுமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் பேராசிரியர் இராமு மணிவண்ணன் குறிப்பிட்டார்.
ஏனைய நாடுகளில் தமிழ் அகதிகள் அவர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பட்டு அவர்களின் அகதி நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்கின்றனர். கனடாவில் இரண்டு லட்சம் வரையான அகதிகள் அவர்களுக்கான அகதிகள் உரிமைகளுடன் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்வதாக தமிழரான கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். இதேதொகை ஈழத் தமிழர்கள் இந்தியாவில் அகதி முகாங்களில் வாழ்கின்றனர். இவர்கள் எவ்வித வரையறையுமின்றி அகதிகள் என்ற வரையறை வழங்கப்படாது வெளிநாட்டவர்களின் சட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களாக வாழ்கின்றனர்.
"புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் தாங்கள் இந்தியப் போரை வென்றுவிட்டதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். இந்தியா சிறிலங்கா கூறியதை ஏற்றுக் கொண்டுள்ளது போல் செயற்படுகிறது. அதாவது சிறிலங்கா விவகாரம் தொடர்பில் இந்தியா அமைதி பேணுவதன் மூலம் சிறிலங்காவின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் தலைமையில் ஐ.நாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை தான் ஏற்றுக் கொள்ளாததன் மூலம் தென்னாசியாவில் தான் ஒரு சக்தியாக நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது என்பதை இந்தியா இன்னமும் உணரவில்லை" என பேராசிரியர் மணிவண்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் உணர்வலைகள் மூலம் இந்தியா தனது பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் நாடாக உள்ளது. ஆனால் தற்போது பேரவையின் தீர்மான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததன் மூலம் இந்தியாவின் பங்களிப்பு கேள்விக்குறியாகிறது. இந்த விடயத்தில் இந்தியா புற்றினைப் போன்று செயற்பட முடியுமா அல்லது செயற்படவேண்டுமா? இதற்குப் பதில் 'இல்லை' என்பது தான். அதாவது இந்தியா சிறிலங்காவின் இறையாண்மையைக் கருத்திற் கொண்டே வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறுகிறது. "அனைத்துலக அரங்கில் தென்னாபிரிக்கா தனிமைப்படுத்தப்பட்டது போன்று சிறிலங்கா அரசாங்கம் தனது ஆட்சியுரிமையை இழப்பதற்கான நகர்வுகளை புலம்பெயர் சமூகம் மேற்கொண்டு வருகிறது" என தியாகு தெரிவித்தார்.
"சிறிலங்காவில் தமது வாழ்வு அச்சுறுத்தலுக்கு உட்பட்டாலும் தாம் அங்கே திரும்பிச் செல்ல வேண்டும் என்பதே அகதி முகாங்களில் வாழும் அரைவாசிப் பேரின் ஆவலாகும். தமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இவர்கள் ஐரோப்பாவில் தஞ்சம்புக விரும்புகிறார்கள்" என்கிறார் வேதா.
போர் தீவிரம் பெற்ற போது கலைத்துறை மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தார் வவுனியாவைச் சேர்ந்த முரளி. இவருக்கு தான் ஆசிரியராக வரவேண்டும் என்பதே அவாவாகும். ஆனால் போரின் விளைவால் இவர் தற்போது இந்தியாவில் அகதியாக உள்ளார். இங்கு தற்போது இவர் வாகனங்களைக் கழுவுகின்ற தொழிலைப் புரிகிறார். இவருக்கு தான் சொந்தமாகக் கடையொன்றை வைத்திருக்க வேண்டும் என்பது கனவாகும். இவர் மாதம் 15,000 இந்திய ரூபாக்களை உழைக்கிறார். இதில் அரைவாசியை சிறிலங்காவிலுள்ள தனது பெற்றோருக்கு அனுப்புகிறார். மீதிப் பணத்தை தனது வாடகை, உணவு போன்றவற்றுக்காகவும் முகாமிலுள்ள தனது மைத்துனருக்காகவும் செலவிடுகிறார். "தமிழீழம் என்பது நீண்டகாலக் கனவு. இது நிறைவேற நீண்டகாலம் எடுக்கும். ஆனால் ஒரு சொந்தக் கடையை வைத்திருப்பதென்பது குறுகிய கால நோக்காகும்" என்கிறார் முரளி.
