இந்த விவரங்களில் காணப்படுவோர் உண்மையில் இந்தக் குற்றங்களை இழைத்தார்களா என்பது குறித்த ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டதற்கு பதிலளித்த இந்த அமைப்பைச் சேர்ந்த ஆழியன் , இது குறித்த ஆதாரங்களை தாங்கள் ஐநா போன்ற அமைப்புகளுக்குத் தரவிருப்பதாக கூறினார். ஆனால் போரில் ஈடுபடாத ராணுவத்தினரின் குடும்பத்தினர் குறித்த தரவுகளை பிரசுரித்தது குறித்து கேட்டதற்கு பதிலளித்த ஆழியன், ராணுவத்தினர் போர்முனைக்கு அனுப்பப்படும்போது, அரசு, அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து கௌரவித்து அனுப்பியது என்ற பின்னணியில் இந்தப் படையினர் போர்முனையில் என்ன குற்றங்களை இழைத்தார்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்றே கூறமுடியும், எனவே அந்தப் படங்களைப் பிரசுரித்ததில் தவறில்லை என்றார்.
அது போல, அவர்களது அந்தரங்க உரிமைகளும் இதனால் மீறப்பட்டதாகக் கூறுவது தவறு, ஏனென்றால் சிங்கள படையினர் வன்னியில் போர் நடந்த போது இழைத்த மனித உரிமை மீறல்களை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர் என்றார்
அவர்.
அண்மையில் இலங்கை அரசாங்கம் சில தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவை என்று கூறி தடை செய்து அறிவித்திருந்தது. அதற்கான எதிர்வினை அல்லது பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தப் படங்களை வெளிநாட்டில் இருக்கும் சில தமிழ் அமைப்புக்கள் மற்றும் அதைச் சார்ந்தவர்கள், இலங்கை ராணுவத்தினர் தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை இலங்கை பாதுபாப்புத் துறையின் இணையதளங்களில் இருந்து எடுத்து வெளியிட்டுள்ளார்கள் என்று பிபிசி தமிழோசையிடம் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
இது குறித்து தாங்கள் கவலைப்படவில்லை என்றும் இதை ஒரு நகைச்சுவையாகவே தாங்கள் கருதுவதாகவும் கூறினார் அவர். இலங்கை அரசின் பாதுகாப்புத்துறையின் இணையதளத்திலுள்ள எந்தத் தகவலும் இரகசியமானது அல்ல என்றும் பொதுமக்களின் பார்வைக்காகவே அவை வெளிப்படையாக வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த ருவான் வணிகசூரிய, "விளம்பரத்துக்காகத்தான் நாங்கள் எங்கள் படையினரின் படங்களை இணையதளத்தில் வெளியிடுகிறோம். எனவே எமது விளம்பர நடவடிக்கைகளுக்கு வேறு யாராவது உதவ முன்வந்தால் அது எங்களுக்கு மகிழ்ச்சிதானே. அதைப்பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? இனிமேல் அவர்களுக்கு எம்மைக் குறித்துப் பேச வேறு விஷயங்கள் எதுவும் இல்லை என்னும் அவர்களின் சிந்தனை வறட்சியைத்தான் இந்த செயல் காட்டுகிறது" என்றும் கூறினார்.
No comments:
Post a Comment