ஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல்.
இந்த மம்மி இவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் பனியில் உறைந்த இடத்தை 'ஊட்ஸல் ஆல்ப்ஸ்' என்று அழைப்பார்கள். அதைக் காரணமாக வைத்து அந்த மம்மி மனிதனுக்கும் 'ஊட்சி' என விஞ்ஞானிகள் பெயர் வைத்தனர். தோளில் 6 அடி வில்லும் 14 அம்புகளும், தாமிர கோடாரியுடன், கரடி தோலினால் ஆன உடைகளுடன் இறந்து போயிருந்த ஊட்சி இறப்பதற்கு முன் சாப்பிட்டது என்ன தெரியுமா? சிவப்பு மானின் இறைச்சி. அவரின் உடலில் 56 இடங்களில் பச்சை குத்தியிருந்ததையும், அவருக்கு பல்வேறு எலும்புப்பிரச்சினைகள் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளார்கள். ஊட்சி பின்னால் இருந்து எய்யப்பட்ட அம்பினால் இறந்ததையும், அப்போது அவருக்கு வயது 45 என்பதையுமே கண்டுபிடித்துவிட்டார்கள். இதைவிட கூடுதல் தகவல் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அவர் மனவேதனையுடன் இருந்ததையும் விரல் நகங்களில் உள்ள ரேகைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்யூட்டர் மூலம் ஊட்சியின் முழு உருவத்தையும் வடிவமைத்து அவரைப்போன்ற மெழுகுச்சிலையையும் உருவாக்கியுள்ளனர்.
இதையெல்லாம் கண்டு பிடித்துள்ள விஞ்ஞானிகள் மற்றொன்றையும் செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் தொடர்ச்சியான முயற்சியால் ஊட்சியின் குரல் தடத்தை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் பனி மனிதனின் குரலின் மூலம் உலகின் எந்த மொழியையைம் பேச வைக்க முடியும் என்கின்றனர் அழுத்தமாக.
பொதுவாக மம்மிக்கள் கிடைத்தால் பல்வேறு ஸ்கேனிங்களை பயன்படுத்தி ஏதேனும் வித்தியாசமாக கண்டுபிடிப்பது வழக்கம். இம்முறை ஸ்கேனிங் மூலம் ஊட்சியின் குரல்வளை மற்றும் குரல் தடப்பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் மூலம் எப்படி ஊட்சியின் குரல் ஒலித்திருக்கும் என ஆடியோவினை உருவாக்கி விட்டனர். அதாவது ஊட்சி குரல் இப்படித்தான் இருந்திருக்கும் என ஒரு டெமோ ரெடி.. அது நம் தமிழைப் போன்றே ஒலிக்கிறது.
"ஆ, ஈ, உ ஊ" ஆகிய வார்த்தைகளை உச்சரிக்கும் போதுதான் நமது நுரையிரலும் குரல்வளையும் மூச்சுகுழலும் ஒன்றாக வேலை செய்கிறது. அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் காற்றினை நுரையிரல் வழங்குகிறது. அப்படி இந்த மூன்றின் உதவியுடன் பிறக்கும் சொற்களை ஊட்சியின் ஓசையோடு ஒலிக்கும் ஆடியோ பைல் வெளியாகியுள்ளது.
source; vikatan.com
No comments:
Post a Comment