தமிழர் தாயகப் பகுதி எங்கும் மாவீரர் தினத்தை முன்னிட்டு படையினர் மக்கள் மீது கடுமையாக நடந்துகொண்ட அதேவேளை, பலத்த கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்துவிட்டதாகக் சர்வதேசத்தை ஏமாற்றிவரும் சிறீலங்கா அரசு, மக்களை ஆயுத முனையில் அடக்கிவைத்திருக்கின்றது என்பதை கடந்த வாரம் மாவீரர் தினத்தின்போது நிரூபித்துள்ளது. தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர் தினத்தின் போது ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் எதனையும் நடத்தக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுத்
திருந்தது. பெருமளவான ஆலயங்களைச் சூழ படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.குடாநாட்டின் பல இடங்களில் ஆலயங்களில் பூஜைகளை நிறுத்துமாறும் பொது மக்களை ஆலயங்களுக்குச் செல்லக்கூடாது என்றும் படையினர் எச்சரித்திருந்தமை தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, படையினரின் இத்தகைய செயலை தாம் வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு படையினர் எச்சரிக்கை விடுத்திருப்பது குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களை ஜனாதிபதிக்கு தெரிவிக்க இருக்கின்றேன். படையினரின் இவ்வாறான போக்கு மக்கள் மத்தியில் அச்ச நிலையைத் தோற்றுவிப்பதாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது எய்தவனிடமே அம்பைப் பற்றி முறையிடுவதாக உள்ளது,
கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை தவறு என எப்படிக் கூறமுடியும் என தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திடம் கேள்வி எழுப்பிய மகிந்த ராஜபக்ச இந்த விடயத்தில் எப்படியான பதில் அழித்திருப்பார் என்பது நாம் காலங்காலமாய் சிங்களத்திடம் படித்த அனுபவப் பாடங்கள். இதேவேளை, மாவீரர் நாள் அன்று யாழ்குடா நாட்டின் வல்வெட்டித்துறைப் பகுதி வழக்கத்துக்கு மாறாக இராணுவத்தின் தொடர் சுற்றுக்காவல் நடவடிக்கைகளால் ஒருவித அச்ச நிலைக்குள்ளாக்கப்பட்டிருந்தது. வீதிச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன.
பொதுமக்களின் நடமாட்டம் பெருமளவுக்குத் தடைசெய்யப்பட்டதைப் போன்று மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருந்தனர். அத்துடன் வல்வெட்டித்துறைப் பகுதியில் அமைந்திருக்கும் கோயில்களும் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.இந்நிலையில், கடந்த நவம்பர் 27ம் நாள், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளையட்டிய செய்திகளை வெளியிட்டு யாழ்ப்பாண மக்களைக் குழப்ப வேண்டாம் என்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் மூன்று பத்திரிகைகளுக்கும் தேசவிரோத சக்திகளால் அனாமதேய மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் 26ம் நாள் இரவு உதயன் அலுவலகத்திற்கு உந்துருளிகளில் வந்த இருவர் பாதுகாப்பு ஊழியரிடம் இதுதொடர்பான அநாமதேய மிரட்டல் கடிதத்தைக் கொடுத்து விட்டுச்சென்றனர். அதில், ‘தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். இந்த நிலையைக் குழப்ப நீங்கள் முயற்சி எடுக்க வேண்டாம்.
சுயாதீனமாக மக்களுக்குச் செய்திகொடுக்கும் நீங்கள், இப்போது
இருக்கும் சமாதானச் சூழ்நிலையைக் குழப்பும் வகையில் இந்த முறை மாவீரர் நாளுக்கு இயக்கச் செய்தி எதையும் போட வேண்டாம். அப்படிப் போட்டால் உங்கள் அலுவலகம் கொளுத்தப்படும்’ என்று கடும் தொனியில் மிரட்டல் தெரிவிக்கப்பட்டிருந்தது. எழுத்துப் பிழைகளுடனும் வசனப் பிழைகளுடனும் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதம் குடாநாட்டில் வெளிவரும் உதயன் தவிர்ந்த வேறு இரு பத்திரிகைகளின் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. ‘சந்தோசமாக வாழுகின்ற யாழ். குடாநாட்டு மக்கள்’ என்ற பெயரிலேயே இந்தக் மிரட்டல் அனுப்பப்பட்டிருந்தது.
இவர்களின் மிரட்டல் கடிதத்தை தினக்குரல் நாளிதழ் அப்படியே பிரசுரித்திருந்தது. இதனையடுத்து மறுநாள் அதிகாலை வான் ஒன்றில் கட்டைகள், கத்திகள், வாள்கள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களுடன் வந்திறங்கிய ஆயுததாரிகளால் சில மணி நேரம் யாழ். தினக்குரல் அலுவலகம் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பில் நிறுவனத்தினர் காவல்
துறையினருக்கு அறிவித்த நிலையில் ஆயுததாரிகள் அவ்விடத்தை விட்டு பின்வாங்கினர்.
