[ சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011, 02:53.55 AM GMT ]
இலங்கைக்கான தமது விஜயத்தின் போது இறுதிக்கட்ட மோதல்களின் போதான போர்க் குற்றங்கள் குறித்து பேசப்படவில்லையெனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு, இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை
மீறல்கள் குறித்து அக்கறை செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது
தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் 7 பேர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவில் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே குழுவின் தலைவர் ஜீன் லம்பேர்ட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மீறல்கள் குறித்து அக்கறை செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வவுனியா, மெனிக்பாம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தது.
தமது விஜயத்தின் இறுதியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அக்குழுவின் தலைவர் ஜீன் லம்பேர்ட் தொடர்ந்து தெரிவிக்கையில்;எமது இந்த விஜயத்தின் போது நாம் பல சந்திப்புகளை மேற்கொண்டிருந்தோம்.
அமைச்சர்கள், சபாநாயகர், ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தோம். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சி அரசசார்பற்ற நிறுவனங்கள், ஐ.நா. அமைப்புகளுடனும் சந்திப்புகள் இடம்பெற்றன.
எமது இவ்விஜயத்தின் போதான அவதானங்கள் குறித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஆராயப்படும். அதேவேளை தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மற்றும் அவசரகாலச் சட்டம் குறித்து நாம் அக்கறை கொண்டுள்ளோம்.
பாராளுமன்றத்திற்கான எமது விஜயத்தின் போது அவசரகாலச் சட்டம் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த விவாதத்தினை எம்மால் அவதானிக்க முடிந்தது.
தடுத்து வைத்திருக்கும் உரிமை அல்லது அதிகாரம் ஆகியவற்றின் கீழ் பொலிஸார் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம்.
சில பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைளை எம்மால் காணமுடிந்தது. மெச்சத்தக்க வகையில் அரசு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் மோதல்கள் முடிவுற்ற இக்காலப்பகுதியில் சாதாரண நிலைமை மீளத் திரும்புவதில் சில சவால்கள் உண்டு.
மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ள அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் துரித மீள்குடியேற்றத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றது.
அத்துடன் மோதல் நடைபெற்ற பகுதிகளில் மேலதிக இராணுவப் பிரசன்னம் குறித்து நாம் அக்கறை கொண்டுள்ளோம். இவ்விடயங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளருடன் பேசப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கான எமது விஜயத்தின் போது அரச அதிபர், ஆளுநர் ஆகிய தரப்புகளை நாம் சந்தித்தோம். அங்கு மூன்று திட்டங்கள் குறித்துப் பேசப்பட்டது. கண்ணிவெடி அகற்றல், கண்ணிவெடி குறித்த விழிப்புணர்வு மற்றும் இடைக்கால புகலிடங்கள் குறித்தே அங்கு பேசப்பட்டது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கைக்கான விஜயத்தின்போது போர்க்குற்றங்கள் மற்றும் பதிலளிக்கும் கடப்பாடு ஆகிய விடயங்கள் குறித்து பேசப்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜீன் லம்பேர்ட்;
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தே நாம் அறிய முற்பட்டுள்ளோம்.
எமது விஜயத்தில் போர்க்குற்றங்கள் குறித்து பேசப்படவில்லை.ஆனால், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து நாம் கரிசனை கொண்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
மேலும் கொழும்புக்கான விஜயத்தை இக்குழு மேற்கொண்டிருக்கும் நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டமை மற்றும் இலங்கை விடயம் குறித்த ஐ.நா.சந்திப்பு, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை குறித்த ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்;
எமது விஜயத்திற்கும் விடுதலைப் புலிகளின் அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்தமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
அத்துடன் ஐ.நா.வின் சந்திப்புகளுக்கும் எமக்கும் எதுவிதத் தொடர்பும் இல்லை. ஐ.நா.பிறிதொரு அமைப்பு. அவற்றின் செயற்பாடுகள் அதன் கட்டமைப்புக்கு உட்பட்டவை.
அதேவேளை, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தியமைக்குக் காரணம் நாட்டில் நல்லாட்சி நிலவுவதற்காகவாகும். அரசாங்கம் விரும்பினால் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்குரிய முயற்சியை மேற்கொள்ளலாம். ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படவேண்டிய விடயமாகும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment