போரின்
இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள்
தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு
மனுக்கள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, அத்தகைய சம்பவங்கள் இடம்பெற்ற
சூழல் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணை
ஆரம்பமாகியுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள்
அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள், சிறிலங்கா அரசாங்கத்தின்
பாதுகாப்பு உத்தரவாதத்தை அடுத்து, சிறிலங்காப் படையினரிடம் சரணடந்தனர்.
முல்லைத்தீவு
வட்டுவாகல் பகுதியில் அவர்கள் சரணடைந்ததை பல்லாயிரக்கணக்கான மக்கள்
நேரடியாகக் கண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவ்வாறு
சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது, எங்கே வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற
தகவல்கள் இன்னும் தெரியவில்லை என சரணடைந்தவர்களின் குடும்பத்தினர்
தெரிவித்துள்ளனர்.
காணாமல்போனவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்கள்
சிலர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் 14 ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல்
செய்திருக்கின்றனர்.
அவற்றில் முதல் ஐந்து வழக்குகள் தொடர்பான
நிகழ்வுகள் பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல்
நீதிமன்றம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
முதலாவது
வழக்கின் நிகழ்வு பற்றிய விசாரணையில் சாட்சியமளித்த பெண் ஒருவர், தனது
மகளும் மருமகனும் அவர்களின் 4 மற்றும் 6 வயதான இரண்டு பிள்ளைகளும்
சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த பின்னர், அவர்கள் அனைவரும் இப்போது காணாமல்
போயிருப்பதாக கூறியுள்ளார்.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக
போர் முடிவடைந்து ஒரு ஆண்டுக்குப் பின்னரே, 2010 ஆம் ஆண்டிலேயே
பதிவாகியுள்ளதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், போரின் முடிவில்
எவரும் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக தகவல்கள் இல்லை என்றும் அரச
தரப்பினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து,
நீதிமன்றில் சாட்சியமளித்த குறித்த பெண், இறுதிப் போரின் போது தான்
காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தேவிபுரம் வைத்தியசாலை எறிகணை
தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும், பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து
முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்த போது போர் முடிவுக்கு வந்ததாகவும்
கூறினார்.
அப்போது, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருந்த
நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தவர்களுக்கு உரிய
பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் சட்ட ரீதியான மன்னிப்பும் வழங்கப்படும்
என்றும் உத்தரவாதமளித்து, அவர்களை சரணடையுமாறு ஒலிபெருக்கிகளில்
அறிவிக்கப்பட்டதையடுத்தே, தனது மகளின் குடும்பம் முழுமையாக சிறிலங்கா
படையினரிடம் சரணடைந்தாகவும் குறிப்பிட்டார்.
அவர்கள் சரணடைந்ததைத்
தான் நேரில் கண்டதாகவும், அதேபோன்று தனக்குத் தெரிந்த பலர் சிறிலங்கா
படையினரிடம் சரணடைந்ததையடுத்து, அவர்கள் இராணுவ வாகனங்களில் ஏற்றிச்
செல்லப்பட்டதாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
அத்துடன்
போர் முடிவடைந்த பின்னர், காணாமல் போனவர்கள் தொடர்பாக அனைத்துலக
செஞ்சிலுவைக் குழு, காவல்துறை உள்ளிட்ட பல தரப்பினரிடமும் தாம்
முறையிட்டிருந்ததாகவும், வட்டுவாகலில் இருந்து ஏனைய இடம்பெயர்ந்த மக்களுடன்
தான் செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமில் ஒரு ஆண்டு தங்கவைக்கப்பட்டிருந்த
படியால், காணாமல்போனவர்கள் பற்றி உடனடியாக முறையிட முடியவில்லை என்றும்
அவர் சாட்சியமளித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பான
விசாரணைகளை மே மாதம் 7ம், 8 ம் திகதிகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்
எம்.கணேசராஜா ஒத்திவைத்துள்ளார்.
மனுதரார்கள் சார்பில் கே.எஸ்.ரட்னவேல், அன்டன் புனிதநாயகம், பரஞ்சோதி ஆகியோர் வாதிட்டனர்.
வழிமூலம் - பிபிசி |
No comments:
Post a Comment