இதேவேளை குடாநாட்டிலிருந்து வெளியாகும் குறிப்பிட்ட மூன்று நாளிதழ்களின் விநியோகப் பிரிவினர் மாவீரர் தினத்தன்றும் மறுநாளும் வீதிகளில் மறிக்கப்பட்டு, மாவீரர் நாள் தொடர்பான செய்திகளை வெளியிட்டார்களா என நாளிதழ்கள் சோதனையிடப்பட்டதோடு அவர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம், மாவீரர் நாள் ஆகியவற்றை முன்னிட்டு யாழ்குடா மற்றும் மட்டக்களப்பு, திரு
கோணமலை, வவுனியா உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதி எங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. படையினர் பல இடங்களில் வீதிச் சோதனை, சுற்றுக்
காவல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இவற்றையெல்லாம் மீறி தமிழீழ தேசத்தின் விடிவுக்
காகவும், எதிர்கால சந்ததியின் வாழ்வுக்காகவும் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு, உலகெங்கும் வாழும் ஈழத்தமிழினம் ஈகச் சுடரேற்றி வணக்
கம் செலுத்தும் உயரிய நாளான மாவீரர் தினத்தின் போது, எமது தாயகமண் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கள் போடப்பட்டிருந்த நிலையிலும் தாயக மக்களால் எம் மண்ணின் மைந்தர்களுக்கு ஈகச் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
இது தாயகத்தை ஆக்கிரமித்து, மாவீரர் துயிலுமில்லங்களை உழுதெறிந்து உடைத்தாலும், எம் மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள தாயக இலட்சியக் கனவையும், அக்கனவை நெஞ்சிலே சுமந்து உயிரீந்த மாவீரரின் நினைவையும் எவராலும் அழிக்கமுடியாது என்பதை பறைசாற்றி நிற்கின்றது.
இதேவேளை, பி.பி.சி. தமிழோசை வானொலிக்கு குடாநாட்டில் இருந்து தனது உள்ளக்கிடக்கையை வெளியிட்ட ஈழத் தாயருவர், எதிரியானவன் மாவீரர் நாளை நாம் நினைவுகூருவதை எவ்வாறு தடுத்தாலும், நாம் எமது வீடுகளில் மாவீரச்செல்வங்களுக்கு தீபம் ஏற்றுவதைத் தடுக்கமுடியாது என உணர்வுபூர்வமாகக் கூறியிருந்தார். இது அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இதேவேளை, தென் தமிழீழமான மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் மாவீரர் தினத்தன்று மாலை 6.15 மணி அளவில் ‘கார்த்திகை 27....’ மற்றும் ‘சுட்டும் விரலால் சுட்டிக்காட்டு....’ ஆகிய தாயகப் பாடல்கள் சுமார் 10 நிமிடங்கள் வரை ஒலித்ததாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவித்தன.
வழமையாக மாலை 6 மணிக்கு மணிக்கூட்டு கோபுரத்தில் வானொலியில் இடம்பெறும் பாடல்கள் ஒலிபரப்பாகுவதால் அருகில் இருந்த சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த காவல்துறையினர் அதனை பொருட்படுத்தவில்லையெனவும் - அதன்பின் நகரில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர், மக்கள் அப்பகுதியில் ஒன்றுகூடுவதைப் பார்த்து சந்தேகம்கொண்டு விசாரித்தபோதே, ஒலிபரப்பாகுவது புலிகளின் பாடல் என தெரியவந்ததாகவும் - தெரிவிக்கப்படுகின்றது. அதன்பின் படையினரும் காவல்துறையினரும் சென்று பாடலை நிறுத்தியதோடு, ஆத்திரத்தில் அருகில் இருந்த கடை உரிமையாளர்களிடம் கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும் இச்சம்பவம் தொடர்பில் வெளியில் யாரிடமும் கூறவேண்டாம் எனவும் அதிரடிப்படையினர் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மர்ம நபர்களினால் ஒலிபரப்பப்பட்ட இந்தப் பாடல்களில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயர் இடம்பெறாமையினால் அதை அருகில் இருந்த காவல்துறையினர் தமிழ் தெரிந்தும் இனங்காண முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மணிக்கூட்டுக் கோபுரத்தின் ஒலிபெருக்கிப் பராமரிப்பாளரை காவல்துறையினர் தீவிர விசாரணைக்குட்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது., இதேவேளை, யாழ்.குடாநாடு உள்ளிட்ட தாயகத்தின் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்ததினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. இவைதொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.தடைமேல் தடைபோட்டாலும் எமது மக்களின் உள்ளமெனும் கோவிலில் தீபங்கள் ஏற்றப்படுவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது.
நன்றி ஈழமுசு 03/12/2010
No comments:
Post a Comment