மக்கள் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலரான வி.சுரேஷ் கூறுயதிலிருந்து:
சாதாரண அகதிகள் முகாமுக்கு சிறப்பு அகதிகள் முகாமுக்கு இடையிலான வேறுபாடு என்ன?
சாதாரண அகதிகள் முகாம் மக்களின் நகர்வுகள் மீது சில கட்டுப்பாட்டுக்களைக் கொண்டு இயங்குகின்றது. மக்கள் மூன்று விதமான காவற்துறையினரின் அனுமதியைப் பெற்ற பின்னர் வேலைக்கென முகாமை விட்டு வெளியில் செல்ல முடியும். ஆனால் சிறப்பு முகாங்களில் உள்ளவர்களுக்கு இவ்வாறு சலுகைகள் இல்லை. இவர்கள் சாதாரண முகாங்களில் வாழும் மக்களைப் போன்று நிவாரணத்தைப் பெறமுடியாது. இவர்களை உறவினர்கள் சென்று பார்வையிட முடியாது. இவர்கள் கூலி வேலைகளில் ஈடுபட முடியாது. இவர்கள் நூலகங்களுக்குச் செல்ல முடியாது. சிறப்பு முகாங்களில் உள்ளவர்கள் புலி உறுப்பினர்கள் என தமிழ்நாட்டு காவற்துறையினர் கூறுவது மிகவும் பொய்யானது. இங்கு பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதால் இந்த முகாங்களை மூடவேண்டும் என PUCL வலியுறுத்துகிறது.
முகாங்களைப் பராமரிப்பதற்கு எவ்வளவு செலவு ஏற்படுகிறது?
2013ல், பூந்தமல்லி முகாமிலுள்ளவர்களைச் சந்திப்பதற்கான அனுமதியை PUCL 2013ல் கோரிய போதும் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இவர்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்படவில்லை. இந்த முகாமில் உள்ள 10 பேர் இராணுவத்தினராலும் காவற்துறையினராலும் பலமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான செலவு அதிகம். கிட்டத்தட்ட 40 இலட்சமாகும். இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நாள்தோறும் 80 ரூபாக்கள் வழங்கப்படுகிறது. இது அவர்களின் தேவைக்கு மட்டுமேயாகும்.
இவர்கள் எவ்வளவு காலம் சிறப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட முடியும்?
இவ்வாறு சிறப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்படுபவர்கள் தொடர்பில் குற்றவியல் வழக்குகள் முன்வைக்கப்படுவதில்லை. சிலர் நீதிச்சேவையின் கட்டளையின் பிரகாரம் விடுதலை செய்யப்படும் போது இவர்களை விடுவிப்பதற்கு வெளிநாட்டவர் சட்டத்தை தமிழ்நாட்டு காவற்துறை பிரயோகிக்கும். இவ்வாறான மிகவும் பாதுகாப்புக் கூடிய சிறைச்சாலைகளில் வெளிநாட்டவர்களைத் தடுத்து வைப்பதற்கான அனுமதியை மாநில மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு வெளிநாட்டவர் சட்டம் வழங்குகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்யும் ஈழத்தமிழருக்குப் பிறக்கும் குழந்தைகள் இந்தியக் குடியுரிமையைப் பெறமுடியும். சிறிலங்காவிலிருந்து 1980களில் முதலாவது தொகுதி அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர். ஆனால் இவர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்புகுந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு தற்போதும் இந்தியக் குடியுரிமையைப் பெறவில்லை.
[Started in 1976 by socialist leader Jayaprakash Narayan, People’s Union for Civil Liberties (PUCL) is the oldest human rights body of India. V Suresh, its national general secretary, has been fighting for the rights of Tamil refugees in India’s special camps for over 20 years. Special camps are actually like concentration camps, he says.]
No comments:
Post a Comment