Friday, April 25, 2014

பாலியல் வல்லுறவை ஆயுதமாகப் பயன்படுத்திய 21 நாடுகளில் சிறிலங்காவும் – பட்டியலிட்டது ஐ.நா

போரின் போது பாலியல் வல்லுறவு மற்றும் ஏனைய பாலியல் வன்முறைகளை ஆயுதமாக கையாண்ட 21 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் இந்த அறிக்கை நேற்று நியுயோர்க்கில் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மைய மோதல்கள் மற்றும் தற்போது இடம்பெற்று வரும் மோதல்களில் பாலியல் வல்லுறவு மற்றும் ஏனைய பாலியல் வன்முறைகள் ஆயுதமாக பயனபடுத்தப்பட்ட 21 நாடுகள், இந்த அறிக்கையில் கவலைக்குரிய நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த 21 நாடுகளும், ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, என்று உலகின் பெரும்பாலான பகுதிகளை சேர்ந்தவை என்று, மோதல்களில் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐ.நா பொதுசெயலரின் சிறப்புப் பிரதிநிதி சான்னாப் ஹவா பங்குரா தெரிவித்துள்ளார்.


இந்த அறிக்கையில், போராளிக் குழுக்கள், ஆயுதக் குழுக்கள், மற்றும் அரசபடையினர் என, 34 ஆயுதக் குழுக்கள், மோதல் சூழலில் பாலியல் வல்லுறவு மற்றும் ஏனைய விதங்களிலான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டது தொடர்பான, நம்பக்கமான சந்தேகத்துக்குரியவை என்று பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில், சிறிலங்கா, அங்கோலா, பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, கம்போடியா, கினியா, லைபீரியா, லிபியா, நேபாளம், சியராலியோன், சோமாலியா, சூடான், யேமன், மத்திய ஆபிரிக்க குடியரசு, ஐவரி கோஸ்ட், கொங்கோ, மாலி, தென்சூடான், சிரியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 21 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment